கூழங்கைத் தம்பிரான்

கூழங்கைத் தம்பிரான் (இறப்பு: ஆகத்து 1795)[1] ஒல்லாந்தர் கால இலங்கையில் யாழ்ப்பாணத்தில் கிபி 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சிற்றிலக்கியப் புலவர். இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் சித்தாந்த சாத்திரங்களிலும் மிக்க பாண்டித்திய முடையவர்.[2]

வாழ்க்கைச் சரிதம்

இவர் காஞ்சிபுரத்தில் பிறந்தவர்.[3] இயற்பெயர் கனகசபாபதி.[2]திருப்பனந்தாள் மடத்திலிருந்தபோது, அம்மடாதிபதி தம்முடைய கண்டிகை களவு போயினமை காரணமாகச் சந்தேகங் கொண்டு அவரைச் சத்தியம் செய்யுமாறு கேட்க, அவர் உருக்கிய நெய்யிலே கையிடச்சொன்னாலுஞ் செய்வேனென்று கூறி, அவ்வாறு கூசாது கையிட்டுத் தன் சத்தியத்தை நாட்டி அதனாற் கை கூழையாகப் பெற்றவர் என்று கூறுவர்.

யாழ்ப்பாணம் வந்த இவருக்கு வண்ணார்பண்ணையில் இருந்தவரும் பிற்காலத்தில் வண்ணார்பண்ணைச் சிவன் கோவிலைக் கட்டுவித்தவருமான வைத்திலிங்கச் செட்டியாரின் தந்தை கோபாலச் செட்டியார் என்னும் வணிகர் நண்பராய் இருந்து பரிபாலித்து வந்தார்.[2] தம்பிரான் பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூலுக்கு விளக்கம் எழுதினார். போர்த்துக்கீச, ஒல்லாந்து மொழிகளையும் நன்கு கற்றறிந்து கொண்டார். யோசேப்பு புராணம் என்னும் காவியத்தை 21 காண்டத்தில் 1023 விருத்தத்தில் பாடி தமது நண்பரான பிலிப்பு தெ மெல்லோ பாதிரியாருக்கு அர்ப்பணம் செய்தார். பிற்காலத்தில் சுண்டிக்குளி சிவியா தெரு இவருக்கு உறைவிடமாய் இருந்தது.

இயற்றிய பிரபந்தங்கள்

  • சித்திவிநாயகர் இரட்டைமணிமாலை
  • நல்லைக் கலிவெண்பா
  • தேவப்பிரசை திருக்கதை யோசேப்புப் புராணம்
  • கூழங்கையர் வண்ணம்
  • நன்னூற்காண்டிகையுரை

மேற்கோள்கள்

  1. John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 8
  2. இரா. வை. கனகரத்தினம். "கூழங்கைத் தம்பிரான்: ஒரு மதிப்பீடு". பண்பாடு 1999.07. பார்த்த நாள் 29 மே 2016.
  3. பாவலர் சரித்திர தீபகம், ஆணல்ட் சதாசிவம்பிள்ளை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.