நன்னாகையார்

நன்னாகையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரைக் கச்சிப்பேட்டு நன்னாகையார் என்றும் சில நூல்பதிப்புகள் குறிப்பிடுகின்றன. குறுந்தொகை நூலில் 8 பாடல்கள் இவர் பாடியனவாக உள்ளன. அவை அந்நூலில் 30, 118, 172, 180, 192, 197, 287, 325 எண் கொண்ட பாடல்கள்.

கச்சிப்பேடு காஞ்சிபுரத்தை அடுத்து உள்ளது.

பாடல் சொல்லும் செய்திகள்

குறுந்தொகை 30

  • திணை - பாலை

தலைவி தான் கண்ட கனாவைத் தன் தோழியிடம் கூறுவதாக அந்தப் பாடல் அமைந்துள்ளது.

பொய்வலாளன் என்னை ஆரத் தழுவினான். உண்மையில் அது பொய். கனா. எழுந்து அமளிமெத்தையைத் தடவினேன். யாருமே இல்லை. தனியாகக் கிடந்தேன். வண்டு தேனை உண்டபின் கிடக்கும் ஆம்பல் மலர் போலக் கிடந்தேன்.

குறுந்தொகை 118

  • திணை - நெய்தல்

ஊர்க்கதவை அடைப்பவர் கேட்டபோது தன் காதலன் வரவில்லை என்று காதலி தன் தோழியிடம் சொல்லி வருந்துகிறாள்.

ஊர்க் கதவு

ஊர் முழுமைக்குமான மதில் கதவை இருட்டும் மாலைப் பொழுதில் அடைக்கும்போது ஊருக்குள் வருபவர் இன்னும் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டு இருந்தால் ஊருக்குள் வர விட்டுத்தான் கதவை அடைப்பர்.

குறுந்தொகை 172

  • திணை - நெய்தல்

வௌவால் பழுமரத்தை நாடிச் செல்லும் மாலை வேளையில் நான் தனித்து வாடுகிறேன். என்னை இந்நிலைக்கு ஆளாக்கிவிட்டு என்னை விட்டுச் சென்றவர் இன்பமாக இருக்கிறாரா என அறிய விரும்பி என் நெஞ்சம் படபடக்கிறது என்று தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.

உவமை - மிதிதோல்

ஏழு ஊருக்குப் பொதுவினை செய்ய ஒரே ஒரு கொல்லன் இருந்தான். அந்தக் கொல்லன் உலையை ஊத அமைக்கப்பட்டிருந்த மிதிதோல் எந்த அளவுக்கு மிதிக்கப்பட்டு ஊதுமோ அந்த அளவுக்குத் தலைவியின் நெஞ்சு பெருமூச்சு வாங்கிற்றாம்.

குறுந்தொகை 180

  • திணை - பாலை

யானைக்கூட்டம் செல்லும்போது அதன் பரந்த காலடியில் பட்டு மூங்கில்கரும்பு கண் உடையும் காட்டில் அவர் செல்கிறாரே என்று தலைவி கவலைப்படுகிறாள்.

பழந்தமிழ்

  • ஏந்தல் - இருங்களிற்று இனநிரை ஏந்தல் = தலைவன்யானை ஏந்திச் சொல்லும் யானைக்கூட்டம்
  • வன்பர் = வன்நெஞ்சக்காரர்

குறுந்தொகை 192

  • திணை - பாலை

குயில் மாம்பூவைக் கோதிக்கொண்டு கூவும் விடியல் வேளையிலும் அவன் அவளது வெறுங்கூந்தலைக் கோதிக்கொண்டிருப்பானாம். அப்படிப்பட்டவன் பிரிவைத் தாங்கிக்கொள்வது எப்படி என்று தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.

உவமை - பொன் உரைக்கும் கட்டளைக்கல்

பொன்னை உரைத்துப் பார்க்கும் கட்டளைக்கல்லில் பொன்னின் துகள் படிந்திருப்பது போல காலை வேளையில் குயில் மாம்பூவைக் கொத்தித் தின்னும்போது அதன் துகள்கள் உதிர்ந்து தரையில் பொன்னின் துகள் போலப் போர்த்திக் கிடக்குமாம்.

குறுந்தொகை 197

  • திணை - நெய்தல்

அவர் வந்துவிடுவேன் என்று சொல்லிச் சென்ற கூதிர்காலமும் வந்துவிட்டது. அவர் வரவில்லை. என்ன செய்வோம்? என்று தலைவி தன் தோழியிடம் சொல்லி வருந்துகிறாள்.

குறுந்தொகை 287

  • திணை - முல்லை

வருவதாகச் சொல்லிச் சென்ற கார் காலத்திலும் அவர் மீளவில்லையே என்று தலைவி தன் தோழியிடம் சொல்லி வருந்துகிறாள்.

உவமை - 7 மாதக் கற்பினி

புளிச் சுவையை விரும்பும் ஏழு மாதக் கற்பினிப் பெண் போல மேகம் நீரைச் சுமந்துகொண்டு செல்கிறதாம்.

குறுந்தொகை 325

கருங்கால் வெண்குருகு மேயும் குளம் போல என் முலை நீரால் நிறைந்துவிட்டது. எனக்கு ஆசாக விளங்கும் என் காதலன் எங்கு உள்ளானோ என்று தன் தோழியுடம் சொல்லிக் காதலி கவலை கொள்கிறாள்.

  • ஆசு = துணை, பற்றுக்கோடு, 'துளை அடைபட ஆசு வை' - வழக்கு.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.