கறையான்

கறையான்கள் (ஒலிப்பு ) (termites) என்பவை சமுதாயப் பூச்சியினத்தைச் சேர்ந்தவையாகும். இவை கரப்பான் வகையில் சமஇறகிகள் (Isoptera) வரிசையைச் சார்ந்தவை.[1] அண்மைய மரபணு ஆய்வுகளின்படி இவை கரப்பான் வரிசையிலுள்ள சமூக விலங்குகள் என அறிந்துள்ளனர்.[2]

கறையான்
புதைப்படிவ காலம்:228–0 Ma
PreЄ
Pg
N
(20 கோடி ஆண்டுகளுக்கு முன்) கிரீத்தேசியக் காலம்-இக்காலம்
பல்வகைக் கறையான்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
துணைவகுப்பு: Pterygota
உள்வகுப்பு: Neoptera
பெருவரிசை: Dictyoptera
வரிசை: கரப்பான்
உள்வரிசை: கறையான்
குடும்பங்கள்

Mastotermitidae: 1 சி
Kalotermitidae: 22பே 419சி
Termopsidae: 4-5பே, 15-20சி
Hodotermitidae: 3பே, 19சி
Mastotermitidae: 1 சி
Kalotermitidae: 22பே 419சி
Termopsidae: 4-5பே, 15-20சி
Hodotermitidae: 3பே, 19சி
Rhinotermitidae: 14பே, 343சி
Serritermitidae: 1சி
Termitidae: 236பே, 1958சி

தோற்றம்

ஈசல்கள்

கறையான்கள் ஏறத்தாழ 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னரும், இப்பூமியில் வாழ்ந்து வந்தன. இதற்கான ஆதாரங்களை, அதற்குரிய தொல்லுயிர் எச்சம் மற்றும் அம்பர் உறுதி செய்கின்றன. கறையான்களை[கு 1], வெள்ளை எறும்புகள் [கு 2] என்றும் அழைக்கின்றனர். இன்றையக் கறையான்களில் பத்து சதவிகிதமே, நமக்கு பொருளாதார சீர்கேட்டை உருவாக்கும். மற்றவை, தேவையில்லாதவைகளை உண்டே வாழ்கின்றன. இக்கறையான்களின் வாழிடக் காற்றோட்ட நுட்பங்களை நாம் அவசியம் அறிய வேண்டும்.

உயிரின வேறுபாடு

இவை எறும்புகளைப் போல காணப்பட்டாலும், உயிரின வகைப்பாட்டின் படி ஆராய்கின்ற போது கறையான்கள், எறும்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றன[3]. எறும்புகளைச் சமமற்ற இறகிகள் என்ற உயிரினவரிசையில் தொகுத்துள்ளனர்.

ஈசல்களுள்ள அம்பர்

ராணி கறையான் பிரத்தியேகமாக இடும் முட்டைகளிலிருந்து வெளிவருபவையே ஈசல்கள்.அவை புற்றை விட்டு வெளியேறி புதிய புற்றுகளை உருவாக்கும்.ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஈசல்கள் வெளியேறினாலும் அவை அனைத்து புற்றை உருவாக்க முடிவதில்லை.காரணம் அவற்றை பிற உயிரினங்கள் பிடித்து உண்டு விடுகின்றன. எஞ்சியவை இணையுடன் சேர்ந்து பூமிக்குள் புகுந்து இணை சேர்ந்து முட்டை இட்டு செல்கள் உருவாகி புற்று கட்டுகின்றன.

வாழிடம்

கறையான்கள் தாம் வாழும் சூழ்நிலைக்கேற்ப, தமது இடத்தைத் தேர்ந்தெடுக்கின்றன. எனவே, மண்ணின் கீழ், மண்ணின் மேல், மரக்கிளைகளில் என வேறுபட்டு வாழும் இயல்பைப் பெற்றிருக்கின்றன. இவற்றில், ஏதேனும் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து, அதற்கு தகுந்தபடி தமது இருப்பிடத்தை அமைத்துக் கொள்கின்றன. அவைகளின் நிலவசிப்பிடத்தினைப் "புற்று" என்பர். இப்புற்றுகள், பல்வேறு காரணிகளால் மாறுபட்டு, பலவிதமாக உருவாகின்றன.

