சீர்பாதர்
சீர்பாதகுலம் அல்லது சீர்பாதர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை,மட்டக்களப்பு மாவட்டங்களில் கணிசமான அளவு காணப்படுகின்ற இலங்கைத்தமிழர்களாவர்.
![]() சீர்பாததேவி | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
இலங்கை, மட்டக்களப்பு, அம்பாறை | |
மொழி(கள்) | |
தமிழ் | |
சமயங்கள் | |
இந்து சமயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
தமிழர் |
வரலாறு

கி.பி.759 ஆம் ஆண்டில் உக்கிரசிங்கன் என்ற மன்னன் வடஇலங்கையில் பெரிதும் வலிமையுடன் விளங்கிய நாகப்பேரரசை வீழ்த்தி, தற்காலத்தில் கந்தரோடை எனப்படதும் அக்காலத்தில் கதிரைமலை எனப்பட்டதுமான நகரை தலைநகராக கொண்டு ஆளத் தொடங்கினான். சில காலத்திற்கு பின் அவன், தற்கால யாழ்ப்பாணம் வல்லிபுரம் என்று அழைக்கப்பட்டதும், அக்காலத்தில் சிங்கை எனப்பட்டதுமான சிங்கை நகரை தன் தலைநகராக மாற்றிக்கொண்டான். இவனது மனைவி மாருதப்புரவீகவல்லி சோழ இளவரசி. இத்தம்பதியருக்கு வாலசிங்கன் என்ற மகனும், சண்பகவல்லி என்ற மகளும் பிறந்தனர். இளவரசன் வாலசிங்கன் அனைத்து கலைகளையும் நன்கு கற்று தேர்ந்ததுடன் நால்வகை வேதங்களையும் பயின்றவன். மக்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டவன். எனவே மக்கள் ஆதரவையும் நன் மதிப்பையும் பெற்றவனாக விளங்கினான். உக்கிரசிங்கன் மறைவிற்கு பின் வாலசிங்கன் மன்னன் ஆனான். அக்காலத்தில் பழையாறையை தலைநகரமாக கொண்டு அரசாண்ட குமாரங்குச சோழனுக்கு நற்குணமும் தெய்வ பக்தியும் நிறைந்த சீர்பாததேவி என்ற மகள் இருந்தாள். நற்குணவதியான இவளின் சிறப்பை பலர் வாயிலாக கேட்டும், தன் தந்தையை போலவே சோழநாட்டிலிருந்து பெண் எடுக்க வேண்டும் என்ற பெருவிருப்பத்தாலும் தன் அமைச்சர்கள் சிலரை பழையாறைக்கு அனுப்பி சோழனிடம் பெண் கேட்க குமாரங்குசனும் இசைவு தெரிவிக்க வாலசிங்கன் சீர்பாததேவி திருமணம் பழையாறையில் மிகுந்த சிறப்புடன் நடந்தேறியது. திருமணம் முடிந்த பின் சிங்கை மன்னன் தன் மனைவியுடன் இலங்கை திரும்ப எண்ணிய பொழுது சோழ மன்னன் கப்பல் ஒன்றை ஏற்பாடு செய்ததுடன் நால்வகை வருணத்தை சேர்ந்த சிலரையும் அவரவர் குடும்ப சகிதம் சீர்பாத தேவிக்கு துணையாக அனுப்பி வைத்தான். அரச குடும்பத்தினர் பயணம் மேற்கொண்ட கப்பல் இலங்கையின் கிழக்கு கரையோரமாக சென்ற போது திரிகோணமலை திருகோணேசுவர பெருமான் ஆலயத்தின் அருகில் நகராமல் நின்று விட்டது. அப்போது அரச குலத்தை சேர்ந்த சிந்தன் என்பவன் கடலில் மூழ்கி ஆராய, விநாயக பெருமான் நிக்ரகம் ஒன்றால் கப்பல் பயணம் தடைப்பட்டதை அறிந்தான்.
