சீனிவாசகம் தர்ம ராஜா

சீனிவாசகம் சகோதரர்கள் மலேசியா, பேராக், ஈப்போ வில் புகழ் பெற்றத் தமிழர்கள். இவர்களில் மூத்தவர் எஸ்.பி.சீனிவாசகம். இளையவர் டி. ஆர். சீனிவாசகம். இவருடைய முழுப் பெயர் தர்ம ராஜ சீனிவாசகம். சகோதரர்கள் இருவரும் இணைந்து 1953ல் மக்கள் முற்போக்கு கட்சியை (People’s Progressive Party) உருவாக்கினர். பின்னர் அக்கட்சியின் தலைவராக டி. ஆர். சீனிவாசகம் பொறுப்பு ஏற்றார்.

டி.ஆர்.சீனிவாசகம்

D.R.Seenivasagam
தனிநபர் தகவல்
பிறப்பு தர்ம ராஜா சீனிவாசகம்
1921
இறப்பு 15 மார்ச் 1969
ஈப்போ, பேராக், மலேசியா
அடக்க இடம் ஈப்போ, பேராக், மலேசியா
தேசியம் மலேசியர்
அரசியல் கட்சி மக்கள் முற்போக்கு கட்சி
பிற அரசியல்
சார்புகள்
ம.மு.கட்சி 1974ல் பாரிசான் நேசினல் கட்சியுடன் இணைந்தது.
வாழ்க்கை துணைவர்(கள்) திருமணம் ஆகாதவர்
இருப்பிடம் டைகர் லேன், ஈப்போ, பேராக்
பணி வழக்கறிஞர், அரசியல்வாதி
தொழில் 1958ல் ஈப்போ மாநகர மேயர், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்
அமைச்சரவை தலைவர், மக்கள் முற்போக்கு கட்சி
சமயம் இந்து

மலாயா சுதந்திரம் அடைவற்கு முன்னால் உருவாக்கப் பட்ட சில அரசியல் கட்சிகளில் இக்கட்சியும் ஒன்று. இவருடைய தலைமைத் துவத்தின் கீழ் 1958 ஆம் ஆண்டு ஈப்போ முனிசிபல் மன்றம் கைப்பற்றப் பட்டது. சீனர்களின் ஆதிக்கத்தில் ஈப்போ இருந்தாலும் ஒரு தமிழரைச் சீனர்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அனைத்து தரப்பு சீனர்களும் சீனிவாசகம் சகோதரர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கினர்.

அப்போதைய மலாயாவில் சகோதரர்கள் இருவரும் மிகவும் புகழ் பெற்ற வழக்கறிஞர்கள். இவர்கள் வாதாடி வென்ற பல வழக்குகள் மலாயா வாழ் மக்களிடையே அவர்களுக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்தன.

வரலாறு

ஏழ்மையான நிலையில் உள்ளவர்களிடம் சகோதரர்கள் இருவரும் கட்டணம் வாங்காமல் நீதிமன்றத்தில் வழக்காடினர். வயதானவர்களுக்கு இலவசமான சமூகச் சேவைகளை வழங்கினர். அதுவே அவர்கள் அரசியலில் காலடி எடுத்து வைக்க மிக்க உறுதுணையாகவும் நல்ல ஓர் அடித் தளமாகவும் அமைந்தது.

சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் என மக்கள் அனைவரிடமும் சகோதரர்கள் இருவரும் விசுவாசமாக நடந்து கொண்டனர். 1957 ஆம் ஆண்டு ஈப்போவின் மக்களவை உறுப்பினராக டி.ஆர்.சீனிவாசகம் தெரிவு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் ஈப்போ மக்களுக்காகக் குரல் கொடுத்தார். மனித அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினார்.

சீனர்களின் ஆதரவு

பேராக் மாநிலம் மக்கள் முற்போக்கு கட்சியின் கோட்டை என்று சொல்லலாம். இந்த மாநிலத்தில் இருந்து அதிகமான ஆதரவு அக்கட்சிக்கு கிடைத்தது. குறிப்பாக, மலேசிய சீனர்கள் சமுதாயத்தின் வாக்காளர்கள் அக்கட்சிக்கு மிகுந்த ஆதரவை வழங்கினர்.

1957-இல் ஈப்போவின் மக்களவை உறுப்பினராக இருந்த துன் லியோங் இவ் கோ என்பவர் மலாக்கா மாநிலத்தின் கவர்னராகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றார். அதனால் ஈப்போ நாடாளுமன்றத் தொகுதி காலியானது. அந்தத் தொகுதிக்கு டி.ஆர். சீனிவாசகத்தின் பெயர் முன்மொழியப் பட்டது.

மலேசியர்களின் மலேசியா

சீன வாக்காளர்களின் ஆதரவினால் துன் லியோங் இவ் கோ நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் தலைவராகவும் பதவி வகித்தார்.

