குமுழி ஞாழலார் நப்பசலையார்

குமிழி ஞாழலார் நப்பசலையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குமுழி என்னும் ஊரில் பிறந்தவல். இவர் ஒரு பெண் புலவர். “குமுழி ஞாழல் நப்பசையார்” என்றும் அழைக்கப்பட்டார். இவர் அகநானூற்றில் ஒரு பாடல் (பாடல்: 160) மட்டும் பாடியுள்ளார்.

குமுழிஞாழலாரின் பாடல் நெய்தல் நிலத் தலைவன் ஒருவன் தன் காதலி தலைவியை மணந்துகொள்ளத் தேரில் வருவதைக் குறிப்பிடுகிறது. முன்பெல்லாம் இரவில் திருட்டுத்தனமாகத் தேரில் வந்து தன் காதலியைத் துய்த்துச் சென்றவன் இப்போது பகலில் ஊர்மக்கள் அனைவரும் காணும்படி வருகிறான் என்று தோழி தலைவிக்குக் கூறுகிறாள். அவன் திருமணம் செய்துகொள்ள வந்துள்ளான் என்பதை ஓர் இறைச்சிப் பொருளால் நம்மை உணரவைக்கிறார். பெண்ஆமை கானல் மணலில் முட்டையிட்டு மறைத்துவிட்டுப் போய்விடுமாம். அது குஞ்சாகும் வரை அதனை அதன் ஆண்ஆமை அடைகாக்குமாம். அப்படிப்பட்ட கானலஞ்சேர்ப்பு நாட்டை உடையவனாம் அந்தத் தலைவன். [1]

சங்ககாலத் தமிழர் இயற்கை நிகழ்வுகளை எந்த அளவுக்கு உற்று நோக்கி ஊன்றி உணர்ந்துள்ளனர் என்பதை உணர்த்தும் சான்றுகளில் இது ஒன்று.

அடிக்குறிப்பு

  1. கொடுங்கழிக், குப்பை வெண்மணல் பக்கம் சேர்த்தி, நிறைசூல் யாமை மறைத்து ஊன்று புதைத்த, கோட்டுவட்டு உருவின் புலவுநாறு முட்டைப், பார்ப்பிடன் ஆகும் அளவைப் பகுவாய்க் கணவன் ஓம்பும் கானலஞ் சேர்ப்பன் – அகம் 160
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.