அரச கட்டளைப்படி அந்த விக்ரகத்தை மிகுந்த கவனத்துடன் எடுத்து கப்பலில் சேர்த்தான். கம்பீரமான தோற்றமும், மிகுந்த எழிலும் கொண்ட அந்த விநாயக பெருமானை வணங்கிய வாலசிங்கனும், சீர்பாததேவியும், ஐயனே மீண்டும் இக்கப்பல் தங்கு தடையின்றி சென்று எங்கு கரை சேருகிறதோ அங்கு உனக்கு ஓர் ஆலயத்தை கட்டுகிறோம் என்று பயபக்தியுடன் பிரார்த்தனை செய்து கொண்டனர். விநாயக பெருமான் திருமேனியுடன் மீண்டும் பயணத்தை தொடங்கிய கப்பல், தென்திசை நோக்கி சென்று மட்டகளப்பு பகுதியில் அக்காலத்தில் கோட்டைமடு என்று அழைக்க பட்ட வீரமுனை கரையில் தரை தட்டி நின்றது. அனைவரும் மகிழ்ச்சியுடன் கரை சேர்ந்து அங்கேயே தங்கி விநாயகருக்கு ஆலயம் அமைக்க தொடங்கினர். அக்காலத்தில் வீரமுனையில் போதிய மக்கள் தொகை இல்லாத நிலையிலும் பிற இடங்களிலிருந்து மக்களை தருவித்து ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. சிந்தாதிரை என்பதற்கு நல்ல பயணம் என்று பொருள். வாலசிங்கனும், சீர்பாததேவியும் மேற்கொண்ட நல்ல பயணத்தால் எழுந்த ஆலயம் சிந்தாதிரிப்பிள்ளையார் ஆலயம் என்ற பெயரை பெற்றது. சிலரோ இதனை சிந்து யாத்திரை பிள்ளையார் ஆலயம் என்று அழைப்பர். இதன் பொருள் கடல் பயணத்தில் கண்டெடுத்த பிள்ளையார் என்பதாகும். வீரமுனை கிராமமும் ஆலயமும் 1954, 1960, 1990 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட இனக்கலவரங்களாலும், வன்முறையாலும் நிர்மூலம் ஆக்கப்பட்டது என்றாலும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் மட்டக்களப்பிற்கு தெற்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் வீரமுனை என்ற கிராமத்தில் சிந்தாதிரை பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது.[1]
வீரமுனையில் விநாயகருக்கு ஆலயம்

சீர்பாததேவியின் தேசமான சோழ நாட்டிலே சீர்பாததேவி வாலசிங்கன் திருமணம் இடம்பெற்று சில நாட்கள் அவர்கள் இன்பமாக கழித்த போதிலும் அவர்கள் தங்களின் திருமண வாழ்க்கையினை முழுமையாக அங்கு கழிக்க முடியாது; கணவன் வீட்டில் மனைவி சென்று வாழவேண்டிய தமிழர் பண்பாடும், சிங்கை நாட்டு மன்னவன் என்ற பொறுப்பில் வாலசிங்கன் இருப்தினாலும் அவர்கள் இருவரும் சிங்கை அரண்மனைக்கு திரும்புவது அவசியமான ஒன்றாக காணப்பட்டது. எனினும் தன் மகளை அன்புடனும் பாசத்துடனும் வளர்த்த குமாராங்குசனுக்கு தன் மகள் இன்னுமொரு நாட்டிற்கு மருமகளாக செல்வதென்பது அவனுக்கு பெருத்த மனவேதனையை கொடுத்தது. எனினும் பெண் பிள்ளை என்று பெற்றுவிட்டால் அவளை புகுந்த வீட்டிற்கு அனுப்புவது என்பது பாமர மக்கள் முதல் பாராளும் மன்னன் வரை வழக்கமான விடயமாகக் காணப்பட்டது. இருந்த போதிலும் தன் மகளை இன்னுமொரு நாட்டு மன்னனுக்கு மனைவியாக்கி அனுப்புவதென்ற திருப்தியுடன் மனவேதனையை மூடி மறைத்தவனாய் குமராங்குசன் தன் மகளையும் மருமகனையும் சிங்கை நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டான்.
தன்னை பெற்றெடுத்து ஆசையாய் வளர்த்த பாசமிக்க பெற்றோரினை விட்டுப் பிரிந்து செல்வது சீர்பாததேவிக்கும் பெருத்த வேதனையாக இருந்த போதிலும் தன் மனதிற்கு பிடித்த கட்டிளம் காளையை திருமணம் செய்த மகிழ்ச்சியினால் தன் கவலைகளையெல்லாம் மறந்தவளாய் வாலசிங்கனுடன் சிங்கை நகர் செல்வதற்கு சீர்பாததேவியும் தன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொண்டாள். என்னதான் அரசிளம் குமாரியாக இருந்தாலும் அவளும் பெண்தானே! இத்தனை வருடம் தன் தாய் நாட்டிலே வாழ்ந்தாலும் இனி ஒரு புதிய தேசத்தில் புதிய சுற்றத்தாருடன் வாழ்வதென்பது சீர்பாததேவிக்கு மனக்கலக்கத்தினை ஏற்படுத்தியது.