புற்றுக்காரணிகள்

கிடைக்கும் உணவு, மண்ணின் தன்மை, இயற்கைச் சீற்றம் ஆகியவற்றால் புற்று/கூடு மாறுபடுகிறது. இவற்றின் அமைப்பு, ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு விதமாக இருக்கிறது. சமஇறகிகள் என்ற கறையான் வரிசையில், 7 கறையான் குடும்பங்கள் உள்ளன. அவை, இப்பக்கத்தின் வலமேலுள்ள, அறிவியல் வகைப்பாட்டுக் கட்டத்தில் உள்ளன. ஒவ்வொரு கறையான் குடும்பமும் முறையான பேரினங்களையும், சிற்றினங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. கறையான்களில், ஏறத்தாழ 275 கறையான் பேரினங்களும், அவற்றிற்குரிய 2750 கறையான் சிற்றினங்களும் உள்ளன.

  • பல புற்றுகள், அடுத்தடுத்து அமைந்து, பரந்த நிலப்பரப்பில் கறையான் திட்டுகளாகவும் இருக்கிறது.
கறையான் திட்டுகள், கென்யா
கறையான் திட்டுகள், சாம்பியா

மெக்சிகோவின் மரக்கூடு

  • கறையான்களின் வசிப்பிடம், மரக்கிளைகளில் இருந்தால் "கூடு" என்று பெயர். இக்கூட்டினுள் பல அறைகள் இருக்கும். இராணிக் கறையானுக்கு தனி அறை, உணவு சேமிக்கும் அறை, தண்ணீர் அறை, குஞ்சுகளுக்கான அறை என தனித்தனித் தேவைகளுக்கு, ஒவ்வொரு அறையாக ஒதுக்கப்பட்டிருக்கும். ஒட்டு மொத்தக் கூடும், மரத்தின் கீழுள்ள நிலத்துடன் தரைத்தொடர்குழாய் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். அக்குழாயும் மூடிய நிலையிலேயே அமைந்திருக்கிறது. இதனால் காற்று, மழை, பறவைகள் போன்றவற்றின் இன்னல்களிடமிருந்து, பாதுகாப்புக் கிடைக்கிறது.

பன்னாட்டுப் புற்றமைவுகள்

  • ஒவ்வொரு நாட்டிலும் அமைந்துள்ள புற்றுகள், ஒவ்வொரு விதத்தில் வேறுபடுகின்றன. அங்குள்ள மண்ணின் தன்மை, நிலவும் தட்பவெப்பம், மழைப் பொழிவு, கிடைக்கும் உணவு, புற்றுக்கு பிற உயிரிகளால் விளையும் ஆபத்துகள் போன்றவைகள், புற்றின் உயரம், நிறம் மற்றும் அமைப்பினைக் கட்டுபடுத்தும் காரணிகளாக விளங்குகின்றன.
திறந்த மேற்புறப் புற்று
மூடிய மேற்புறப் புற்று

புற்றின் அமைப்பு

சேலத்தில் காணப்படும் திறந்த அமைப்புள்ள புற்று

பணிக்கரையான்கள் தங்கள் உமிழ்நீரையும், மண்ணையும் கலந்து புற்றினைக் கட்ட ஆரம்பிக்கும். ஒரு புற்றில்,

  • பூமிக்குக் கீழே உள்ள அடுக்கு [கு 3]
  • பூமிக்கு மேலே உள்ள அடுக்கு[கு 4] என இரண்டு அடுக்குகள் உள்ளன.

