புவனகிரிக் கோட்டை, தெலுங்கானா
புவனகிரிக் கோட்டை அல்லது போங்கீர் கோட்டை என்பது, தெலுங்கானா மாநிலத்தின், நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள புவனகிரி நகரில் அமைந்துள்ள ஒரு கோட்டை. மேற்குச் சாளுக்கிய அரசரான நான்காம் திரிபுவன விக்கிரமாதித்தன் ஒரு தனிக் கற்பாறைக் குன்றுமீது இக்கோடையை அமைத்ததால் இதற்கு திரிபுவனகிரிக் கோட்டை என்னும் பெயர் ஏற்பட்டது. பின்னர் இது புவனகிரிக் கோட்டை என்றும் தற்போது போங்கீர் கோட்டை எனவும் அழைக்கப்படுகிறது.[1] இந்தக் கோட்டை அமைந்த பாறை அடிவாரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 609.6 மீட்டர் உயரத்தில் போங்கீர் நகரம் அமைந்துள்ளது. முட்டை வடிவ அமைப்புக் கொண்ட இக் கோட்டைக்கு இரு வாயில்கள் உள்ளன. இவ்வாயில்கள் பெரிய பாறைகளால் பாதுகாக்கப்பட்டன. இதனால் இக்கோட்டையுள் ஆக்கிரமிப்புப் படைகள் நுழைய முடியாது எனக் கருதப்பட்டது.

கோட்டையைச் சுற்றிலும் அகழி அமைந்துள்ளது. உள்ளே பெரிய நிலக்கீழ் அறை, பொறிக்கதவுகள், ஆயுதக் கிடங்கு, குதிரை லாயங்கள், குளங்கள், கிணறுகள் என்பன இருந்தன. இக்கோட்டை, உருத்திரமாதேவி, அவரது பேரன் பிரதாபருத்திரன் ஆகியோரது ஆட்சிகளுடன் தொடர்புள்ளது. ஒருகாலத்தில் இக்கோட்டையில் இருந்து கோல்கொண்டாக் கோட்டைக்குச் சுரங்க வழி ஒன்று இருந்ததாகச் செவிவழிக் கதைகள் உள்ளன.
கோட்டை அமைந்துள்ள குன்று 500 அடி உயரம் கொண்டதுடன், 40 ஏக்கர் பரப்பளவும் கொண்டது. பழைய காலத்தில் பயன்பட்ட படிக்கட்டுகள் இன்றும் உள்ளன.
குறிப்புகள்
- Bhongir Fort is a shutterbug's paradise The Hindu Oct 9 2004.