தன்மகளின் மனக்கலக்கத்தினை உளமார அறிந்து கொண்ட குமாராங்குசன் தன்மகளின் கவலையினை தீர்க்கும் நோக்குடன் தன் அரச குலத்தவர்களில் சிலரை தன்மகளுடன் சிங்கை நகர் அனுப்புவதற்கு முடிவு செய்தான். இதன்படி சோழ நாட்டிலே திருவாரூர், பெருந்துறை, பழையாறை, கட்டுமாவடி முதலான இடங்களில் வாழ்ந்த அரசகுலத்தவர், அந்தணர்கள், வேளாளர், வணிகர் என்னும் பிரிவுகளைச் சேர்ந்த மக்களையும் தன்மகளுடன் துணையாக அனுப்ப முடிவு செய்தான். இதன் பிரகாரம் சிந்தன், காங்கேயன், காலதேவன், பெண்பழச்சி, வெள்ளாயி, நரையாகி, முழவன் போன்ற ஏழு அரசகுலத்தவர்களையும் சந்திரசேகர ஐயங்கார், அச்சுத ஐயங்கார், முதலிய அந்தணர்கள், கண்ணப்ப முதலி என்னும் வேளாளர், முத்துநாயக்க செட்டி, சதாசிவச் செட்டி, சங்கரச்செட்டி போன்ற செட்டிமார்கள் போன்றோர் தங்களின் மனைவிமாருடன் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டனர். இவர்களும் மன்னவனின் கட்டளைக்கிணங்க சீர்பாததேவி என்னும் இளவரசிக்கு துணையாக சிங்கை நாடு செல்ல பூரண மனதுடன் தயாராகினர். [2]
கப்பலிலே கடல்வழியாக சிங்கை நாட்டுக்கு பயணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்த வேளையில் தன் அன்பு மகளுக்கு சீர்பாததேவியின் தாய் அரண்மனையிலே தானும் தன் சோழ குல மகாராணிகளும் பரம்பரை பரம்பரையாக வைத்து வழிபட்டு வந்த முக்கியத்துவம் வாய்ந்த வேலினை பாதுகாப்புக்காக வழங்கினார். தன் அன்னையின் அன்புப்பரிசினை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட சீர்பாததேவி; தன் கணவன் வாலசிங்கனுடன் சோழ மன்னனின் பிரதிநிதிகள் சூழ்ந்திருக்க கப்பலிலே அமர்ந்திருந்து அரசகுல பெண்களின் வாழ்த்தொலிகள் முழங்க கடல்வழியாக பயணத்தினை இறை தியானத்துடன் ஆரம்பித்தார். சிறப்பு பொருந்திய அரசகுலத்தவர்களின் கப்பல் என்ற படியால் அலை எழுப்புகின்ற கடல் அன்னை கூட எந்தவிதமான ஆர்ப்பாட்டமுமின்றி அமைதியாக வழி கொடுத்தாள்.
தங்கு தடையின்றி கப்பல் வட இலங்கையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இவ்வாறு வட இலங்கையின் சிங்கை நகரினை கப்பல் அண்மித்த வேளையிலே சீர்பாததேவி தன் அன்பு மன்னவனிடம் ஒரு வேண்டுகோளினை முன்வைத்தாள். அதாவது சிங்கை அரசனின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசமனைத்தினையும் தான் பார்வையிட வேண்டுமென்பதே அந்த வேண்டுகோள். தன் மனைவி தன்னிடம் கேட்கின்ற அந்த வேண்டுகோளினை ஏற்றுக் கொண்ட மன்னவன் இளவரசியின் விருப்பத்திற்கிணங்க தன் ஆட்சிக்குட்பட்ட பிரதேசமனைத்தினையும் பார்வையிடுவதற்காக கப்பலை கிழக்கு கரையோரமாக திருப்புமாறு கட்டளை பிறப்பித்தான். மன்னவனின் கட்டளைக்கிணங்க கப்பலும் கிழக்கு கரையோரமாக நகர்ந்தது.
இலங்கையின் வளம் பொருந்தியதும் செழிப்பான பிரதேசமாகவும் காணப்பட்ட கிழக்கின் அழகினை கப்பலில் இருந்தவர்கள் ரசித்துக் கொண்டு சென்றனர். கிழக்கிலங்கையின் நீர் வளமும் நில வளமும் பச்சைப்பசேலென்று செழித்துக்கிடந்த மரங்களும் நீலச்சேலை விரிக்கப்பட்டது போன்று காணப்பட்ட கிழக்குக்கடலின் எழிலும் அவர்களை ஆச்சரியத்திற்கும் ரசனை உணர்விற்கும் இட்டுச் சென்றது.
இவ்வாறு கிழக்கின் எழிலினை ரசித்தவண்ணம் உல்லாசமாக பயணித்துக் கொண்டிருந்த அவர்கள் கிழக்கின் முக்கிய இடமாக விளங்குகின்ற திருகோணமலை கடற் பிரதேசத்திலே பயணித்துக் கொண்டிருந்தபோது திருக்கோணேசர் பெருமானின் ஆலயம் அவர்களின் கண்களுக்கு புலப்பட்டது. கோணேசர் பெருமானின் ஆலயத்திற்கு கப்பலில் இருந்த அனைவரும் கோணேசப் பெருமானை மனமுருக வழிபட்டனர். இவ்வேளையில் கப்பலில் கோளாறு ஏற்படட்டது போல் கப்பல் ஆலயத்திற்கு முன்பாக தடைப்பட்டு நின்றது. கப்பலின் இவ்வாறான நிலமை அதிலிருந்த அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.