புற்று என்பது நம் கண் பார்வைக்குத் தெரியும், மண்ணிற்கு மேலே உள்ள அடுக்கு ஆகும். நிலத்திற்கு மேலே தெரியும் உயரத்திற்கு, நிலத்திற்குக் கீழே உள்ள அடுக்கும் ஆழமாக இருக்கும். முதலில் அடித்தளம் அமைத்து, அதற்கு மேலே சிறு சிறு வாய்க்கால்களை [கு 5] பணிக்கறையான்கள் அமைக்கும். அதற்கும் மேலே பூஞ்சைத் தோட்டங்களை அமைக்கும்.

இந்த பூஞ்சைகள், கறையான்களின் உணவுப் பொருட்களை மட்கச்செய்து, கரையான்கள் உண்ண ஏதுவாக மாற்றும். இதற்குக் கைம்மாறாக, கறையான்கள் தங்களின் சுரப்பினால் புற்றில் வேறு எந்த நுண்ணுயிரியும், இந்த பூஞ்சைக்குப் போட்டியாக வளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளும். இந்த பூஞ்சைகள்தான், மழைக்காலத்தில் காளான்களாக, புற்றிலிருந்து முளைக்கும்.

இந்த பூஞ்சைத் தோட்டங்கள், நிலமட்ட அளவிலேயே இருக்கும். அதற்கும் மேலே, மண்ணாலான புற்று இருக்கும். ஒரு சில சிற்றினங்களில் இது திறந்த துளைகளுடன் இருக்கும். ஒரு சில சிற்றினங்களில் இது முழுமையாக மூடப்பட்டிருக்கும்.

ஒரு புற்றின் உட்புறம்
வெள்ளை எறும்புகள் = கறையான்கள்

புற்றின் காற்றோட்டம்

புற்றின் நடுவில், ஒரு உள்ளீடற்ற குழாய்[கு 6] புற்றின் உச்சி வரை நீண்டிருக்கும். புற்றின் மண்சுவரில், மேற்பரப்பிலிருந்து 2 செ.மீ.க்குள், நம் உடலின் இரத்த நாளங்களைப் போன்று, எண்ணற்ற அடிப்பரப்புக் குழாய்கள்[கு 7] இருக்கும். இவை இரண்டையும் இணைக்கும் பக்கவாட்டு இணைப்புக்குழாய்[கு 8] இருக்கும்.

  1. திறந்த நிலையிலிருக்கும் புற்றில், அடிப்பரப்புக் குழாய்கள், ஏற்கனவே புற்றிலிருக்கும் திறந்தத் துளைகளில் முடியும்.
  2. மூடிய நிலையிலிருக்கும் புற்றில், அடிப்பரப்புக் குழாய்கள், நுண்துளைகளில் முடியும்.

இவ்விதங்களில் அடிப்பரப்புக் குழாய்கள், உரிய துளைகள் மூலம், பூமியின் தட்பவெப்பநிலையுடன் தொடர்பு கொள்கிறது.

காற்றுப்பரிமாற்றம்

கறையான்களின் வளர்சிதை மாற்றங்களால் உருவாகும் வெப்பம் மற்றும் நீராவி ஆகியன, ஒருவித மிதவை உந்து விசைகளை [கு 9] உள்ளிழுக்கும். எனவே புற்றின் உள்ளிருக்கும் காற்று, உள்ளீடற்ற குழாய் மூலம் மேலே வருகிறது.

அப்போது புற்றின் உள்காற்றிலிருக்கும் ஆக்சிசன், கரியமில வாயு, வெப்பம், நீராவி ஆகியன, அடிப்பரப்புக் குழாய் வழியாக, புற்றின் வெளிக்காற்றுடன், வேதியியல் பரிமாற்றம் செய்துகொள்ளும். எனவே புத்தம் புதிய காற்று, மீண்டும் புற்றுக்குள், உள்ளீடற்ற குழாய் மற்றும் அடிப்பரப்புக் குழாய்கள் வழியாக உள்ளிழுக்கப்படும். இங்ஙனம் வெளிக்காற்று, புற்றினுள் சென்று, புற்றின் உட்புறத்திற்குச் சென்றடைந்து, புற்றின் உட்புற வெப்பத்தைத் தணித்து குளுமையாக மாற்றும்.

