தி பிளிட்ஸ்

தி பிளிட்ஸ் (The Blitz) என்பது இரண்டாம் உலகப் போரில் நாசி ஜெர்மனியின் விமானப்படை பிரிட்டன் மீது நடத்திய தொடர் குண்டுவீச்சு கட்டத்தைக் குறிக்கிறது. செப்டம்பர் 6, 1940 முதல் மே 10, 1941 வரை நடந்த இந்த தொடர் குண்டுவீச்சில் 43,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். லண்டன் நகரம் மட்டும் தொடர்ச்சியாக 76 இரவுகள் குண்டுவீச்சுக்குள்ளானது.

தி பிளிட்ஸ்
இரண்டாம் உலகப் போரின், தாயக களத்தின் பகுதி

ஜெர்மானிய குண்டுவீச்சால் வீடிழந்த மூன்று லண்டன் நகரக் குழந்தைகள் தங்கள் வீட்டின் இடிபாடுகளுக்குமுன் அமர்ந்துள்ளனர்
நாள் செப்டம்பர் 7, 1940 – மே 10, 1941
இடம் ஐக்கிய ராஜ்யம்
மேல்நிலை உபாய அளவில் ஜெர்மானிய தோல்வி[1]
பிரிவினர்
ஐக்கிய ராஜ்யம் நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
வின்ஸ்டன் சர்ச்சில்
ஹ்யூக் டவ்டிங்
பிரடரிக் பைல்
ஓவன் ட்யூடர் பாய்ட்
லெஸ்லி கொஸ்ஸேஜ்
அடால்ஃப் ஹிட்லர்
ஹெர்மன் கோரிங்
ஹூகோ ஸ்பெர்லே
ஆல்பர்ட் கெஸ்ஸல்ரிங்
பலம்
விமான எதிர்ப்பு தலைமையகம்
பிரிட்டிஷ் பலூன் தலைமையகம்
இழப்புகள்
~43,000 பொதுமக்கள் மாண்டனர், ~51,000 காயமடைந்தனர்[2] 384 (அக்டோபர்– டிசம்பர் 1940 காலகட்டத்தில் மட்டும்)[3]

பிரிட்டன் சண்டையின் இறுதி கட்டத்தில் தொடங்கிய இந்த குண்டுவீச்சு பிரிட்டிஷ் மக்கள் மற்றும் அரசின் மன உறுதியைக் குலைத்து அவர்களை அச்சுறுத்தி சரணடையச் செய்வதற்காக ஹிட்லரால் தொடங்கப்பட்டது. பிரிட்டனின் முக்கிய நகரங்களும் தொழிற்கூடங்களும் தொடர்ந்து தாக்கப்பட்டன. ஆனால் இந்த குண்டுவீச்சால் ஜெர்மானியர்கள் திட்டமிட்ட படையெடுப்புக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. பிரிட்டிஷ் மக்களின் உறுதியும் குலையவில்லை. மே 1941ல் ஹிட்லரின் கவனம் கிழக்கே சோவியத் யூனியன் மீது திரும்பியதால் இந்த குண்டுவீச்சு நின்று போனது. அடுத்த சில ஆண்டுகளில் ஜெர்மானிய விமானப்படை பல முறை சிறிய அளவில் குண்டுவீசித் தாக்கியது. போரின் இறுதி மாதங்களில் வி-1 மற்றும் வி-2 வகை ஏவுகணைகளால் பிரிட்டன் தாக்கப்பட்டது.

பிரிட்டன் சண்டை

1940ல் மேற்கு ஐரோப்பா முழுவதையும் கைப்பற்றிய பின் நாசி ஜெர்மனியின் படைகள் அடுத்து பிரிட்டன் தீவுகளைக் கைப்பற்ற திட்டமிட்டன. ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரிட்டனின் கடற்கரைகளில் படைகளைத் தரையிறக்க பிரிட்டிஷ் விமானப்படை பேரிடராக இருக்கும் என்பதால், தரைவழிப் படையெடுப்பு தொடங்கும் முன் அதை அழிக்க வேண்டும் என்பதற்காக ஹிட்லரும், லுஃப்ட்வாஃபே (ஜெர்மானிய விமானப்படை) தலைமைத் தளபதி கோரிங்கும் வான்வழித் தாக்குதலைத் தொடங்கினர். ஆரம்பத்தில் இதன் இலக்கு பிரிட்டன் விமானப்படையின் அழிவாக மட்டும் இருந்தது. ஜூலை 10ஆம் தேதி தொடங்கிய இத்தாக்குதலின் போக்கு செப்டமபர் முதல் வாரத்தில் மாறியது. பிரிட்டனின் நகரங்கள் மீது குண்டுவீசி பிரிட்டிஷ் மக்களையும் ஆட்சியாளர்களையும் அச்சுறுத்தி பணியவைக்க ஹிட்லர் முடிவு செய்தார். இதன்படி செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் குண்டு வீச்சுக்குப் பிரிட்டிஷ் ஊடகங்கள் பிளிட்ஸ் என்று பெயர் வைத்தன. பிளிட்ஸ் என்ற சொல்லுக்கு ஜெர்மன் மொழியில் மின்னல் என்று பொருள். ஜெர்மன் தரைப்படைகளின் பிளிட்ஸ்கிரைக் தாக்குதல் முறையால் இப்பெயர் வான் தாக்குதலுக்கும் ஏற்பட்டது. மே 10, 1941 வரை நடைபெற்ற இத்தாக்குதலை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்.