“கோணேசப் பெருமானை மனதிலே நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இவ்வாறு கப்பல் தடைப்பட்டிருப்பது இறைவனின் செயலன்றி வேறில்லை" என நினைத்த இளவரசியார் கப்பலில் இருந்த தன்னுடன் வந்தவர்களிடம் கப்பல் நின்றமைக்கான காரணத்தினை கண்டறியுமாறு பணித்தாள். அவ்வேளையில் அங்கிருந்தவர்களில் சிந்தன் என்பவன் அதனை அறியும் பொருட்டு நீரிலே இறங்கி கப்பலின் அடியில் சென்று கப்பல் ஏதாவது பாறைகளில் முட்டி இருக்கின்றதா என்பதனை ஆராய்ந்தான். எனினும் கப்பல் அப்படியான எந்த ஒரு பொருளிலும் முட்டி மோதவில்லை. சாதாரணமான நிலையிலேயே காணப்பட்டது. அப்போது சிந்தனுடைய கண்களில் விக்கிரகம் ஒன்று தென்பட்டது. அதனை அருகே சென்று பார்த்தபோது அது ஒரு விநாயகர் விக்கிரகம் என்பது சிந்தனுக்கு தெளிவாகியது. எனவே இவ்விடயத்தினை அவன் கப்பலிலே உள்வர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தினான்.
இதனை அறிந்த அரசியார் மீண்டும் ஒரு முறை இறைவனை தியானித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் அவ்விக்கிரகத்தினை மேலே கொண்டு வருமாறு பணித்தாள். அரசியாரின் வேண்டுகோளிற்கிணங்க சிந்தனும் அவ்விக்கிரகத்தினை நீரில் இருந்து வெளியேற்றி கப்பலிலே சேர்த்தான். அதனைக்கண்ட மன்னன் அரசியார் உட்பட்ட அனைவரும் வியப்புற்றனர். எவ்வாறு இவ்விக்கிரகம் கடலில் வந்து சேர்ந்தது என பலவாறும் வினவினர். எது எவ்வாறாயினும் இறைவன் செயலாகத்தான் இவ்விக்கிரகம் தமக்கு கிடைத்ததாக நினைத்த சீர்பாததேவியார் அவ்விக்கிரகத்தின்பால் ஒரு நேர்த்திக்கடனை முன்வைத்தார். அதாவது தாங்கள் பயணம் செய்யும் இந்தக்கப்பல் எந்த இடத்தில் தரித்து நிற்கின்றதோ அவ்விடத்தில் இவ்விக்கிரகத்தினை வைத்து பிரம்மாண்டமான ஒரு ஆலயத்தினை அமைப்பதாக கூறி கப்பலினை தொடாந்து செலுத்துமாறு கூறினார். அதன்படி கப்பலும் தொர்ந்து பயணத்தினை ஆரம்பித்தது.
பயணத்தினை தொடர்ந்த கப்பலானது மட்டக்களப்பு வாவியின் தெற்குத் திசைநோக்கி பயணித்து வாவியின் அந்தமான வீரர்முனை என்ற இடத்தினை கரை தட்டியது. இந்த வீரர்முனை ஆதிகால ஆட்சி வரலாற்றில் முக்கியமான ஒரு இடமாக காணப்பட்டது. அதாவது கி.மு.237 தொடக்கம் கி.மு.215 வரையான காலப்பகுதியில் கூர்த்திகன் என்னும் தமிழ் மன்னன் தன் சகோதரனான சேனன் என்பவனுடன் இணைந்து அக்காலப்பகுதியில் அநுராதபுரத்தினை ஆட்சிசெய்த “சூரதீசன்” என்ற மன்னனை போரில் வெற்றி கொண்டு அநுராதபுரத்தை ஆட்சி செய்தான்; என்பதனை மகாவம்சத்தினூடாக அறிய முடிகின்றது. கூர்த்திகன் கி.மு.3ம் நூற்றாண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு நகரத்தை அமைத்தான் எனவும் வீரர்முனை என அழைக்கப்படுகின்ற இவ்விடத்தில் காவல் அரண்களை அமைத்ததாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறு போர்வீரர்கள் காவல் அரணில் அமர்த்தப்பட்டதனால் “வீரர்முனை” என பெயர் வழங்கப்பட்டது என்பது வரலாற்று உண்மை. இவ்வாறான வரலாற்று சிறப்புக்கள் வாய்க்கப்பெற்ற வீரர்முனையிலே சீர்பாததேவியும் அவளுடைய குழுவினரும் வந்த கப்பல் கரை தட்டியது.