இக்குளுமை எப்பொழுதும் நிலவுவதால், புற்றினுள் வளர்சிதை மாற்றங்கள் சிறப்பாக அமைய உதவுகிறது. அதே சமயத்தில், பாம்பு போன்ற பிற உயிரிகளுக்கு அழைப்பிதழாகவும் அமைந்து, கறையான்களுக்கு வாழ்விட இன்னல்களை ஏற்படுத்துகிறது.

வளரியல்பு

தாய்லாந்தின் கறையான் கூட்டம்

கறையான்கள் கூட்டமாக வாழும் இயல்புடைய ஒரு சமுதாய பூச்சி வகையாகும். இவை தனித்து வாழாமல், கூட்டமாக வாழும் இயல்புடையது. கறையான் கூட்டத்தில் 500 முதல் 5,00,000 வரை கறையான்கள் இருக்கும். ஒரு கறையான் கூட்டத்திலுள்ள கறையான்களை, நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை வருமாறு;-

 பெயர்வேலைகுறிப்பு
1.இராணிக்கறையான் [கு 10]கறையான்களை வழிநடத்துதல்குட்டி போடுதல்
2.ஆண்கறையான்இனக்கலவி புரிதல்எந்த வேலையும் செய்யாது
3.வாகைக்கறையான் [கு 11]பாதுகாப்புப் பணிகுருடு; மலடு; ஆண், பெண் உண்டு;

1-2ஆண்டு வாழும்.

4.பணிக்கறையான் [கு 12]உணவு கொடுத்தல், புற்றுக்கட்டுதல்குருடு; மலடு; ஆண், பெண் உண்டு; 1-2ஆண்டு வாழும்.

இராணிக் கறையான்

ஆண்கறையானுடன் கலவியை முடித்தபின்பு, இராணிக்கரையானின் அடிவயிறு வளரத் தொடங்கிவிடும். அடிவயிறு சுமார் 15 செ.மீ வரை வளரும். [கு 13] புற்றின் ஆரம்ப காலத்தில், இராணி இடத்தை தேர்ந்தெடுத்து, சிறுகுழி பறித்து முட்டைகள் இடும். இராணிக் கறையான் ஒரு நாளைக்கு சுமார் 2000 முட்டைகள் வைக்கும். அதாவது, ஒவ்வொரு 15 நொடிக்கும், ஒரு முட்டை வைக்கும். இராணிக்கறையான்களின் வாழ்நாள் 15-25 ஆண்டுகள் ஆகும். வாகைக் கறையான்களும், பணிக்கறையான்களும் எண்ணிக்கை குறையும் போது, அவற்றிற்கே உரிய நாற்றம் குறையும். இதனை அறிந்த இராணிக்கறையான், அவைகளுக்கான முட்டைகளை வைத்து அவ்வெண்ணிக்கையை பெருக்கச் செய்யும். வாழிடம் சரியில்லாத போது, இராணிக்கறையான் இடப்பெயர்ச்சி செய்ய, மற்ற கறையான்களுக்குக் கட்டளையிடும். முட்டையிடும் பெரிய இராணிக்கறையான், எப்பொழுதும் தனது நகரும் தன்மையை இழப்பதில்லை. ஒரு கறையான் கூட்டத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட இராணிகள் இருக்கும். அவைகளும் முட்டைகள் இடும். முதன்மை இராணி இறந்தால், மற்ற இராணிகள் அதன் பணிகளைத் தொடர்ந்து செய்யும்.

