டைக்குவாண்டோ

டைக்குவாண்டோ (Tae Kwon Do) என்பது கொரியாவில் அறிமுகமான ஒரு தற்காப்புக்கலை ஆகும். இக்கலை இப்போது உலகின் பல நாடுகளிலும் பரவலாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காவற்துறை மற்றும் இராணுவத்தினரால் பயிற்சி செய்யப்படுகிறது. தென் கொரியாவில் இக்கலை ஒரு தேசிய விளையாட்டாகும். ஒலிம்பிக் போட்டிகளிலும் இது விளையாடப்படுகிறது.

டைக்குவாண்டோ
Taekwondo
வேறு பெயர்டைக்குவான்-டோ, டை குவான்-டோ, டை குவான் டோ
நோக்கம்தாக்குதல்
தோன்றிய நாடு கொரியா
ஒலிம்பிய
விளையாட்டு
2000 ஆம் ஆண்டில் இருந்து
Official websitehttp://wtf.org/

கொரிய மொழியில் Tae (跆) என்பது உதை எனவும் Kwon (拳) என்பது கைகாளால் தாக்குதல் எனவும் Do என்பது (道) கலை எனவும் பொருள்படும். அதாவது கால், கை இவற்றால் எதிரியைத் தாக்கிச் செயலிழக்கச் செய்யும் கலை எனப் பொதுவாகக் கூறலாம். ஏனைய தற்காப்புக் கலைகள் போல் இதுவும் எதிரியை அடக்க, தற்பாதுகாப்புக்காக, விளையாட்டாக, உடற்பயிற்சிக்காக மற்றும் களியாட்டம் என்று பல வகைகளிலும் இது பயன்பாட்டில் உள்ளது.

டைக்குவாண்டோ கலையில் கால்களுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இக்கலையில் குறிப்பிட்ட வல்லுநர் எதிரி தன்னை நெருங்கும் போது கால்களைப் பயன்படுத்தி எதிரியைத் தூரத்திலேயே நிறுத்தி வைத்துத் தாக்கிச் செயலிழக்கச் செய்வார்.

வரலாறு

நவீன டைக்குவாண்டோ கலையை அறிமுகப்படுத்தியவர் சோய் ஹொங் ஹி (Choi Hong Hi) என்னும் இராணுவ மேஜர் ஆவார். இவர் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியரின் தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொண்டார். கொரியாவில் அக்காலப்பகுதியில் பிரபலமாக விளங்கிய டைக்கியான் (taekyon) என்ற தற்காப்புக்கலையின் அடிப்படையில் புதிய முறைகளையும் புகுத்தி நவீன டைக்குவாண்டோவை ஏப்ரல் 11, 1955இல் அறிமுகப்படுத்தினார்.

கொரிய டைக்குவாண்டோ அமைப்பு (KTA) 1959 இல் அமைக்கப்பட்டது. அதே காலப்பகுதியில் இக்கலை அமெரிக்காவில் அறிமுகமானது. ஹொங் இந்த அமைப்பில் இருந்து விலகி தனியான சர்வதேச டைக்குவாண்டோ அமைப்பை 1966இல் ஆரம்பித்தார்.

1973இல் உலக டைக்குவாண்டோ அமைப்பு உருவானது. 1988இல் சியோலிலும் பின்னர் 1992இல் பார்சிலோனாவிலும் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இது காட்சி விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 2000ம் ஆண்டில் சிட்னியில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் முழுமையான போட்டியாக அறிமுகமானது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.