தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி

தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி (Tamilnadu Toilers' Party, தமிழ்நாடு டோய்லர்ஸ் கட்சி) 1951-54 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சி எஸ். எஸ். ராமசாமி படையாச்சியால் வன்னியர் சாதியினரின் நலனுக்காகத் தொடங்கப்பட்டது.

தோற்றம்

1951ல் வன்னிய குல சத்திரிய சங்கம் ஒரு சாதி மாநாட்டைக் கூட்டி வன்னியருக்காக ஒரு மாநிலந்தழுவிய கட்சியினை உருவாக்க முயன்றது. ஆனால் தலைவர்களுக்குள் இருந்த வேறுபாட்டால் இம்முயற்சி வெற்றி பெறவில்லை. மாறாக வட ஆற்காடு மாவட்டத்திலும் செங்கல்பட்டு மாவட்டத்திலும் செல்வாக்கு பெற்றிருந்த எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர் காமன்வீல் கட்சியினைத் தொடங்கினார். தென்னாற்காடு மாவட்டத்திலும் சேலம் மாவட்டத்திலும் இருந்த வன்னியர்கள் ராமசாமி படையாச்சியின் தலைமையில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற மற்றொரு கட்சியைத் தொடங்கினர்.

1952 சட்டமன்றத் தேர்தல்

இரு கட்சிகளும் 1952 சட்டமன்றத் தேர்தலில் மாணிக்கவேலு நாயகரின் காமன்வீல் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது.

ராமசாமி படையாச்சி உட்பட 19 உழைப்பாளர் கட்சி வேட்பாளர்கள் 1952 தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கட்சி வேட்பாளர்கள் மக்களவைக்கான தேர்தலில் நான்கு இடங்களில் வென்றனர். தொடக்கத்தில் த. பிரகாசம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு காமன்வீல் கட்சி ஆதரவளித்தது. தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டவில்லையெனினும் தனிப்பெரும் கட்சியான காங்கிரசுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) முதலமைச்சரானார். அவர் தனது பெரும்பான்மையைக் காட்ட எதிர்க்கட்சிக் கூட்டணியை உடைத்து பல கட்சிகளை தம்பக்கம் இழுத்தார். அவ்வாறு இழுக்கப்பட்ட கட்சிகளுள் ஒன்று உழைப்பாளர் கட்சி. அரசுக்கு ராமசாமி வெளியிலிருந்து ஆதரவளித்தார்.

1954ல் காமராஜர் முதல்வரான பின்னர் ராமசாமி தன் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டு அவரது அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார்.

1962 தேர்தலும் பின்னரும்

1962 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது காங்கிரசிலிருந்து விலகிய ராமசாமி மீண்டும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கினார். தேர்தலில் சுதந்திராக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் அவர் உட்பட இக்கட்சியின் வேட்பாளர்கள் தோல்வியடைந்ததை தொடர்ந்து. சிறிது காலத்துக்குப் பின்னர் ராமசாமி கட்சியை மீண்டும் கலைத்து விட்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்துவிட்டார்.

இக்கட்சியும் காமன்வீல் கட்சியும் இன்றைய பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னோடிகளாக கருதப்படுகின்றன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.