ஆண்கறையான்கள்

சில சிற்றினங்களில் மட்டுமே, ஆண் கறையான் இறந்தாலும், மற்றொரு ஆண் கறையான், இராணிக்கறையானுடன் கலவி புரிந்து இனப்பெருக்கம் செய்யும். இராணிக்கறையானின் முட்டைகளிலிருந்து பொரிந்து வரும் குஞ்சுகளை, ஆண் கறையான் பாதுகாக்கும். பின்பு கறையான்கள் பெருகியவுடன், குஞ்சுகளைப் பாதுகாக்கும் பணியினை, பணிக்கறையான்கள் செய்கிறது. ஆண் கறையான்கள் பெரும்பாலும் சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பதில்லை. அங்ஙனம் இருந்தால், அவை இறந்து விடும்.

இவற்றுள் வாகைக்கறையான்களும், பணிக்கறையான்களும் மலட்டுத் தன்மை கொண்டவை. ஆனால் இவை பிறவியிலேயே மலடுகள் அல்ல. இராணிக்கறையான் தன் உடலிலிருந்து சுரக்கும், ஒருவித சுரப்பினை[கு 14] உண்பதால், இம்மலட்டுத்தன்மை அவைகளிலே ஏற்படுகிறது.

வாகைக் கறையான்கள்

வாகைக்கறையான்களுள் இரண்டு வகை உண்டு.

  1. பருத்தத் தலையுடன், அரிவாள் போன்ற கொடுக்குடன் இருக்கும். [கு 15] இவை பகைவர்களைத் தாக்குதல் நடத்தி விரட்டி விடும்.
  2. துப்பிக்கறையான் [கு 16] - இவை பகைவர்களின் மீது, துர்நாற்றம் மிக்க சுரப்பினைத் துப்பி விரட்டி விடும்.

பணிக்கறையான்கள்

பணிக்கரையான்கள் தங்கள் உமிழ்நீரையும், மண்ணையும் கலந்து புற்றினைக் கட்ட ஆரம்பிக்கும். அனைவருக்கும் உணவு கொடுக்கும். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் இறந்து விடும்.

ஈசல்கள்

புற்றுகள் பல பிற இடங்களிலும் பரவி இனப்பெருக்கம் செய்ய இராணிக்கறையான், சிறப்பான முட்டைகளை இடுகின்றன. அம்முட்டைகளிலிருந்து வெளிவருபவையே ஈசல்கள். அவை ஒருநாள் உயிரி என கருதப்படுவது தவறு. தப்பிப்பிழைக்கும் ஈசல்கள், இணையுடன் பூமிக்குள் இணை சேர்ந்து, முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. அவை தனித்துவமான புதிய புற்றை உருவாக்குகிறது. இப்புற்று, வெளியேறிய புற்றிலிருந்து வேறுபட்டும், இனப்பெருக்கத்தால் தோன்றும் இளங்கறையான்களும் தனித்துவங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றன.

செல் (termite) என்பது புற்றை உருவாக்கி காத்து சமூக வாழ்க்கை வாழும் ஒரு உயிரினம்.அவை வேலைகாரர்கள்,புற்றை எதிரிகளி களிடமிருந்து காக்கும் போர்வீரர்கள் என பலவகையாக உள்ளன. தமிழகத்து மக்கள் ஈசல் ஒரு நாள் உயிரி என எண்ணுகின்றனர். அது உண்மை அல்ல.ஈசல் ஈசல்புழுக்களாகி 10 முதல் 25ஆண்டு கள் உயிர்வாழ்பவை.

1.புற்றின் வகைகள்

2.செல்லின் பணிகள்

3.செல்லின் உணவு

4.ஈசலின் பணிகள்

5.ஈசலின் உடல் அமைப்பு

1.புற்றின் வகைகள்

1. மணலி புற்று 2.நெட்லாஞ்சி புற்று 3.கவரை புற்று 4. கறையான் புற்று 5.நிலாவரை புற்று 6.குமட்டி புற்று

என பல வகையாக உள்ளன.இவை அனைத்தும் கடலூர் மாவட்டத்தில் புன்செய் பயிரிடும் நிலங்களில் காணப்படுகின்றன.