இவ்வாறு வீரர்முனையிலே கப்பல் கரை தட்டி நின்றதும் சீர்பாததேவி மிகவும் மனமகிழ்ச்சியடைந்தார். காரணம் வீரர்முனையின் இயற்கை அழகும் வளம் பொருந்திய அமைவிடமும் ஆகும். மக்கள் வாழ்கின்ற பிரதேசத்திலே ஆலயம் அமைக்கப்படுகின்ற போதுதான் அவ்வாலயத்தினை பராமரித்து அபிவிருத்தி செய்ய முடியும். எனவே வீரர்முனை என்கின்ற இடமானது மக்கள் குடியிருப்புக்களை அமைப்பதற்கேற்ற அனைத்து விதமான வளங்களையும் வசதிவாய்ப்புக்களையும் கொண்டதொரு இடமாக காணப்பட்டது. இவ்வாறான இடத்தில் தங்களுக்கு கிடைத்த விநாயர் விக்கிரகத்தினை வைத்து அழகியதொரு ஆலயத்தினை அமைத்து இவ்விடத்தின் அழகினை மேலும் செழிப்படையச் செய்யும் நோக்கோடு கப்பலில் வந்தவர்கள் அனைவரும் தங்குவதற்காக அவ்விடத்தில் கூடாரங்கள் அமைக்கப்படன.
வீரர்முனையிலே ஆலயம் அமைக்கும்பணி துரிதமாக ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இக்காலப்பகுதியில் வீரர்முனையிலே எவரும் குடியிருக்காமையினாலும் கப்பலில் வந்தவர்கள் ஆலயம் அமைப்பதற்குப் போதாமையினாலும் பாலசிங்கன் வீரர்முனையை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்தவர்களை ஆலயம் அமைக்கும் பணியில் ஈடுபடுத்தினான். சிறந்த தேர்ச்சி பெற்ற கட்டிடக்கலைஞர்களினதும் மக்களினதும் முழுமூச்சான செயற்பாட்டினால் அழகியதும் சிறப்புமிக்கதுமான ஆலயம் அமைக்கப்பட்டது. சீர்பாததேவியின் நேர்கடன் நிறைவடைகின்ற தருணம் நெருங்கியதைத் தொடர்ந்து அரசியாரும் மன்னவனும் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். ஆலயத்தின் நிர்மாண வேலைகள் யாவும் நிறைவு பெற்ற நிலையில் அடுத்த கட்ட செயற்பாடுகளான கிரியைகள் செய்யும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன் பலனாக சோதிடர் குறிப்பிட்டதும் ஆகம முறைக்கு ஏற்றதுமான ஒரு சுப நாளில் விநாயகப் பெருமானுடைய திருவுருவம் ஆலயத்திலே எழுந்தருளப்பட்டு ஆலயத்திலே செய்து முடிக்க வெண்டிய கிரியைகள் அனைத்தையும் பாலசிங்கன் செய்து முடித்தான். சிந்து யாத்திரையின் பயனாக (அதாவது சிந்து என்பது கடல் எனவே கடல் யாத்திரை என்ற அர்த்தத்தினை கொண்டது) கிடைத்த விநாயகர் என்றபடியால் சிந்து யாத்திரைப்பிள்ளையார் என திரு நாமம் சூட்டப்பட்டு வீரர்முனையிலே சிந்து யாத்திரைப் பிள்ளையாருக்கு திருவிழா எடுப்பித்து மகிழ்ந்தனர்; பாலசிங்கனும் சீர்பாததேவியும்.
தான் ஆலயம் அமைப்பதாக கொண்ட எண்ணம் நிறைவு பெற்ற மகிழ்ச்சி சீர்பாததேவியின் மனதினை ஆட்கொண்டது. எனினும் ஆலயம் அமைக்கும் பணி நிறைவடைந்தமையோடு தமது அரச குலத்தவர்களின் பணி இவ்வாலயத்தில் நிறைவு பெறக்கூடாது என்ற நன்நோக்கோடு தொடர்ச்சியாக இவ்வாலயத்தினை தன்னுடைய அரச பரம்பரையினர்தான் பராமரித்து சிறப்பிக்க வேண்டும் என்ற நீண்டதொரு எண்ணத்துடன் கப்பலில் தனக்க துணையாக வந்த தன் அரச பரம்பரையினை சேர்ந்த அரச குலத்தவர்களான சிந்தன், காங்கேயன், காலதேவன், பெண்பழச்சி, முழவன், வெள்ளாயி, நரையாகி, போன்றோரையும் கண்ணப்ப முதலி என்னும் வேளாளர், முத்துநாயக்கச் செட்டி, சதாசிவச்செட்டி, சங்ரச்செட்டி போன்ற செட்டிமார்களும் சந்திர சேகர ஐயங்கார், அச்சுத ஐயங்கார் எனும் அந்தணர்கள் மற்றும் அவர்களின் மனைவிமார் போன்றோரையும் வீரர்முனைக் கிராமத்திலே குடியமர்த்த முடிவு செய்தார் சீர்பாததேவியார்.
