திராவிட இயக்கம்
திராவிட இயக்கம் என்பது கி.பி 19 ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்ச் சமுதாயத்தில் உருவாகிய ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமூக மற்றும் அரசியல் இயக்கமாகும். இக் காலகட்டத்தில் சாதாரண மக்களுக்குக் கிடைத்த கல்வி வாய்ப்புக்கள் அவர்களிடையே சமூக உணர்வுகளைத் தட்டி எழுப்பியிருந்தன. இவ்வாறானவர்களிற் சிலர் சாதாரண மக்களில் உரிமைகளுக்காக வாதிட்டதுடன், அக்காலத்தில் இருந்த பிராமண ஆதிக்கத்தையும் எதிர்த்து வந்தனர். நாட்டுக்கு விடுதலை வரும்போது அது பிராமண ஆதிக்கத்தின் கீழ் வருமே ஒழிய அதன் பயன்கள் மக்களுக்குக் கிட்டாது என அவர்கள் நம்பினர். இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துப் போராடியோரில் அயோத்தி தாசர், இரட்டைமலை சீனிவாசன் போன்றோர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் முன்னணியில் இருந்தனர். இருபதாம் நூற்றாண்டில் டி. எம். நாயர், தியாகராசச் செட்டியார், கேசவப் பிள்ளை, நடேச முதலியார் போன்றோர் முன்னணியில் இருந்தனர்.
திராவிட இயக்கத்தின் தோற்றம்
திராவிட மகாஜன சபை என்பது திராவிட இயக்கத்தை தோற்றுவித்தவரான அயோத்தி தாசர் என்பவரால் கி.பி. 1891 தொடங்கப்பட்டது. அயோத்தி தாசர் 1885 ஆண்டிலேயே திராவிட பாண்டியன் என்னும் இதழைத் தொடங்கினார். அவர் கி.பி. 1886ஆம் ஆண்டில் இந்துக்களில் தீண்டத்தகாதவர்கள் எனப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என்றார். அவர்கள் யாரும் சாதியற்ற திராவிடர்கள் என்னும் கருத்தையும் முன்வைத்தார். இதனால் இவர் திராவிட கருத்தியலின் முன்னோடி என அறியப்பட்டார். திராவிட மகாஜன சபையை நிறுவி திராவிட அரசியலைத் தொடங்கி வைத்ததால் திராவிட அரசியலின் முன்னோடி எனவும் கூறப்படுகிறார்.[1][2][3]
1912 ஆம் ஆண்டில் திராவிடர் நலனை முன்வத்து இயக்கம் ஒன்று சென்னையில் தொடங்கப்பட்டது. 1916 ஆம் ஆண்டில் இதன் பெயர் தென்னிந்திய நல உரிமைக் கழகம் என மாற்றப்பட்டது. பொதுவாகவே வைதீக எதிர்ப்பாளர்கள், தமிழர் மத்தியில் நிலவிய சாதிக் கொடுமை முதலியவற்றுக்கு, வைதீகத்தையும், பிராமணரையுமே குற்றஞ்சாட்டினர். வைதீகத்துக்கு முந்திய பண்டைத் தமிழகம் சாதிப் பாகுபாடற்ற சமூகமாக இருந்ததை எடுத்துக்காட்டிய அவர்கள், இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி மக்களை அணிதிரட்டினர்.
நீதிக் கட்சி
தென்னிந்திய நல உரிமைக் கழகத்தின் அரசியல் பிரிவு நீதிக் கட்சி என்ற பெயருடன் இயங்கியது. 1919 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசினால் சட்ட வடிவம் கொடுக்கப்பட்ட இந்திய அரசியல் சீர்திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இரட்டை ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்தது. இம் முறையின் கீழ் மாநிலங்களுக்குப் பொறுப்பாட்சி வழங்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் இம் முறையை ஆதரிக்காவிடினும், நீதிக் கட்சி அதனை ஆதரித்தது. இம் முறை மூலம் வைதீக ஆதிக்கத்தை உடைத்து மக்களாட்சியை ஏற்படுத்தமுடியும் என அது நம்பியது. 1920 இலும், 1923 இலும் நடைபெற்ற தேர்தல்களில் வென்று நீதிக்கட்சி சென்னை மாகாண ஆட்சியைப் பிடித்தது. திராவிடரின் நலன், பொதுத் துறைகளில் இனவாரிப் பணி ஒதுக்கீடு, கல்வி விரிவாக்கம் போன்ற பல திட்டங்களின் அடிப்படையில் நீதிக்கட்சி செயல்பட்டது. இதனிடையே கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் 1926 ல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சிக்குத் தோல்வி கிட்டியது. 1927 இல் மாநிலத் தன்னாட்சிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
1930 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்று நீதிக்கட்சி மீண்டும் ஆட்சி அமைத்ததுடன் தொடர்ந்து வந்த தேர்தல்களிலும் வென்று 1937 ஆம் ஆண்டுவரை நீதிக்கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருந்தது. எனினும், 1926 ஆம் ஆண்டு முதலே நீதிக்கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தே வந்தது. 1937 ஆம் ஆண்டுத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த நீதிக்கட்சி முற்றாகவே சிதையத் தொடங்கியது. 1937 க்குப் பின்னர் தலைமைப் பதவியைப் பெரியார் என அழைக்கப்பட்ட ஈ. வெ. ராமசாமி ஏற்றுக்கொண்டார். திராவிட இனக் கொள்கையில் பிடிப்புக் கொண்டிருந்த இவர், தனது தன்மான இயக்கத்தின் மூலம் புகழ் பெற்றிருந்தார். இதனால், நீதிக் கட்சியின் வீழ்ச்சியையும் கடந்து திராவிட இயக்கம் நிலைக்க முடிந்தது.