1.மணலி புற்று; இப்புற்று நிழல் விரும்பியாக உள்ளது.மரத்தின் நிழலிலும்,புதர்களிலும் காணப்பகிறது.சுமார் அரை அடிஉயரமும் 2 மீட்டர் சுற்றளவு கொண்டது.இதில் மேல்நோக்கி பல வளைகள் காணப்படும். ஒரு வளைக்கும் மற்றொரு வளைக்கும் இடையில் உள்ள பகுதியில் கூடுகள் அமைத்து வாழ்கின்கின்றன.

2.நெட்லாஞ்சி புற்று; இப்புற்று 3 அடி முதல் 7 அடி வரை கட்டப் பட்டிருக்கும். இவை புன்செய் பயிரிடும் நிலங்களில் மட்டுமே காணப்படும்.புன்செய் பயிர்களின் கழிவுகள் செல்லுக்கு உணவாகின்றன.மதில் போன்று உயரமாக உள்ளதால் இதற்கு இப்பெயர் எற்பபட்டது.நெடுமை+இஞ்சி. இஞ்சி-மதில்

3.கவரைப்புற்று. இவகைபுற்றுகள் நன்செய் நிலங்களின் வரப்புகளில் காணப்படும்.புற்றின்மேல் சிறுசிறு வளைகள் காணப்படும்.

4.கறையான் புற்று; இது அரைஅடி உயரத்திற்கும் குறைவாக காணப்படும். இதன் செல்கள் மற்ற செல்களை விட பெரிதாக இருக்கும்.

5.நிலாவரை; இப்புற்று நிலத்திற்கு வெளியில் தெரியாது.மண்ணிற்கு அடியில் கூடுகட்டி வாழும்.

6.குமட்டி புற்று; 1 அடி முதல் 2 அடி வரை உயரம் இருக்கும்.இது பெரும்பாலும் மரத்தின் நிழலில் காணப்படுகிறது. மேலே கூறப்பட்டவை கடலூர் மாவட்டத்தில் காணப்படும் செல்லின் வகைகள்.உலகில் 10000 க்கும் அதிகமான செல் வகைகள் உள்ளன.

2.செல்லின் பணிகள்;

வேலைக்கார செல்,புற்றை பகைவர்களிடமிருந்து

பாதுகாக்கும் செல் என பல வகையாக உள்ளன. வேலைகார செல் கள் புற்றை கட்டுதல்,உணவு சேகரித்தல்,ராணி ஈசல் புழு இடும் முட்டைகளை சேகரித்து பாதுகாத்து பொரிக்க செய்தல், ஈசல் புழு வுக்கு உணவை கொடுத்தல்,முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சு களை பாதுகாத்தல் போன்ற பணிகளை செய்கின்றன.

3.செல்லின் உணவு;

தாவரத்தின் பாகங்கள் செல்களின் உணவாகிறது.

செல்கள் உலர்ந்த மரங்களை கடிக்கும்போது வாயில் சுரக்கும் ஒருவகை திரவம் மரத்தை மென்மையாக்குகிறது.அதனால் மரத்தை எளிதாக கடித்து சிறுசிறு துண்டுகளாக்க முடிகிறது. அவற்றை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கிறது.அவற்றின் மீது பூஞ்சாணம் உருவாகி மேலும் மென்மையாக்குகிறது. அதுவே செல்களின் உணவாகிறது.அவற்றை கிராம மக்கள் புற்றாஞ்சோறு என அழைக்கின்றனர்.புற்றாஞ்சோறு பன் (bun )வடிவில் சிசிறு துளைகளுடன் காணப்படும்.