அரசியாரின் விருப்பின்படி சோழநாட்டு மக்கள் அனைவரும் வீரர்முனையிலே குடியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு நிலம் சொத்துக்கள் என்பன வழங்கப்பட்டது. அது மாத்திரமன்றி ஆலயத்திலே பூசை வழிபாடுகள் செய்து வருவதற்காகவும் அதனைப் பராமரிப்பதற்காகவும் அவ்வாலயத்தினை அண்டி வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை வழமானதாக அமையவும் நெற்காணிகளையும் வழங்கி, அவர்கள் அனைவரையும் அழைத்து வாலசிங்க மன்னன் அவர்களை நோக்கி “இதில் அரச குலத்தவர்கள், அந்தணர்கள், செட்டிமார், வேளாளர் போன்ற அனைத்து குலத்தவர்களும் ஒன்றுபட்டு நிற்கின்றீர்கள் நீங்கள் அனைவரும் உங்கள் இளவரசியின் பெயரால் சீர்பாத குலம் என ஒரு குலமாக வகுக்கின்றேன். இன்று முதல் நீங்கள் அனைவரும் அரசகுலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் என்பதிலிருந்து விலகி சீர்பாதகுலத்தவர் என்ற பெருமையுடன் எக்காலத்திலும் உங்களுக்குள் வேற்றுமை இல்லாதவர்களாய் ஒற்றுமையாக வாழ்வதோடு சிந்து யாத்திரைப் பிள்ளையாருக்காக இது முதலாக வீரர்முனையிலே நிரந்தரமாக வாழ ஆரம்பிக்கின்ற நீங்கள் சாதாரணமானவர்கள் அன்று சோழ இளவரசியான சீர்பாத தேவியின் உறவினர்கள். அந்தவகையில் நீங்கள் அரசகுல கௌரவத்தினை உடையவர்கள். இதன்படியாக உங்களுக்கு அரவிந்தமலர்,செங்கோல், கொடி என்பன பொறிக்கப்பட்ட அரசகுல விருதினை வழங்கி உங்களை ஈழத்திலே உயர்வானவர்கள் என்ற மதிப்பினையும் அளிக்கின்றேன்” என்று கூறினான்.
திருமணம்
ஆண் ஒரு குடியிலும் பெண் வேறு குடியிலுமாக அமைந்த சம்பந்தமே இங்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட திருமண சம்பந்தமாகும். சகோதரனின் மகனோ அல்லது மகளோ சகோதரியின் மகளையோ அல்லது மகனையோ திருமணம் செய்வதையே ஏற்றுக் கொள்ளப்பட்ட சமூகக் கொள்கையாக அமைந்துவந்தது. ஆனால் இன்று பெற்றோர் உடன்பிறந்தவர்களை திருமணம் செய்வதால் அங்கவீனமான குழந்தைகள் பிறப்பதாக கருதி, இம்முறை படித்தவர்களிடம்குறைந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. அத்தோடு வேறுகுலத்தவரிடையே சென்று திருமணம் புரிவதைவிட இக்குலத்தில்திருமணம் செய்வது சிறப்பானதாக கருதுகின்றனர். திருமணம் என்பதற்கு கலியாணம், கண்னாலம், வதுவை, மணவணி, மணவினை, விவாகம் என பல பெயர்களும் உள்ளன சீர்பாத குல மக்களின் திருமண சம்பந்தமானது பின்வருமாறு அமைந்து விடுகின்றது
1. பெற்றேர்ர் சாணைக்குறியிடுவதன் மூலம் சாணைத்திருமணம் 2. பெற்றோர் தேர்ந்தெடுப்பதன் மூலம் பேச்சுத்திருமணம் 3. ஆணும் பெண்னும் தாங்களாகவே விரும்புவதன் மூலம் காதல் திருமணம் என்பனவாகும்.
