பட்டுக்கோட்டை அழகிரி

பட்டுக்கோட்டை அழகிரி திராவிட இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரும், கவிஞருமாவார்.

இளமைக்காலம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன் - கண்ணம்மா தம்பதியருக்கு 23.06.1900 அன்று பிறந்தவர். சிறுவயதில் தந்தை இறந்து விட்டதால் தாய் வழிப் பாட்டனாரின் ஊரான மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள வாவிடைமருதூர் கிராமத்தில் வளர்ந்தார். பத்தாம் வகுப்போடு பள்ளி படிப்பை முடித்துக் கொண்டவர் முதலாம் உலகப் போர் காலத்தில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.

அரசியல்

கூட்டுறவு சங்கமொன்றில் எழுத்தராகச் சேர்ந்தார். ரிவோல்ட் என்னும் பத்திரிக்கையின் ஆசிரியர்களாக இருந்த பெரியார், ராமநாதன், குத்தூசி குருசாமி ஆகியோர்களில் குத்தூசி குருசாமியை ஒரு நாளேடு தரக்குறைவாக எழுதியது. இதனால் கோபமடைந்த அழகிரி அந்த நாளேட்டின் அலுவலகம் சென்று அந்த ஆசிரியரை அடித்துவிட்டு திரும்பினார்.

அழகிரிதான் முதன் முதலில் பட்டுக்கோட்டையில் சுயமரியாதை சங்கம் தொடங்கி உறுப்பினர் சேர்த்து சுயமரியாதை பிரச்சாரம் செய்தார். அதன் பிறகே தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்ட போது ராமாமிர்தம் அம்மையாருடன் சேர்ந்து தஞ்சை முதல் சென்னைவரை நடைப்பயண இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் செய்தார்.

திருவாரூரில் சுயமரியாதை கூட்டத்தில் கனல் பேச்சுக்களைப் பேசிக்கொண்டிருந்த போது காசநோயின் தாக்கம் மயங்கி கீழே விழுந்தார். பேச்சைக் கேட்ட கூட்டம் ஓடி போய் தூக்கியது. தூக்கிய கூட்டத்தில் ஒரு சிறுவனும் உண்டு. அந்தச் சிறுவன் காசநோயாளியான நீங்க ஆவேசமாகப் பேசலாமா என்று கேட்க. என்னை விட இந்த நாடு நோயாளியாக உள்ளது முதலில் அதைச் சரிப்படுத்தத்தான் பேசுகிறேன் என்று அந்த சிறுவனிடம் பதில் சொன்னார். அன்று முதல் அழகிரியின் பேச்சுக்களை விடாமல் கேட்கத்தொடங்கினார் அந்தச் சிறுவன். அந்தச் சிறுவன்தான் மு. கருணாநிதி.

மரணம்

பட்டுக்கோட்டை அழகிரி காசநோயின் கொடிய தாக்கத்தால் 28.03.1949 அன்று மரணமடைந்து விட்டார்.

நினைவு போற்றல்

அஞ்சாநெஞ்சன் அழகிரியின்பால் தான் கொண்ட அன்பால் ஈர்க்கப்பட்ட பேச்சால் தான் வளர்ந்து நிற்கிறேன் என்ற கலைஞர் மு. கருணாநிதி. தன் மகனுக்கு மு. க. அழகிரி என்று பெயர் சூட்டினார். மேலும் எம்.ஜி.ஆர் பிரிந்து சென்ற காலத்தில் தான் முதல்வாரான போது தன் சொந்தச் செலவில் பல்வேறு பிரச்சனைகளுக்கிடையில் அழகிரியின் சிலையைப் பட்டுக்கோட்டையில் நிறுவினார். அதன் பிறகு கடந்த 2007ஆம் ஆண்டு பட்டுக்கோட்டையில் அவர் வாழ்ந்த இடத்தில் நினைவு மணிமண்டபம் கட்ட நிதியும் ஒதுக்கி உள்ளார்.[1]

எம்.ஜி.ஆர் முதல்வராக வந்த போது அவரும் அழகிரிக்கு மரியாதை செய்யும் விதமாக பட்டுக்கோட்டை அழகிரி போக்குவரத்து கழகம் தொடங்கினார்.

அழகிரி இறந்தபோது தந்தை பெரியார் வெளியிட்ட விடுதலை அறிக்கையில் நண்பர் அழகிரிசாமி முடிவு எய்தியது பற்றி நான் மிகவும் துக்கப்படுகிறேன். 30 ஆண்டு கால நண்பரும் மனப்பூர்வமாக நிபந்தனை இன்றி பின்பற்றிவருகிற ஒரு கூட்டுபணியாளருமாவார். 30 ஆண்டுகளில் என் கொள்கை, திட்டத்தில், ஆலோசனையில் தயக்கம் கொள்ளாமல் நம்பிக்கை வைத்து தொண்டாற்றியவர். அவரது முழு வாழ்க்கையிலும் இயக்க தொண்டு தவிர வேறு எதிலும் ஈடுபட்டதில்லை. போதிய பணம் இல்லை. விளையாட்டுக்கு கூட கொள்கையை விலைபேசி இருக்கமாட்டார் என்று கூறி இருந்தார்.

குடும்பம்

எதிராசு அம்மையார் என்பவரை அழகிரி மணந்தார். அந்த அம்மையார் 25-5-1956ஆம் நாள் மறைந்தார்.[2]

ஆதாரம்

  1. http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/Manimandapams-a-tribute-to-leaders-Minister/article15540801.ece
  2. திராவிடநாடு (இதழ்) நாள்:17-6-1956, பக்கம் 4

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.