4.ஈசலின் பணிகள்;

ஒரு புற்றில் உள்ள ஆண் பெண் ஈசல் புழுக்கள் (Queen

&king)இணை சேர்ந்து நாள் ஒன்றுக்கு 40000 முட்டைகளைவரை இடுகின்றன.அவற்றை செல்கள் எடுத்து சென்று பாதுகாத்து குஞ்சு பொரிக்க செய்கின்றன. பங்குனி, சித்திரை மாதங்களில் ஈசல் புழுக்கள் பிரத்தியேகமான முட்டைகளை இடுகிறது. அதிலிருந்து இளம் ஈசல்கள் வெளிவருகின்றன.அந்நிலையில் ஈசல்கள் நான்கு இறகுகளுடன்வெண்மை நிறத்தில் காணப்படும்.அவை சுமார் 5 மாதங்களில் நன்கு வளர்ந்து பழுப்பு நிறமாக தோன்றும்.ஈசல்கள் முழுவளர்ச்சி அடைந்தவுடன் அவற்றை வெளியேற்றி புதிய புதிய புற்றை உருவாக்கும் வேலையில் செல்கள் ஈடுபடுகின்றன. நன்கு மழை பெய்து புற்றும் பூமியும் நன்கு ஈரமானவுடன் புற்றின் மேல் பகுதியில் 2 செ.மீ நீளத்தில் பிறை வடிவில் வாயில்கள் அமைத்து இரவில் அவற்றை திறந்து வைத்து வாயிலில் செல்கள் காத்துக்கொண்டிருக்கும். பூமியில் நல்ல ஈரமும் சீரான காற்றும் நல்ல நிலா ஒளியும் உள்ள இரவில் செல்கள் ஈசல்கள் வெளியேற அனுமதிக்கின்றன.

ஈசல்கள் புற்றை விட்டு வெளியேறி பறந்து தூரமான இடத்தை அடையும். இந்நிலையில் ஈசல்களை பறவைகள்,பாம்பு,

பல்லி, உடும்பு,கோழி போன்றவைகளுக்கு உணவாகிவிடுகின்றன. அனைத்து ஈசல்களும் புற்றை கட்டுமானால் பூமி முழுதும் புற்றாகவே காட்சியளிக்கும். டார்வினின் பரிணாம கொள்கையான இயற்கை தேர்வு,தகுதியுள்ளவை தப்பிபிழைத்தல் என்கிற அடிபடையில் ஈசல்கள் பிற உயிரிகளால் கட்டுப்படுத்தபடுகின்றன. தப்பி பிழைக்கும் ஈசல்கள் பூமியை அடைந்து இறகுகளை உதிர்த்து விடுகின்றன. பின் அவை தன் இணையை தேடி கண்டபின் இரண்டும் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்வதை காணலாம்.அவை பூமியில் தகுந்த இடத்தை தெரிவு செய்து துளையிட்டு உள்ளே சென்று இணை சேர்ந்து முட்டையிட தொடங்குகிறது.

5.ஈசலின் உடல் அமைப்பு;

ஆறு கால்களும் நான்கு சிறகுகளும் கொண்டது.

இந்நிலையில் ஈசலுக்கு உணவு மண்டலம் கிடையாது.வயிறு பகுதி முழுதும் கொழுப்பும் புரதமும் நிரம்பி இருக்கும். இணை சேர்ந்து முட்டை இட்டு முட்டை பொரிந்து செல்கள் வந்து இரை தேடும்வரை ஈசல்கள் உயிர் வாழ உடலில் உள்ள கொழுப்பும் புரதமும் உதவி புரிகிறது.அவை தீர்ந்தபின் உணவு மண்டலமும் செரிமான மண்டலமும் உருவாகக்கூடும்(ஆராயச்சிக்குரியது) செல்கள் உருவான பின் அவை புற்றை கட்டி வாழ்வை தொடங்குகின்றன. ஈசல்கள் 2 முதல் 3சென்டி மீட்டர் வரை வளரும்.அது வாழ்நாள் முழுதும் முட்டை இட்டுகொண்டே இரூக்கும். ஈசல்கள் வெள்ளை ரத்த உயிரி வகையைச்சேர்ந்தவை.பிற உயிரிகள் சுவாசம் மூலம் காற்றில் உள்ள ஆக்ஜிசனை உரிஞ்ச ரத்தத்தில் கீமோ குளோபின் கொண்ட ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கின்றன.ஈசல்கள் எவ்வாறு ஆக்ஜிசனைப் பெறுகிறது என்பது ஆராய வேண்டி உள்ளது. செல்கள் ஈசல் புழுக்களை மிக ஆழமான பகுதியில் குடுவை போன்ற அமைப்பை உண்டாக்கி அதில் வைத்து பாதுகாக்கின்றன.ஈசல் புழுக்கள் இறந்து விட்டால் செல் சமூகமே அழிந்து விடும்.