குழந்தையை பிரசவிக்கும் வேளையில் பிறந்த குழந்தையை கழுவிய் பின்னர் உடனிருந்தும் உதவிபுரியும் மச்சாள் இந்நதப்பிள்ளைக்கு எனது இன்ன மகனே மணமகனாவான் எனக் கூறி பிள்ளையின் வயிற்றின் மீது மடித்த சீலைத் துண்டொன்றை போடுவாள் குழந்தையின் உபயோகத்திற்கு பயன் படும் துணிகளை சாணை என்னும் பெயரால் வழங்குவது வழக்கு. அவ்வகையில் குழந்தையின் மீது போடப்பெற்ற சீலையும் சாணையாகின்றது இதுவே சாணைக்குறியென்று அழைக்கப்பட்டது. இவ்வாறு சாணைக்குறி மூலம் தீர்மாணிக்கப்பட்ட குழந்தைகள் இருவரும் வளர்ந்து உரிய பருவம் அடைந்நததும் இவர்களுக்கு திருமணம் நடாத்தி வைக்கப்படுகின்றது. இவ்வாறு சாணைக்குறியிடுவதன் மூலம் ஏற்படும் திருமண வாழ்க்;கை தற்காலத்தில் மறைந்து செல்வதை காணக்கூடியதாகவும் உள்ள்ளது. ஆணும் பெண்னும் ஒருவரையொருவர் கருத்தொருமித்து ஆதரவு பெற்று திருமணம் செய்வர் இத்திருமணம் பெற்றார் விருப்பத்துடனும் அன்றேல் பெற்றார் விருப்பிமின்றியும் நடை பெறலாம்.
தற்காலத்தில் சோதிடப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதே பெருவழக்காக உள்ளது திருமணப் பொருத்தம் பார்த்தல் என்பது ஆணினதும் பெண்ணினதும் பிறந்த சோதிடக் குறிப்புகளைக் கொண்டு சோதிடர் நிபுணர்த்துவம் மூலமாக பொருத்தம் பார்த்தல். அப்பொருத்தங்கள் பதினான்காகும் இருந்தாலும் பெரும்பான்மை பத்துப் பொருத்தங்களே உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இவைகளும் கிரகப் பொருத்தத்துடன் நட்சத்திரப்பொருத்தம், கணப்பொருத்தம், இரட்சிப் பொருத்தம், யோனிப் பொருத்தம், இராசிப் பொருத்தம் ஆகிய ஐந்தும் முக்கியமானதாகும் இவை ஐந்திலும் யோனிப் பொருத்தம் இரட்சிப்பொருத்தத்துடன் சேர்ந்து பொருந்த வேண்டும் இவ்வாறு பார்க்கப்பட்ட பொருத்தம் பெரும் பான்மை பொருந்துமாயின் மட்டுமே திருமணப் பேச்சுவார்த்தை தொடரப்படும்.
இரு பகுதியினரிடையேயும் பொருத்தம் திருப்தியாக அமைந்ததை தொடர்ந்து பெண்ணின் தந்தை, தாய் மாமன், நெருங்கிய உறவினர் சேர்ந்த குழுவொன்று ஆணின் வீட்டுக்குச் சென்று சம்பந்தம் பேசுவர் மேற்படி சென்ற பெண் வீட்டாரை ஆண் வீட்டார் வரவேற்று உபசரிப்பர் அவ்விருந்துபசாரத்தின் பின்பு ஆண் வீட்டார் பெண் வீட்டாரிடம் வந்துள்ள நோக்கத்தைப் பற்றி வினாவ பெண்ணின் தந்தை நோக்கத்தை வெளிப்படுத்துவார் சில இடங்களில் அக் குழுவின் மதிப்பிற்குரி ஒருவராலும் நோக்கம் வெளிப்படுத்தப்படும் இக்கலந்துரையாடலில் சீதனம் பற்றிய பேச்சுவார்த்தைகளும் இடம் பெறும் சீதனம் என்பது வீடு, காணி, நகை, பணம் முதலியவற்றை பெண் வீட்டார் மணமக்களுக்கு வழங்குவதைக் குறிக்கும்.
பிறகு மணமக்களுக்கு ஆறுமாத உணவு வழங்கல் முதல் பிரசவத்தின் செலவுகளை ஏற்று நடத்தல் என்பன இங்கு பாரம்பரிய வழக்கமாகும். பெற்றோர் தம்மிடமுள்ள நில புலங்களை பெண்பிள்ளைகளின் எண்ணிக்கைக்கேற்ப பங்கீடு செய்து அவர்களின் பங்கினை சீதனமாகக் கொடுப்பதும் இதனுள் உள்ளடங்கும் எனினும் நில புலன்கள் வழங்குவது கட்டாயமானதல்ல “குடியிருக்க மனையும் ஆறுமாதச் சோறும்” என்பது இங்கு முதியோர் மொழியாக உள்ளது. பெண்பிள்ளைக்கு வீடு, சீதனம் என்பது இலட்சுமி கரமான செல்வம் என்பதாகும். வரதட்சணையெனவும் கூறுவர் வரதட்சணை என்பது மணமகனுக்கு வழங்கும் தட்சணை என்பதாகும் ஆதியில் ஆண் வீட்டார் கொடுப்பதாக இருந்து தற்போது பெண் வீட்டார் கொடுப்பதாக மாறிற்று.
