அம்பர்

அம்பர் (amber) என்பது பொன் நிறத்தில் உள்ள ஒரு பொருள். இது காலத்தால் சற்றேறக்குறைய கல் போல் ஆகிவிட்ட மரப்பிசின் ஆகும். பெரும்பாலான அம்பர் கட்டிகள் 30-90 மில்லியன் ஆண்டுகளாய் உறைந்து கெட்டியாய் ஆன மரப்பிசின் ஆகும். அம்பர் என்பது தமிழில் ஓர்க்கோலை, பொன்னம்பர், பூவம்பர், மீனம்பர், தீயின்வயிரம், செம்மீன் வயிரம், மலக்கனம், கற்பூரமணி என்னும் பல சொற்களால் குறிக்கப்படுகின்றது. மரப்பிசினில் விழுந்துவிட்ட சிறு பூச்சிகளும் அப்படியே காலத்தால் உறைந்திருப்பது பார்க்க வியப்பூட்டுவதாகும். இப்படி தொல்பழங்காலத்து பயினி மரம் போன்ற மரங்களின் மரப்பிசினில் விழுந்து விட்ட பூச்சிகளில் சில இன்று நிலவுலகில் இல்லாமல் முற்றுமாய் அற்றுப்போய்விட்டவை. இந்த அம்பர் கட்டிகள் பால்ட்டிக் கடற்கரைகளிலும், கடலடியிலும் கிடைக்கின்றன. சில சிறு அம்பர் கட்டிகள் மீனின் வயிற்றில் இருந்தும் எடுத்துள்ளனர்.

அம்பர் கட்டியை பதக்கமாய் பதித்த நகை
அம்பர் - Coleoptera, Cleridae

இந்த அம்பர் கட்டிகளை துணியில் தேய்த்த பின், சிறு வைக்கோல் துண்டுகளை ஈர்ப்பதை கிரேக்க நாட்டில் உள்ள தாலஸ் (Thales) என்பவர் கி.மு 600 வாக்கில் கண்டுபிடித்தார். ஏறத்தாழ கி.மு. 300ல் வாழ்ந்த கிரேக்க மெய்யியல் அறிஞர் பிளேட்டோ அவர்கள் அம்பரின் இந்தப் பண்பைப் பற்றி குறித்துள்ளார். இந்த அம்பரை கிரேக்கத்தில் எலெக்ட்ரான் என்கின்றனர் (இதன் அடிப்படையில் இதனை இலத்தீனில் எலெக்ட்ரம் என்பர்). அம்பரை துணியில் தேய்ப்பதால், அவை மின்மப் பண்பு உறுகின்றது (மின்மத் தன்மை அடைகின்றது).

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.