ஈசலை சிலர் உண்ணுகின்றனர்.உரிக்கொடியின் வேரையும்

ஒருவகை கொட்டையும் சேர்த்து வருத்து பொடிசெய்து ஆடி,ஆவணி மாதங்களில் பூமியும் புற்றும் ஈரமாக இருக்கும்போது இரவில் புற்றின்மீது பொடியை தூவினால் லாந்தர் விளக்கு ஒளியால் கவரப்பட்டு வெளி வரும் ஈசல்களை சேகரித்து இறகுகளை நீக்கி வருத்து உலர்த்தி பின் கையால் தேய்த்து கால்கள் தலைகளை புடைத்து சுத்தமாக்கி பின் உண்கின்றனர்.

உணவுச் செரிமானம்

கறையான்களின் உணவில் பெரும்பாலும் செல்லுலோசு உள்ளது. தாவரங்களிலுள்ள செல்லுலோஸ் என்ற பொருள் இருக்கும். அதை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதி கறையான்களுக்கு இல்லை. கறையான்கள் தங்கள் குடலில் புரோட்டோசோவாக்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும். இதற்குக் கைம்மாறாக, Protozoa க்கள் கரையான்களுக்கு, செல்லுலோஸை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதியைக் கொடுக்கும்.

  • மாவீரன் நெப்போலியனின் போர்க்கப்பல்களுள் ஒன்று, கறையான்களால் அரிக்கப்பட்டு வீணானது என்பது வரலாறு.

குறிப்புகள்

  1. Termites - கறையான்கள்
  2. White ants - வெள்ளை எறும்புகள்
  3. பூமிக்குக் கீழே உள்ள அடுக்கு - Underground chamber
  4. பூமிக்கு மேலே உள்ள அடுக்கு - Mound
  5. சிறு சிறு வாய்க்கால்கள் = Galleries
  6. உள்ளீடற்ற குழாய் = Central chimney
  7. அடிப்பரப்புக் குழாய் = Surface conduit
  8. பக்கவாட்டு இணைப்புக் குழாய் = Lateral connectives
  9. மிதவை உந்து விசை = Buoyant forces
  10. இராணிக்கறையான் - Queen
  11. வாகைக்கறையான் = இராணுவக்கறையான் = போர்கறையான் = Soldiers
  12. பணிக்கறையான் = வேலைக்காரக்கறையான் = Workers
  13. இது Physogastry எனப்படும்.
  14. இராணி ஃபெரமோன் = Queen pheromone
  15. அரிவாள் கறையான் - Mandibulate Soldiers
  16. துப்பிக்கறையான் - Nasute Soldiers

மேற்கோள்கள்

  1. Krishna, K., D.A. Grimaldi, V. Krishna, & M.S. Engel. 2013. Treatise on the Isoptera of the world. Bulletin of the American Museum of Natural History 377: 1-2704.
  2. Inward D, Beccaloni G, Eggleton P (2007) Death of an order: a comprehensive molecular phylogenetic study confirms that termites are eusocial cockroaches. Biol Lett 3 (3):331-5. DOI:10.1098/rsbl.2007.0102 PMID: 17412673
  3. எறும்பு எதிர் கறையான் = வரைப்படத்துடனான வேறுபாடுகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.