பெரியாரும், திராவிட இயக்கமும்
தொடக்கத்தில் இந்திய தேசிய காங்கிரசில் ஈடுபாடு காட்டிய பெரியார், அடிமட்ட மக்கள் நலன், சாதிப்பாகுபாட்டு ஒழிப்பு முதலிய விடயங்களில் காங்கிரஸ் காட்டிய மெத்தனப் போக்கை எதிர்த்து வெளியேறினார். தன்மான இயக்கத்தைத் தொடங்கித் திராவிடர் மத்தியில் சமூகச் சீர்கேடுகள், அறியாமை, மூடநம்பிக்கை என்பவற்றை எதிர்த்துப் போராடினார். 1935 ஆம் ஆண்டில் சி. இராஜகோபாலாச்சாரியார் (இராஜாஜி) தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசின் இந்தித் திணிப்புக் கொள்கைகளை எதிர்த்துப் போராடிய ஈ. வெ. ரா. சிறை சென்றார். இவர் சிறையில் இருந்தபோதே நீதிக் கட்சியின் தலைமைப் பதவி இவரைத் தேடி வந்தது.
திராவிட நாடு கொள்கையும், திராவிடர் இயக்கமும்

இராஜாஜி அரசின் மொழிக் கொள்கையின் காரணமாகத் திராவிட இயக்கத்தினர் திராவிட நாடு கோரும் நிலைக்கு வந்தனர்.[4] 1940 களின் முதல் பாதியில் உருவான இக் கொள்கை 1944 ஆம் ஆண்டில் இறுதி வடிவம் பெற்றது. பெரியார் தலைமையிலான இயக்கம் திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றதும் இவ்வாண்டிலேயே. இவ்வாண்டில் சேலத்தில் நடைபெற்ற கழக மாநாட்டில் வேறு பல தீர்மானங்களுடன் திராவிட நாடு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முழுத் தன்னாட்சி கொண்ட திராவிட நாடு, மத்தியில் கூட்டாட்சி என்பதே இக் கொள்கையின் முக்கிய அம்சமாக இருந்தது. பல துடிப்புள்ள இளைஞர்களையும் இணைத்துக்கொண்டு திராவிடர் கழகம் வளர்ந்து வந்தது. திராவிடர் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக சி. என். அண்ணாதுரை திகழ்ந்தார். திராவிடர் கழகத்தின் செயற்பாடுகள் சமுதாய மட்டத்திலேயே முனைப்புப் பெற்றிருந்தது. சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பிராமண ஆதிக்க எதிர்ப்பு, பெண்களின் உரிமைகள் ஆகியவை தொடர்பான விடயங்களில் இவர்கள் தீவிர கவனம் செலுத்தினர்.
திராவிடர் கழகப் பிளவும், திராவிட முன்னேற்றக் கழகமும்
1949 ஆம் ஆண்டில், பெரியாரின் செயல்பாடுகள் சிலவற்றில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகத் திராவிடர் கழகம் பிளவுபட்டது. அண்ணாதுரையின் தலைமையில் பெருமளவினர் திராவிடர் கழகத்திலிருந்து விலகிப் புதிய இயக்கமொன்றைத் தொடங்கினர். திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) என்று பெயரிடப்பட்ட இந்த இயக்கத்துக்கு அண்ணாதுரை தலைமை தாங்கினார். மு. கருணாநிதி, இரா. நெடுஞ்செழியன் போன்றோர் இவருக்குத் துணை நின்றனர். பெருமளவில் இளைஞர்களைக் கவர்ந்த திமுக, மொழி உணர்வு, இன உணர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இயங்கியது. கவர்ச்சியான மேடைப் பேச்சு, எழுத்து, பத்திரிகைகள், இசை, நாடகம் என்பவை மூலமாகவும், பின்னர் வலுவான தொடர்பு ஊடகமாக வளர்ந்து வந்த திரைப்படங்கள் மூலமாகவும் தங்கள் கொள்கைகளை அவர்கள் பரப்பினர். இது தமிழகத்தின் மூலை முடுக்குகள் எல்லாம் திராவிட இயக்கக் கொள்கைகள் பரவ உதவியது. அண்ணாதுரை, கருணாநிதி போன்ற உயர் மட்டத் தலைவர்களும் திரைப்படத்துறையில் நேரடியாகவே ஈடுபட்டிருந்தனர். இவர்கள் எழுதிய கதைகளும், வசனங்களும், இவர்களுடைய கொள்கைகளை மக்களிடம் கவர்ச்சிகரமாக எடுத்துச் சென்றன.