இங்கு ஒரே குடிக்குள் திருமணம் நடைபெறாது. இங்கு ஒரே குடித்திருமணத்தை தகாப் புணர்ச்சியாக அடையாளப்படுத்தப்படுகின்றது. சீர்பாத குலக் குடிகள் எவை எவை முறையான குடிகள் என ஒருவரையறை உண்டு. அதில் சிந்தாத்திரன் குடியினர் பாட்டுவாழி குடி, முடவன் குடி இரண்டிற்கும் மண உறவு சம்மந்தக் குடிகளாகும். இதனால் சிந்தாத்திரன் குடிக்கு இவையிரண்டும் “மைத்துனன் குடி” என்றழைக்கப்படுவது மரபாகும். இவ் மரபு அவர்களது வாழ்கையில் பேணப்பட்டு இக்குடிகள் தங்களுக்குள் திருமணம் செய்கின்றமை பெருமைக்குரிய விடயமாகக் கொள்ளப்படுகின்றது.
சிந்தாத்திரன், பாட்டுவாழி இரண்டினதும் திருமணசம்மந்தம் பற்றிய வாய்மொழி மரபிலான வரலாற்றுக்கதை ஒன்று உண்டு. சிந்தன்வழி வந்தோன் - கோரைக்கிளப்பில் சிவக் கொழுந்து என்னும் பெண்ணைக் கொண்டுவந்து திருமணம் செய்த போது சிவக்கொழுந்துவின் அண்ணன் “தங்கையின் வழித்தோன்றல்கள் சிந்தாத்திரன் குடி வழியினரைத் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறினானாம்” அது மரபு வழி பேணப்பட்டு வந்தமையினாலே பாட்டுவாழி குடி சிந்தாத்திரன் குடிக்கு மைத்துனன் குடியாகின்றன. இதனைப் போல முடவன் குடிப்பெண் ஆரம்பத்தில் சிந்தாத்திரன் குடிப் பெண்ணைத்திருமணம் செய்திருக்க வேண்டும் என்பது புலனாகின்றது. இக் குடிகளைப் போன்று செம்பகநாச்சி குடிகளும் அதிகமாக ஊசாடி குடி வழியினரை திருமண உறவு கொள்ளும் குடியினராக உள்ளனர். இதனைத்தவிர ஒரேகுடிக்குள் திருமணம் செய்யாது எல்லோரும் எல்லாக் குடிவழியிலும் திருமணம் செய்கின்றனர். இங்கு பொருளாதார நிலையே திருமணத்தில் செல்வாக்கு செலுத்துகின்றது.
சீர்பாத சமூகத்தினர் வேறு சமூகத்தவருடன் திமணம் செய்தல் கல்வி கற்ற அரசாங்க தொழில் புரிபவர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றன. இங்கு சீர்பாத குலத்தில் படித்து தொழில் பெற்ற இளைஞர்கள் தங்கள் எதிர்கால வாழ்கையில் பெருளாதாரமும், நவீனத்துவம் இவை இரண்டையும் அடிப்படைக் காரணங்களாகக் கொண்டு வேறு சமூகத்தில் திருமணபந்தத்தில் இணைகின்றனர். புறத்திருமணமோ, அகத்திருமணமோ இங்கு சீதனம் என்பது முக்கியமாக உள்ளது. அதில் கல்வி கற்று தொழில் புரிபவரிடம் அதிகம் எனலாம். இங்கு தாய்வழி உரிமை பேணப்படுவதால் பெண்வீட்டாரே திருமணமான குடும்பத்திற்கு எதிர்கால வாழ்வை வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுப்பர் அதனால் பிள்ளைக்கு வீடு, வயல், மற்றும் வீட்டுப் பொருட்கள் என்பன அவ் வீட்டின் பொருளாதார வசதிக்கு ஏற்ப பங்கிட்டுக் கொடுப்பர்.
சீர்பாதர் வாழும் இடங்கள்
- வீரமுனை
- துறைநீலாவணை
- சேனைக்குடியிருப்பு/கல்முனை
- குருமண்வெளி
- மல்வத்தை
- மண்டூர்
- மத்தியமுகாம்/சென்றல் கேம்ப்
- இறாணமடு
- வீரச்சோலை
- மல்லிகைத்தீவு
- வளத்தாப்பிட்டி
- நாவிதன்வெளி
- திருக்கோவில்
- கஞ்சிகுடிச்சாறு
- 7ம் கிராமம்
- 15ம் கிராமம்
- 13ம் கிராமம்
- 11ம் கிராமம்
- 6ம் கிராமம்
- 35ம் கிராமம்
மேலும் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் மற்றும் 1990ம் ஆண்டு இனக்கலவரம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெயர்ந்து வாழ்வதுடன் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர்.