அனத்தோத்து

அனத்தோத்து (Anathoth) என்னும் நகர் பழைய ஏற்பாட்டில் வருகின்ற ஒரு நகரம் ஆகும்[1]. இப்பெயர் முதன்முறையாக யோசுவா நூலில் காணப்படுகிறது. ஆரோனின் மக்களுக்கு பென்யமின் குலத்திலிருந்து அளிக்கப்பட்ட நகரங்களுள் ஒன்றாக அனத்தோத்தும் குறிக்கப்படுகிறது (காண்க: யோசுவா 21:13,18. இதே செய்தி 1 குறிப்பேடு 6:54,60இலும் உள்ளது.

அனத்தோத்து: பெயர்க் காரணம்

அனத்தோத்து என்னும் பெயர் எவ்வாறு எழுந்திருக்கலாம் என்று அறிஞர் கருத்துத் தெரிவித்துள்ளனர். கானான் நாட்டில் குடியேறிய இசுரயேலர் தாம் சென்ற நகரங்களுக்கு என்ன பெயர் இருந்தனவோ அவற்றை அப்படியே மாற்றாது விட்டனர். கானான் நாட்டு மக்கள் வணங்கிவந்த ஒரு பெண் தெய்வத்தின் பெயர் "அனத்" ஆகும். அத்தெய்வத்தின் பெயரால் அழைக்கப்பட்ட "அனத்தோத்து" என்னும் நகரின் பெயரை இசுரயேலர் மாற்றவில்லை என்று தெரிகிறது.

எனினும் அனத்தோத்து என்பது ஓர் ஆளின் பெயராக நெகேமியா நூலில் உள்ளது (காண்க: நெகேமியா 10:19). 1 குறிப்பேடு நூலிலும் இது ஆட்பெயராக வருகிறது (காண்க: 1 குறிப்பேடு 7:8).

அனத்தோத்து: இறைவாக்கினர் எரேமியா பிறந்த இடம்

எருசலேமுக்கு அருகே அனத்தோத்தை நோக்கி பீரங்கிக் குறிபார்க்கின்ற இந்திய இராணுத்தினர். ஆண்டு:1917 (1920?). பிரித்தானிய குடியேற்ற ஆதிக்க காலம்.

அனத்தோத்து சிறப்புப் பெறுவதற்கு முக்கிய காரணம் அது தலைசிறந்த இறைவாக்கினர் எரேமியாவின் பிறப்பிடம் என்பதாகும். எரேமியா இறைவாக்கினர் நூலின் தொடக்கம் இவ்வாறுள்ளது:

பென்யமின் நாட்டு அனத்தோத்தில் இருந்த குருக்களுள் ஒருவரான இலிக்கியாவின் மகன் எரேமியாவின் சொற்கள்: (எரே 1:1).

எரேமியா நூலில் காணும் பிற குறிப்புகள்:

அப்படியிருக்க, உங்களிடம் இறைவாக்குரைக்கும் அனத்தோத்தைச் சார்ந்த எரேமியாவை நீர் ஏன் இன்னும் கண்டியாது விட்டு வைத்திருக்கிறீர்? (எரே 29:27).
இதோ, உன் உறவினன் சல்லூமின் மகன் அனமேல் உன்னிடம் வந்து, 'அனத்தோத்தில் இருக்கும் என் நிலத்தை நீ விலைக்கு வாங்கிக்கொள்...' என உன்னை வேண்டுவான் (எரே 31:8).

எரேமியாவின் பிறந்த ஊர் மக்களே அவருக்கு எதிராக எழுந்து, அவர் மக்களுக்குத் தீங்கு வரும் என்று இறைவாக்கு உரைத்தால் அவரைக் கொன்றுபோடுவதாக அச்சுறுத்தினார்கள். அப்பின்னணியில் கடவுளின் வார்த்தையாக எரேமியா பின்வருவதைக் கூறுகிறார்:

'ஆண்டவரின் பெயரால் இறைவாக்கு உரைக்காதே; உரைத்தால் எங்கள் கைகளாலே சாவாய்' என்று கூறி உன் உயிரைப் பறிக்கத் தேடும் அனத்தோத்தைச் சார்ந்த ஆள்களைப் பற்றி, படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:...அனத்தோத்தைச் சார்ந்த ஆள்கள் மேல், அவர்களைத் தண்டிக்கும் ஆண்டில், தீமை வரச் செய்வேன் (எரே 11:21-23).
அனத்தோத்து நகரத்தவரான எரேமியா இறைவாக்கினர் எருசலேமின் அழிவு குறித்துப் புலம்புதல். ஓவியர்:ரெம்ப்ராண்ட். ஆண்டு: 1630. காப்பிடம்: ரைக்ஸ்மியூசியம், ஆம்ஸ்டர்டாம், ஓலாந்து.

பழைய ஏற்பாட்டில் அனத்தோத்து குறிக்கப்படும் பிற பாடங்கள்

அனத்தோத்து நகரைச் சார்ந்த இன்னொருவர் பெயர் அபிசேயர் ஆகும். இவர் தாவீது அரசரால் தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது படைவீரர்களுள் ஒருவர் ஆவார். இவர் "அனத்தோத்தியன் அபிசேயர்" என்று அழைக்கப்பட்டார் (காண்க: 2 சாமுவேல் 23:8-27). எகூ என்பவரும் அனத்தோத்தைச் சார்ந்தவரே (காண்க: 1 குறிப்பேடு 12:3).

இன்றைய இசுரயேலில் அனத்தோத்து

விவிலியக் காலத்து அனத்தோத்து சனகெரிபு (Sennacherib) என்னும் அசீரிய மன்னனால் தரைமட்டமாக்கப்பட்டது (கி.மு. 701).

பின்னர், பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட யூதர்களுள் 128 பேர் மட்டுமே அனத்தோத்துக்குத் திரும்பி வந்தார்கள் என்று விவிலியம் குறிப்பிடுகிறது:

பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரால் சிறைப்படுத்தப்பட்டு, பின்னர் அடிமைத்தனத்திலுருந்து மீண்டு, எருசலேமுக்கும் யூதாவில் அவரவர் நகருக்கும் திரும்பி வந்த மாநில மக்கள் இவர்களே:...அனத்தோத்தின் ஆண்கள் நூற்று இருபத்தெட்டுப் பேர் (நெகே 7:6,27).

இதே செய்தி எஸ்ரா 2:23இலும் உள்ளது.

அனத்தோத்து எருசலேம் நகரிலிருந்து வடக்காக மூன்று மைல் தொலையில் இருந்தது. இன்றைய அரபு ஊராகிய "அனாத்தா" (ʻAnātā) என்னும் இடம் பண்டைய விவிலிய அனத்தோத்தாக இருக்கலாம் என்று அகழ்வாளர் முடிவுசெய்கின்றனர். இசுரயேலின் இந்நாள் குடியிருப்பாகிய அனத்தோத் (அல்மோன்) என்னும் இடம் விவிலிய அனத்தோத்து நகரை அடியொற்றி பெயர்பெற்றது.

ஆதாரங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.