நாகேஷ்

நாகேஷ் (செப்டம்பர் 27, 1933 - சனவரி 31, 2009) த‌மிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிக‌ராவார். இவர் நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.

நாகேஷ்
பிறப்புநாகேசுவரன்
செப்டம்பர் 27, 1933(1933-09-27)
கொழிஞ்சிவாடி, தாராபுரம், தமிழ்நாடு,  இந்தியா
இறப்புசனவரி 31, 2009(2009-01-31) (அகவை 75)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1958-2009
பெற்றோர்கிருஷ்ணாராவ்,
ருக்மணி அம்மாள்
வாழ்க்கைத்
துணை
ரெஜினா (1957-2002)
பிள்ளைகள்ரமேஷ் பாபு,
ராஜேஷ் பாபு,
ஆனந்த் பாபு

வாழ்க்கைச் சுருக்கம்

நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணாராவ் மற்றும் தாயார் ருக்மணி அம்மாள். தந்தை கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் தொடருந்து நிலைய அதிபராகத் தொழில் பார்த்தவர். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார்.[1]

தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு கோவை பி. எஸ். ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்ததால் இவரது முகத்தில் தழும்புகள் உண்டாயின. நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் எழுத்தாளராகப் பணிபுரிந்தார். புது வசந்தம், சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆனந்த் பாபு இவரது மகனாவர்.

நடிப்புத் துறையில்

சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால், இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.

1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார்.

கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்.

திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

கதாநாயகனாக

நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. தேன்கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கமல்ஹாசன் உடனான நட்பு

கமல்ஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் இவர் தோன்றினார். அதற்குப் பின் பல கமல்ஹாசன் படங்களில் நாகேஷ் நடித்தார். மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். நாகேஷ் கமல்ஹாசனுடன் நடித்த கடைசிப் படம் தசாவதாரம் ஆகும்.

இதனையும் காண்க

நாகேஷ் நடிப்பில் வெளியான திரைப்படங்களின் விவரம் பார்க்க, நாகேஷ் நடித்த தமிழ் திரைப்படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.