இணைச் சட்டம் (நூல்)

இணைச் சட்டம் (உபாகமம்) (Deuteronomy) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) ஐந்தாவது நூலாக இடம்பெறுவதாகும். விவிலியத்தின் ஐந்து ஆகாமம நூல்களில் இறுதியானதாகும். மொத்தம் 34 அதிகாரங்களை கொண்டுள்ளது.

இணைச் சட்டம் என்னும் விவிலிய நூல். லெனின் கிராடு, எபிரேய மொழி கையெழுத்துப் படியிலிருந்து எடுக்கப்பட்ட புகைப் படிமம். படி உருவாக்கப்பட்ட ஆண்டு: 1008.

நூல் பெயர்

"இணைச் சட்டம்" என்னும் இத்திருநூல் இசுரயேல் மக்கள் பாலை நிலத்தில் நெடும் பயணம் செய்து, கானான் நாட்டில் நுழைவதற்குச் சற்றுமுன், அவர்களுக்கு மோசே வழங்கிய பேருரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.

இந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் "Devarim" அதாவது "சொற்பொழிவுகள்" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. கிரேக்க விவிலியத்தில் இந்நூலின் பெயர் "deuteronomion" (Δευτερονόμιον = இரண்டாம் சட்டத்தொகுப்பு) என்பதாகும்.

மையக் கருத்துகள்

இந்நூலில் தரப்பட்டுள்ள செய்திகளாவன:

1) கடந்த நாற்பதாண்டுகளில் நிறைவேறிய சிறப்பான நிகழ்ச்சிகளை மக்களுக்கு மோசே நினைவுறுத்துகையில் பாலை நிலத்தின் வழியாகக் கடவுள் அவர்களை எவ்வாறு வழிநடத்தினார் என்றும் அவருக்கு அவர்கள் எவ்வாறு பணிந்து நடக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு உணர்த்துகிறார்.

2) பத்துக் கட்டளைகளையும் சிறப்பாக முதற் கட்டளையையும் அவர்கள் பின்பற்றி, ஆண்டவருக்கு மட்டுமே அவர்கள் ஊழியம் செய்ய வேண்டுமென்று மோசே வற்புறுத்துகிறார். மேலும் வாக்களிக்கப்பட்ட நாட்டில் இசுரயேலரின் வாழ்க்கைத் தடமாக இருக்க வேண்டிய பல்வேறு சட்டங்களை நினைவூட்டுகிறார்.

3) அவர்களோடு கடவுள் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையை நினைவுறுத்தி அதன் நிபந்தனைகளை அவர்கள் நிறைவேற்றுமாறு அவர்களை அழைக்கிறார்.

4) இறைமக்களின் அடுத்த தலைவராக யோசுவாவை அவர் ஏற்படுத்துகின்றார். இறுதியாக, கடவுளின் உண்மைத் தன்மையைப் போற்றிப் புகழ்ப்பா ஒன்று பாடி, இசுரயேல் குலங்களுக்கு ஆசி வழங்கியபின், யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே மோவாபு நாட்டில் இறக்கின்றார்.

கடவுள் இசுரயேல் மக்கள் மீது பேரன்பு கொண்டு, அவர்களுக்கு விடுதலை அளித்துத் தம் ஆசியை வழங்குகிறார். இதனை அவர்தம் மக்களும் நினைவில் கொண்டு அவர்மீது அன்பு கூர்ந்து அவரைப் பணிந்தால் அவர்கள் வாழ்வைப் பெற்று அவர்தம் ஆசியைத் தொடர்ந்து பெறுவர் என்பதே இந்நூலின் மையக் கருத்து ஆகும். "கட்டளைகளுள் முதன்மையானது எது?" என்ற வினாவிற்கு இயேசு கிறிஸ்து தந்த விடை இந்நூலின் (6:4-6) இடம் பெற்றுள்ளது சிறப்புக்குரியது.

நூலில் ஒருமையும் பன்மையும்

எபிரேய மூலத்தில் ஒருமையும் (நீ, உன்...) பன்மையும் (நீங்கள், உங்கள்...) கலந்து காணப்படுகின்றன. ஆயினும் இந்நூலின் தமிழ்ப் பெயர்ப்பில் பொருள் இலக்கண அமைதிக்கேற்ப அவை முறைப்படுத்தப்பட்டுள்ளன.

இணைச் சட்டம் - நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1) மோசேயின் முதல் பேருரை 1:1 - 4:49 269 - 275
2) மோசேயின் இரண்டாம் பேருரை

அ) பத்துக் கட்டளைகள்
ஆ) சட்டங்கள், நியமங்கள், எச்சரிப்புகள்

5:1 - 26:19

5:1 - 10:22
11:1 - 26:19

275 - 307

275 - 285
285 -307

3) கானான் நாட்டில் நுழைவதற்கான அறிவுரைகள் 27:1 - 28:68 307 - 313
4) உடன்படிக்கையைப் புதுப்பித்தல் 29:1 - 30:20 313 - 316
5) மோசேயின் இறுதி மொழிகள் 31:1 - 33:29 316 - 324
6) மோசேயின் இறப்பு 34:1-12 324
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.