தொடக்கத்தில் சமூக இயக்கமாகவே இருந்த திமுக 1957 ஆம் ஆண்டில் அரசியலிலும் குதித்தது. காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்திலிருந்த மத்திய, மாநில அரசுகளின் இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு எதிராகவும், பிற நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியான போராட்டங்களை திமுக நடத்தியது. இவற்றின் விளைவாகத் திமுக பெற்ற செல்வாக்கு, 1967 ஆம் ஆண்டில் காங்கிரசைத் தோற்கடித்து ஆட்சிபீடம் ஏற அவர்களுக்கு உதவியது. தேர்தலைத் தொடர்ந்து அண்ணாதுரை முதலமைச்சர் ஆனார். தமிழ் உணர்வை வெளிக்காட்டும் ஒரு குறியீடாக மாநிலத்தின் பெயரும் தமிழ் நாடு என மாற்றப்பட்டது.அண்ணா துறைக்கு பிறகு கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் ஆனார்.அவர் தமிழகத்தில் 6 முறை முதலமைச்சர் பதவி வகித்தார். 2016ம் ஆண்டு வரை நடைபெற்ற 13 சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
மிக விரைவிலேயே அண்ணாதுரை காலமானார். தலைமைப் பொறுப்பேற்ற கருணாநிதிக்கும், கட்சிப் பொருளாளராக இருந்த முன்னணி நடிகரான எம். ஜி. இராமச்சந்திரனுக்கும் (எம். ஜி. ஆர்) ஏற்பட்ட பிணக்கினால் கட்சி உடைந்து இரண்டானது. எம். ஜி. ஆர். தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) என்னும் அரசியல் கட்சி உருவானது. அடுத்து நடந்த தேர்தலிலேயே அதிமுக ஆட்சியைப் பிடித்தது. எம். ஜி. ஆர் தமிழகத்தின் முதல்வர் ஆனார். இதன் பின்னர், மாறிமாறி ஏதாவது ஒரு திராவிட இயக்கத்தைச் சார்ந்த கட்சியே தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்== 1993 கால கட்டத்தில் திமுகவில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டது. அன்று தலைவராக இருந்த மு.கருணாநிதிக்குப் பின் கட்சியின் தலைமைக்கான போட்டியில் அன்று பாராளுமன்றப் புலியாகவும், திமுகவின் பலம் பொருந்திய திராவிடப் போர்வாளாக விளங்கிய வை.கோபால்சாமி தலைமையைக் கைப்பற்றி விடுவார் என்று கருணாநிதியின் மகன் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டதன் காரணமாக, அவருடன் திமுகவிலிருந்து வெளியேறிய வை.கோபால்சாமியின் ஆதரவாளர்களால் மறுமலர்ச்சி திமுக என்ற தனிக் கட்சி உருவானது.
திராவிடமும் தமிழியமும்
“ | திராவிடம் என்ற வார்த்தையும் தமிழ்த்தேசியத்தை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தவரை அது முற்போக்கானது தான். “திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம்” என்பதுதான் சரியாக இருக்க முடியும். திராவிடம் என்பது முந்தைய காலத்துக்குரிய ஒரு கருத்து. ‘அந்த சிறைக்குள்ளேயே தான் இருக்க வேண்டும். வெளியே வரக்கூடாது’ என்று சொன்னால் அது சிதைவாக மாறும். | ” |
விமர்சனங்கள்
திராவிட இயக்கம் என்று ஒன்று இருந்ததில்லை என்றும் ஆரம்பம் முதல் திராவிட அரசியலே இருந்து வந்தது என்ற விமர்சனங்கள் திராவிட இயக்கங்கள் மேல் உள்ளது. [6]
இவற்றையும் பாக்க
மேற்கோள்கள்
- http://books.google.co.in/books?id=rSF8b5hbyP0C&pg=PT131&dq=Iyothee+Thass+pioneer+of+Dravidian+movement&hl=en&sa=X&ei=DvcFVOHDKJC6uASB-YL4Aw&ved=0CBsQ6AEwAA#v=onepage&q=Iyothee%20Thass%20pioneer%20of%20Dravidian%20movement&f=false
- http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/remembering-the-precursor-of-dravidian-movement/article3438425.ece
- http://www.countercurrents.org/dalit-ravikumar280905.htm
- "A Biographical Sketch". பார்த்த நாள் மே 30, 2012.
- நக்சலைட் பாதைதான் சரி என்று முடிவெடுத்தேன்: தியாகு நேர்காணல்: மினர்வா & நந்தன்
- http://puthu.thinnai.com/?p=15264