ஃபார்ட்டிடியூட் நடவடிக்கை

ஃபார்ட்டிடியூட் நடவடிக்கை (Operation Fortitude) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு ஏமாற்று நடவடிக்கை (deception operation). நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த மேற்கு ஐரோப்பா மீதான படையெடுப்பு நிகழும் இடத்தை ஜெர்மானிய போர் உத்தியாளர்கள் கணிக்காது இருக்கவும், அவர்களது கவனத்தை வேறு இடங்களின் மீது திசை திருப்பவும் நேச நாடுகளால் மேற்கொள்ளப்பட்டது. இது பாடிகார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

போலி ரப்பர் டாங்கு

பின்னணி

இரண்டாம் உலகப் போர் துவங்கி நான்காண்டுகளுக்குப் பிறகு நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த மேற்கு ஐரோப்பா மீது மேற்கத்திய நேச நாடுகள் கடல்வழியாகப் படையெடுக்க முடிவு செயதன. 1944ல் பிரான்சின் நார்மாண்டிப் பகுதியில் இத்தாக்குதலை நிகழ்த்த திட்டமிட்டன. படையெடுப்பு நிகழும் இடம், காலம் ஆகியவற்றை ஜெர்மானிய உத்தியாளர்கள் கணிக்காது இருக்க பாடிகார்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாகப் படையெடுப்பு ஐரோப்பாவின் வேறு இடங்களில் நிகழப்போவதாக ஜெர்மானியர்களை நம்பவைக்கும் முயற்சிக்கு ஃபார்ட்டிடியூட் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது.

திட்டம்

போலி குண்டுவீசி விமானம்

இந்த ஏமாற்று வேலையைச் செய்ய ஐந்து வழிகள் கையாளப்பட்டன:

  1. போலி படைக் கட்டமைப்புகளைக் கொண்டு எதிரியினை ஏமாற்றுவது - போலி விமானங்கள், விமான ஓடுதளங்கள், ரப்பரினால் செய்யப்பட்ட டாங்குகள், மரத்தாலான பீரங்கிகள் ஆகியவை பல இடங்களில் நிறுத்தப்பட்டன.
  2. அயல்நாட்டு தூதரகங்கள் வாயிலாக படையெடுப்பு பற்றிய போலிச் செய்திகளை கசியவிடுதல் - நடுநிலை வகிக்கும் நாடுகளின் வாயிலாக அவை ஜெர்மானியர்கள் காதுக்கு எட்டும்
  3. போலி கம்பியில்லாத் தகவல் போக்குவரத்து - கற்பனைப் படைப்பிரிவுகள் உண்மையில் உள்ளன என்று நிரூபிக்க போலி ரேடியோ செய்திகள் அனுப்பப்பட்டன
  4. இரட்டை நிலை உளவாளிகளின் மூலம் தவறான செய்திகள் ஜெர்மானிய உளவுத் துறைக்கு அனுப்புதல்
  5. பிரபலமான அமெரிக்கத் தளபதி ஜார்ஜ் பேட்டன் தலைமையில் 1வது அமெரிக்க ஆர்மி குரூப் என்ற போலிப் படைப்பிரிவை உருவாக்கி, அது படையெடுப்பில் ஈடுபடும் என்று வதந்திகள் பரப்பப்பட்டன.

ஃபார்ட்டிடியூட் நடவடிக்கை வடக்கு ஃபார்ட்டிடியூட், தெற்கு ஃபார்ட்டிடியூட் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. வடக்கு ஃபார்ட்டிடியூட் திட்டத்தில் படையெடுப்பு ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த நார்வே நாட்டின் மீது படையெடுப்பு நிகழப் போகிறது என்று ஜெர்மானியர்களை நம்ப வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கற்பனையாக பிரிட்டானிய 4வது ஆர்மி என்ற படைப்பிரிவை உருவாக்கி ஸ்காட்லாந்தில் அது நிறுத்தப்பட்டிருப்பதாகவும், ஸ்கான்டினாவியா மீது தாக்கத் தயாராகுவதாகவும் பொய் செய்திகள் பரப்பப்பட்டன. போரில் நடுநிலை வகித்த சுவீடன் (நார்வேயின் அண்டை நாடு) அதிகாரிகளுடன் அதன் வான்பகுதியில் விமானங்கள் செல்ல அனுமதி வேண்டி நேச நாட்டு தூதர்கள் வெளிப்படையாகப் பேச்சுவார்த்தைகள் தொடங்கினர். இச்செய்தி ஜெர்மானியர்களை எட்டினால் படையெடுப்பு நிகழப்போவதாக அவர்கள் கருதுவர் என்பது நேசநாட்டு திட்டம்.

தெற்கு ஃபார்ட்டிடியூட் திட்டத்தில் படையெடுப்பு பிரான்சின் பா டீ கலே பகுதியில் நிகழப்போவதாக ஜெர்மானியர்களை நம்பவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கலே பகுதி ஆங்கிலக் கால்வாயின் மிகக் குறுகலாக பகுதியானதால், பிரிட்டனிலிருந்து பிரான்சுக்கு எளிதில் படைகளை நகர்த்த முடியும் என்று காரணம் சொல்லப்பட்டது. அமெரிக்கத் தளபதி ஜார்ஜ் பேட்டன் தலைமையில் கற்பனையாக அமெரிக்க 1வது ஆர்மி குரூப் என்ற படைப்பிரிவு உருவாக்கப்பட்டு படையெடுப்பு பாட்டன் தலைமையில் கலேயில் நிகழும் என்று வதந்திகள் பரப்பப்பட்டன. கலே கடற்கரைக்கு அருகிலிருந்த பிரிட்டானியக் கடலோரப் பகுதிகளில் போலியாக படைத் தளங்கள் உருவாக்கப்பட்டன. பேட்டன் அடிக்கடி இப்பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவது போல செய்திகள் வெளியிடப்பட்டன.

விளைவு

இந்த ஏமாற்று நடவடிக்கையின் விளைவாக, நேச நாட்டுப் படையெடுப்பு கலே பகுதியில் நிகழும் என்று ஜெர்மானிய உத்தியாளர்கள் உறுதியாக நம்பினர். பேட்டனின் 1வது அமெரிக்க ஆர்மி குரூப்பே படையெடுப்பில் கலந்து கொள்ளப்போகும் முக்கிய படைப்பிரிவு என்றும் அவர்கள் நம்பினர். இதனால் கலேப் பகுதியின் பாதுகாவல் பலப்படுத்தப்பட்டது. பிற கடற்பகுதிகளிலிருந்த படைப்பிரிவுகள் அங்கு அனுப்பப்பட்டன. ஜூன் 6, 1944ல் உண்மையான படையெடுப்பு நார்மாண்டியில் நிகழ்ந்த போது ஹிட்லர் அதனை ஒரு திசை திருப்பும் தாக்குதல் என்றே நம்பினார். உண்மையான படையெடுப்பு கலேயில் நிகழும் என்று காத்திருந்த அவர், அதனை முறியடிக்கத் தேவையான பான்சர் (கவச) படைப்பிரிவுகளை நார்மாண்டிக்கு அனுப்ப மறுத்துவிட்டார். நார்மாண்டியில் நிகழ்வது தான் உண்மையான படையெடுப்பு என்று ஜெர்மானியப் போர்த் தலைமையகம் உணர்வதற்குள் தரையிறங்கிய படைப்பிரிவுகள் நார்மாண்டியின் பல பகுதிகளைக் கைப்பற்றி விட்டன.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.