இறகுப்பந்தாட்டம்

இறகுப்பந்து விளையாட்டினை பிரிட்டானிய இராணுவ வீரர்கள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் அறிமுகம் செய்தனர். இவ்விளையாட்டினை 1873 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் ப்யூபர்ட் பிரபுவின் கிராமப் பகுதியான “பாட்மிண்டன்” (Badminton) எனும் இடத்தில் ஆடப்பட்டதால் இந்த விளையாட்டை ஆங்கிலத்தில் “பாட்மிண்டன்” என்று அழைத்தனர். இது ஒரு மட்டைப் பந்தாட்ட (racquet sport) வகை விளையாட்டு. இதில் பூக்குவளை போல் இருக்கும் இறகுகளால் ஆன பந்தை (ஷட்டில்காக்), இறுக்கமாக பின்னிய வலை மட்டையால் (ராக்கெட் ) வலைக்கு மேலாக போய் எதிர்த்தரப்பு ஆடுகளத்துக்குள் விழுமாறு அடித்து விளையாடும் ஒரு விளையாட்டாகும்

இரட்டையர்கள் அணிகளாக இறகுப்பந்தாட்டம் ஆடுதல்

ஆடுகளம்

இறகுப் பந்தாட்டத்தின் ஆடுகளம் ஒற்றையர் ஆடுகளம், இரட்டையர் ஆடுகளம் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒற்றையர் ஆடுகளம்

ஒற்றையர் ஆடுகளத்திற்கான நீளம் 13.40 மீட்டர், அகலம் 5.18 மீட்டர் கொண்டிருக்கும். மையக் கோட்டிலிருந்து ஒவ்வொரு பக்கத்திலும் 1.98 மீட்டர் நீளத்திற்கு குறுகிய பந்து போடும் கோடு (Short Service Line) இருக்க வேண்டும். தரையிலிருந்து வலையின் உயரம் 5 அடி இரண்டு பக்கங்களிலும் 5 அடி 1 அங்குலம் என்பதாக இருக்க வேண்டும்.

இரட்டையர் ஆடுகளம்

இரட்டையர் ஆடுகளத்திற்கான நீளம் 13.40 மீட்டர், அகலம் 6.10 மீட்டர் கொண்டிருக்கும். மையக் கோட்டிலிருந்து ஒவ்வொரு பக்கத்திலும் 1.98 மீட்டர் நீளத்திற்கு குறுகிய பந்து போடும் கோடு (Short Service Line)இருக்க வேண்டும். இரண்டு பக்கங்களின் பின் கோட்டிற்கு உட்புறம் 76 செ.மீக்கு இரட்டையருக்கான நீள பந்து போடும் கோடு இருக்க வேண்டும். (பக்கக் கோட்டிற்கு உட்புறம் இரண்டு பக்கங்களிலும் 46 செ.மீ க்கு ஒற்றையருக்கான பக்கக் கோடு இருக்க வேண்டும்.

பந்து

இறக்கைப்பந்து

இறகுப் பந்தின் எடை 4.73 கிராம் முதல் 5. 50 கிராம் வரை இருக்கலாம். இறகுகள் 14 முதல் 16 வரை இருக்கலாம். பந்தின் விட்டம் 1 முதல் 1 1/8 அங்குலம் கார்க்கின் மேல் இருக்கும். நீளம் 2 1/2 முதல் 2 3/4 அங்குலம் வரை இருக்கலாம்.

மட்டை

மட்டையின் உயரம் 26 முதல் 27 அங்குலம் வரையும், விட்டம் 8 முதல் 9 அங்குலம் வரையும் இருக்க வேண்டும்.

ஆட்டக் கணக்கு

ஓர் ஆட்டத்தில் எத்தரப்பினர் 21புள்ளிகள் எடுக்கிறார்களோ அவ்வணி வெற்றி பெறும். ஒரு போட்டியாட்டத்தில் மூன்றில் இரண்டு மோதல்களில் வென்ற அணியே வெற்றி பெற்ற அணியாகும்.

இருவர் ஆட்டத்தில் ஒருவர் முதலெறிதலில் (சர்வீஸ்) ஆட்டம் இழந்தால் இரண்டாம் நபருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அவருக்குப் பின்னரே எதிர் அணிக்கு கொடுக்கப்படும்.

இரு அணிகளும் சமமாக 20 புள்ளிகள் வென்றெடுத்தால் 2 புள்ளி வித்தியாசம் பெறும் அணி வெற்றி பெறும் .

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.