கிருட்டிணகிரிக் கோட்டை

கிருட்டிணகிரிக் கோட்டை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கிருட்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கோட்டை ஆகும். இது இம்மாவட்டத்தில் உள்ள வலுவான கோட்டைகளுள் ஒன்று. இது ஒரு மலைக் கோட்டை. சுவர்களும், கொத்தளங்களும் பெருமளவுக்கு நல்ல நிலையில் உள்ள இக்கோட்டை தற்போது ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் ஆகும்.[1] இக்கோட்டை தற்போது இந்தியத் தொல்லியல் ஆய்வுப் பகுதியின் மேலாண்மையின் கீழ் உள்ளது.

கிருட்டிணகிரிக் கோட்டை
பகுதி: தமிழ்நாடு
கிருட்ணகிரி, தமிழ்நாடு, இந்தியா
கிருட்டிணகிரிக் கோட்டை
கிருட்டிணகிரிக் கோட்டை
வகை கோட்டைகள்
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது தமிழ்நாடு அரசு
நிலைமை நல்ல நிலையில் உள்ளது
இட வரலாறு
கட்டியவர் கிருட்ணதேவராயர்

வரலாறு

இது விசயநகரப் பேரரசின் பேரரசர்களுள் ஒருவரான கிருட்ணதேவராயரால் கட்டப்பட்டது. இவரது பெயரைத் தழுவியே இக்கோட்டைக்கும், நகரத்துக்கும் "கிருட்ணகிரி" என்ற பெயர் ஏற்பட்டது. அக்காலத்தில் "பரமகால்" என அழைக்கப்பட்ட இப்பகுதியையும் கோட்டையையும் ஜெகதேவிராயர் என்பவர் போர்களில் அவர் காட்டிய வீரத்துக்காக விசயநகரப் பேரரசிடம் இருந்து பரிசாகப் பெற்றுக்கொண்டார். இவர் ஜெகதேவி என்னும் இடத்தைத் தலைநகரமாகக் கொண்டு இப்பகுதியை ஆண்டுவந்தார்.

17 ஆம் நூற்றாண்டில் பீசப்பூர் சுல்தானகத்தின் கீழிருந்த பரமகாலும் கோட்டையும் சாசிக்கு (Shaji) வழங்கப்பட்டது. சாசி பெங்களூரைத் தலைநகரமாகக் கொண்டு இப்பகுதியை ஆண்டார். இவர் இறந்த பின்னர் இளைய மகன் வியாங்கோசி அரசனானார். 1670ல் இக்கோட்டையைச் சத்திரபதி சிவாசி கைப்பற்றிக்கொண்டார்.

18ம் நூற்றாண்டில் மைசூர் அரசர் சிக்க தேவராய உடையாரின் கட்டளைப்படி ஐதர் அலி இக்கோட்டையையும் பரமகாலையும் கைப்பற்றினார். பின்னர் மைசூர் அரசரிடம் இருந்து பிரிந்த ஐதர் அலி சிறீரங்கப்பட்டினத்தைத் தலைநகரமாக்கி ஆண்டபோது இக்கோட்டையையும் தன்வசமே வைத்துக்கொண்டார். முதலாம் ஆங்கில மைசூர்ப் போரின்போது இடம்பெற்ற நீண்ட முற்றுகையைத் தொடர்ந்து இக்கோட்டை பிரித்தானியரிடம் சரணடைந்தது. 1791 ஆம் ஆண்டில், மூன்றாவது ஆங்கில மைசூர்ப் போரின்போது, திப்பு சுல்தானின் வசம் இருந்த இக்கோட்டையை தளபதி மக்சுவெல்லின் தலைமையிலான பிரித்தானியப் படைகள் தாக்கின. ஆனாலும் பிரித்தானியப் படைகள் கடும் இழப்புகளுடன் பின்வாங்கவேண்டி ஏற்பட்டது. 1792ல் சிறீரங்கப்பட்டின ஒப்பந்தப்படி இக்கோட்டை பிரித்தானியரிடம் கையளிக்கப்பட்டது.

குறிப்புகள்

மேலும் படங்கள்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.