1965-ஆம் ஆண்டு Malaysian Solidarity Council எனும் மலேசிய ஒருமைப்பாட்டு மன்றத்தை உருவாக்கினார். இந்த மன்றத்தில் மக்கள் செயல் கட்சி, ஐக்கிய ஜனநாயக் கட்சி போன்றவை இடம் பெற்று இருந்தன. மலேசியர்களின் மலேசியா எனும் ஒரு புதிய கொள்கை மலேசியாவில் உருவாக்கப் பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அரசியல்

சீனிவாசகம் சகோதரர்களின் கட்சி, 1954-ஆம் ஆண்டில் பேராக் முன்னேற்றக் கட்சி எனும் பெயரில் இருந்து 1956ல் மக்கள் முன்னேற்றக் கட்சி என்று மாற்றம் கண்டது. 1957-இல் நடந்த இடைத்தேர்தலில் ம.மு.க. ஈப்போ நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றது. 1959 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் 4 நாடாளுமன்ற, 8 சட்டமன்ற இடங்களை வென்றது.

1960 இடைத் தேர்தலில் மேலும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியை அக்கட்சி வென்றது. தொடர்ந்து வந்த தேர்தல்களில் பல இடங்களை வென்று சரித்திரம் படைத்தது. அதன் பிறகு நீண்ட காலம் வலுவான எதிர்க் கட்சியாகவும் ம.மு.க விளங்கி வந்தது.

நாடு முழுமையும் இக்கட்சிக்கு 3000 கிளைகளும் 500,000 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இப்போது 2010ஆம் ஆண்டுகளில் டத்தோ எம். கேவியஸ் என்பவர் தலைவராக இருக்கின்றார். புதிய தலைமுறையில் பதவிப் போராட்டங்கள் பல பரிணாமங்களில் மேடை ஏறி வருகின்றன. ஆனால், சீனிவாசகம் சகோதரர்கள் விட்டுச் சென்ற சுவடுகள் மட்டும் இன்னும் சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றன. அவை காலத்தால் அழிக்க முடியாதவை.

டி.ஆர் சீனிவாசகம் பூங்கா

15 மார்ச் 1969-இல் டி.ஆர். சீனிவாசகம் மாரடைப்பினால் இறந்தார். அவர் இறக்கும் போது அவருக்கு வயது 48. அதிகமாகப் புகைபிடித்தல் அவருடைய மாரடைப்பிற்கு மூல காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அவருடைய உடல் ஈப்போ சாலைகளின் வழியாக எடுத்துச் செல்லப் பட்ட போது 150,000 பேர் தெருக்களில் நின்று இறுதி மரியாதை செய்தனர். பெரும்பாலான மக்கள் வேலைக்குச் செல்லாமல் விடுப்பு எடுத்து இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

அவர் இறந்த பிறகு அன்னார் ஆற்றிய சேவைகளுக்கு மரியாதை செய்ய பேராக் மாநில மக்கள் விரும்பினர். அதன் படி 1960 ஆம் ஆண்டு ஈப்போவின் காரனேஷன் பூங்காவின் பெயர் டி.ஆர்.பூங்கா என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது. ஆயிரக் கணக்கான மலர்ச் செடிகள் இந்த அழகிய பூங்காவில் உள்ளன.

சேவைகள்

டி.ஆர். சீனிவாசகம் அவர்கள் பேராக் வாழ் மக்களுக்கு நிறைய உதவிகளைச் செய்து உள்ளார். இவருக்கு அங்காடிக்காரர்கள், தொழிலாளர்கள், சாப்பாட்டுக் கடைக்காரர்கள் அன்றாட நண்பர்களாக இருந்து உள்ளனர். பள்ளிப் பிள்ளைகளுக்கு கைச் செலவுகளுக்கு காசு கொடுக்கும் ஒரு பழக்கம் இவரிடம் இருந்துள்ளது. அதனால் அவருடைய அலுவலகத்தின் முன் அனுதினமும் பள்ளிச் சீருடை அணிந்த மாணவர்களைப் பார்க்க முடியும்.

ஈப்போ இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று அவர்களுக்குக் கணிசமான அளவு மான்யம் வழங்கி ஊக்கம் அளித்துள்ளார். கிந்தா இந்தியர் காற்பந்து சங்கத்தின் புரவலராகப் பணியாற்றிய காலத்தில் பல இந்தியக் காற்பந்து வீரர்கள் தோன்றுவதற்கு இவர் முன்னோடியாக இருந்து இருக்கிறார்.

ஈப்போ நகராட்சி மன்றத்தின் தலைவராக இருக்கும் போது இவர் நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி இருக்கிறார். பல ஆயிரம் பேருக்கு குடியுரிமை பெற்றுத் தருவதில் முன்னோடியாகவும் திகழ்ந்து உள்ளார். இவருடைய அலுவலகத்தில் யார் எப்பொழுது வேண்டும் என்றாலும் நுழைந்து உதவிகள் கேட்கலாம். சீன மொழியில் நன்கு பேசக் கூடிய இவர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை. இவருடைய சகோதரி ஒருவர் இன்னும் ஈப்போவில் வாழ்கிறார்.

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.