வைத்திலிங்கம் செட்டியார்

வைத்திலிங்கம் செட்டியார் சோழ நாட்டிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் வசித்துவந்தவரும், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஒல்லாந்தரிடம் மொழி பெயர்ப்பாளராயிருந்த கொச்சிக் கணேசையர் என்பவரிடம் உத்தியோகம் பார்த்துவந்தவருமான கோபாலச் செட்டியார் என்பவருடைய மகனாவார். ஒரு பொழுது கொச்சிக் கணேசையருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து கோபாலச் செட்டியார் அவர்கள் அவரை விட்டு விலகிச் சொந்தமாக வியாபாரம் செய்து வந்தார். இவ் வியாபாரம் மூலம் செட்டியாருக்கு ஒல்லாந்த தேசாதிபதியின் தொடர்பு கிடைத்தது. செட்டியாரின் நற்பண்புகள் காரணமாகத் தேசாதிபதியின் மனைவியும் செட்டியாரிடம் நல்ல நம்பிக்கை வைத்திருந்தாராம். ஒருமுறை தேசாதிபதியின் மனைவி சிறுவனாயிருந்த வைத்திலிங்கனைக் கோபாலச் செட்டியாரின் கடையிற் காண நேர்ந்த போது அவனைத் தன்னுடன் மாளிகைக்கு அழைத்துச் சென்றாராம். அன்றிலிருந்து வைத்திலிங்கனின் பெரும்பகுதி நேரம் மாளிகையிலேயே கழிந்தது. அங்கே அவர் ஒல்லாந்த மொழியையும் கற்றுக்கொண்டார்.

இளைஞனாக வளர்ந்த வைத்திலிங்கனுக்கு முத்துச் சலாபம் குத்தகை எடுக்க எண்ணம் ஏற்பட்டது. தேசாதிபதியின் மனைவியுடைய உதவியின் பேரில் முத்துச் சலாபக் குத்தகை வைத்திலிங்கனுக்குக் கிடைத்தது, அதன் மூலம் பெருமளவு வருமானமும் ஈட்டிக்கொள்ளக்கூடியதாக இருந்தது. தொடர்ந்து மூன்று தடவை குத்தகை எடுத்துப் பெரும் இலாபமீட்டிய இவர் சிறந்த சிவ பக்தியுடையவராக விளங்கினார். உரிய வயதில் சோழ நாட்டைச் சேர்ந்த சங்கந்தி என்னும் ஊரிலே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து இனிது வாழ்ந்து வந்தார்.

அக்காலத்தில் இந்தியாவிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் வசித்துவந்தவரும், கோபாலச் செட்டியாருக்கு நண்பரும், வைத்திலிங்கம் செட்டியாருக்குக் குருவுமான கூழங்கைத் தம்பிரான் என்பவருடைய ஆலோசனையின் பேரில், வண்ணார்பண்ணையில் ஒரு நிலத்தை வாங்கி வைத்தீஸ்வரப் பெருமானுக்குக் கோயில் எழுப்புவதற்காக 1787ஆம் ஆண்டில் அத்திவாரம் இட்டார். இக்கோயில் எவ்வித தடையுமின்றி 1790ல் நிறைவு பெற்றது. இதன் பின்னர் சுமார் பதினைந்து ஆண்டுகள் வரை கோயிலை அவரே பரிபாலனம் செய்து வந்தார். பின்னர் தனது இறுதிக் காலத்தில் சிவத் தலங்களுக்கு யாத்திரை செல்ல விரும்பிக் கோயில் பரிபாலனத்தைத் தனது இரு மகன்களிடமும் கையளித்துவிட்டுப் புறப்பட்டார். பல தலங்களையும் தரிசித்தபின் இறுதிக்காலத்தைக் காசியில் கழிக்க விரும்பி அங்கேயே தங்கியிருந்து சிறிது காலத்தில் காலமானார்.

துணை நூல்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.