எம்மாவு

எம்மாவு (Emmaus) என்பது புதிய ஏற்பாட்டில் இயேசு கிறித்துவின் வாழ்க்கையோடு தொடர்புடைய ஒரு பழங்கால நகரம் ஆகும். இது எருசலேம் நகரிலிருந்து ஏறத்தாழ 7 மைல் (11 கிலோ மீட்டர்)தொலையில் உள்ளது. இந்நகரம் கிரேக்க மொழியில் Ἐμμαούς என்றும், இலத்தீனில் Emmaus என்றும், எபிரேயத்தில் חמת (Hammat) என்றும், அரபியில் عِمواس (Imwas) என்றும் அறியப்படுகிறது. இதன் பொருள் மித வெப்ப நீரூற்று என்பதாகும்[1].

எம்மாவு நகரில் இயேசு இரு சீடர்களோடு உணவருந்துதல். ஓவியர்: கரவாஜ்ஜோ. ஆண்டு: 1601.

புதிய ஏற்பாட்டில் எம்மாவு

லூக்கா நற்செய்தி 24:13-35 என்னும் பகுதியில் இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த பின்பு, எருசலேமிலிருந்து எம்மாவுக்குச் சென்றுகொண்டிருந்த இரு சீடர்களுக்குத் தோன்றிய செய்தி விவரிக்கப்பட்டுள்ளது. இதோ அப்பகுதி:

  • லூக்கா 24:13-35
அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள்.

இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. அவர் அவர்களை நோக்கி, "வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?" என்று கேட்டார். அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள்.

அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, "எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!" என்றார். அதற்கு அவர் அவர்களிடம், "என்ன நிகழ்ந்தது?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை" என்றார்கள்.

இயேசு அவர்களை நோக்கி, "அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா!" என்றார். மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.

அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார். அவர்கள் அவரிடம், "எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று" என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார்.

அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, "வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?" என்று பேசிக் கொண்டார்கள்.

அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். அங்கிருந்தவர்கள், "ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்" என்று சொன்னார்கள். அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

எம்மாவு பற்றிய வேறு விவிலியக் குறிப்புகள்

லூக்கா நற்செய்தியில் வருகின்ற எம்மாவு என்னும் நகரம் பழைய ஏற்பாட்டின் சில பகுதிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பாக, 1 மக்கபேயர் 3:55-4:22 என்னும் பாடத்தைக் காட்டலாம். கி.மு. 166ஆம் ஆண்டளவில் யூத மக்கள் கிரேக்க ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். அப்போது யூதா மக்கபேயு என்பவரின் தலைமையில் அவர்கள் செலூக்கிய கொடுங்கோலாட்சியை எம்மாவு நகரில் நிகழ்ந்த சண்டையில் முறியடித்தனர்[2].

பின்னர், செலூக்கிய தளபதி பாக்கிது என்பவர் எம்மாவு நகருக்குக் காப்புச் சுவர்கள் கட்டினார் (காண்க: 1 மக்கபேயர் 9:50). உரோமையரின் ஆட்சியின் கீழ் எம்மாவுக்குச் சிறிதளவு தன்னாட்சி இருந்தது. ஆனால் ஏரோது மன்னன் கி.மு. 4இல் இறந்ததைத் தொடர்ந்து எம்மாவு தீக்கிரையாக்கப்பட்டது.

முதல் யூத கிளர்ச்சியின்போது (கி.பி. 660-70)[3], எருசலேம் நகரை முற்றுகையிட்டு அழிப்பதற்கு முன் உரோமைப் படைகள் எம்மாவு நகரில் பாசறை அமைத்தன.

கி.பி. 221இல் எலகாபலுஸ் மன்னன் காலத்தில் எம்மாவு நகரின் பெயர் "நிக்கோபொலிஸ்" என்று மாற்றப்பட்டது. "பெருநகர்" நிலைக்கு உயர்த்தப்பட்டது. கி.பி. 639இல் ஏற்பட்ட கொள்ளைநோயின்போது எம்மாவு நகரில் சுமார் 25,000 மக்கள் இறந்தார்களாம்.

வரலாற்று எம்மாவு நகரை அடையாளம் காண்டல்

விவிலியத்தில் வருகின்ற எம்மாவு இன்று எங்கே உள்ளது என்று நிர்ணயிப்பதில் அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லை. எட்வர்ட் ராபின்சன் என்னும் அறிஞர் கருத்துப்படி, விவிலிய எம்மாவு நகரம் இன்றைய அரபு-பாலஸ்தீன ஊராகிய "இம்வாஸ்" என்பதாகும். 1967இல் அழிவுறுவதற்கு முன்னால் இம்வாஸ் யூதேயா மலைப்பகுதியின் எல்லையில் எருசலேமிலிருந்து சுமார் 18 மைல் தொலையில் அமைந்திருந்தது.

எவுசேபியு, ஜெரோம் போன்ற பண்டைய கிறித்தவ அறிஞர்கள் எம்மாவு நகரும் "நிக்கோப்பொலிஸ்" நகரும் ஒன்றே என்று கருத்துத் தெரிவித்தனர். எம்மாவு வழியில் இயேசுவை சந்தித்த கிளயோப்பாவின் வீட்டில்தான் இயேசு தங்கியதாகவும், அவ்விடத்தில் 3ஆம் நூற்றாண்டில் ஒரு கிறித்தவக் கோவில் கட்டப்பட்டதாகவும் ஜெரோம் குறிப்பிட்டுள்ளார். ஆக, கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்து நிக்கோப்பொலியும் எம்மாவு நகரும் ஒன்றே என்ற கருத்து பொதுவாக ஏற்கப்பட்டது. அப்பகுதியில் நடந்த அகழ்வாய்வுகளிலிருந்து அங்கு கி.பி. 2, 6, 12 நூற்றாண்டுகளில் கிறித்தவக் கோவில்கள் கட்டப்பட்டன என்று தெரிகிறது.

இன்றைய "அல்-குபேபே", "அபு-கோஷ்", "மோத்ஸா" என்னும் ஊர்களும் விவிலிய எம்மாவு நகரமாக இருக்கலாம் என்று வேறுபட்ட கருத்துகளும் உள்ளன.

ஆதாரங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.