தி பிளிடஸ்

லண்டன் பாதாள ரயில் நிலையப் பதுங்குகுழி

செப்டம்பர் 6, 1940 இரவில் பிளிட்சின் முதல் கட்டம் தொடங்கியது. லண்டன் துறைமுகத்தைக் குறிவைத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் நூறு முதல் இருநூறு ஜெர்மானிய குண்டு வீசி விமானங்கள் லண்டன், பிர்மிங்காம், பிரிஸ்டல் ஆகிய நகரங்களின் மீது குண்டு வீசின. நவம்பர் மாத பாதி வரை 13,000 டன் எடையுள்ள வெடி குண்டுகளும், பத்து லட்சம் எரி குண்டுகளும் பிரிட்டனின் நகரங்கள் மீது வீசப்பட்டன. பிளிட்ஸ் தொடரின் மிகப்பெரிய தாக்குதல் அக்டோபர் 15 அன்று நடைபெற்றது. சுமார் 400 குண்டு வீசி விமானங்கள் ஆறு மணி நேரம் தொடர்ந்து லண்டன் மீது குண்டு மழை பொழிந்தன. இரண்டாம் கட்டம் நவம்பர் 1940-பெப்ரவரி 1941 வரை நீடித்தது. இக்கட்டத்தில் பிரிட்டனின் தொழில் நகரங்களும், துறைமுக நகரங்களும் குறி வைக்கப்பட்டன. கோவண்ட்ரி, சவுத்தாம்டன், பிர்மிங்காம், லிவர்பூல், கிளைட்பாங்க், பிரிஸ்டல், சுவிண்டன், பிளைமவுத், மான்செஸ்டர், ஷெஃபீல்டு, ஸ்வான்சியா, கார்டிஃப், போர்ட்ஸ்மவுத், ஏவோன்மவுது ஆகிய நகரங்கள் தாக்குதலுக்குள்ளாகின. இக்கட்டத்தில் துறைமுகங்களின் மீது 14 தாக்குதல்களும், தொழில் நகரங்களின் மீது 9 தாக்குதல்களும், லண்டன் நகரின் மீது 8 தாக்குதல்களும் நடந்தன. பிளிட்ஸ் தாக்குதல்களிலேயே மிகப்பெரும் சேதத்தை உண்டாக்கிய தாக்குதல் டிசம்பர் 29ல் நடைபெற்றது. அன்று லண்டன் நகரின் மீது வீசப்பட்ட எரி குண்டுகளால் ஒரு நெருப்புப்புயல் உருவாகி லண்டன் நகரின் பெரும் பகுதிகள் தீக்கிரையாகின. இந்நிகழ்வு லண்டனின் இரண்டாம் பெருந்தீ என்றழைக்கப்படுகிறது.

நவம்பர் 14-15 குண்டுவீச்சில் தரைமட்டமாகிய கோவண்ட்ரி நகர மையப்பகுதி

பெப்ரவரி 1941ல் பிளிட்சின் மூன்றாம் கட்டம் தொடங்கியது. உளவியல் ரீதியாக பிரிட்டன் மக்களைப் பணிய வைக்க முடியாதென்று இதற்குள் ஜெர்மானியத் தளபதிகளுக்குப் புலனாகி விட்டது. ஜெர்மானிய கடற்படைத் தளபதி கார்ல் டோனிட்ஸ் அட்லாண்டிக் சண்டைக்குப் பயனளிக்கும் வகையில் பிரிட்டனின் துறைமுகங்களைக் குறிவைக்குமாறு ஹிட்லரிடம் கேட்டுக் கொண்டார் அதன்படி பெப்ரவரி 19 லிருந்து பிரிட்டனின் துறைமுகங்கள் தாக்கபட்டன. பிளைமவுத், பாரோ-இன்-ஃப்ர்னெஸ், கிளைட்பாங்க், போர்ட்ஸ்மவுத், பிரிஸ்டல், ஏவோன்மவுத், ஸ்வான்சியா, லிவர்பூல், பெல்ஃபாஸ்ட், ஹல், சண்டர்லாந்து, நியூகாசில் ஆகிய துறைமுகங்கள் இக்கட்டத்தில் தாக்கப்பட்டன. பெப்ரவரி 19- மே 12 காலகட்டத்தில் மொத்தம் 51 தாக்குதல்கள் நடத்தப்பட்டன. லண்டன் முதலான பிற நகரங்கள் ஐந்து முறை மட்டுமே தாக்கப்பட்டன. பிரிட்டன் சண்டையின் இலக்கான வானாதிக்க நிலையை லுஃப்வாஃபேவால் அடைய முடியவில்லையென்பதால் பிளிட்ஸ் குண்டுவீச்சுகள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து மே மாதம் முற்றிலுமாக நிறுத்திக் கொள்ளப்பட்டன.

விளைவுகள்

இடிபாடுகளுக்கிடையே நெருப்பை அணைக்கப் போராட்டம்

பிரிட்டிஷ் மக்களை அச்சுறுத்தி அடிபணிய வைக்க வேண்டுமென்ற ஹிட்லரின் நோக்கம் நிறைவேறவில்லை. மாறாக அவர்களின் உறுதி அதிகரிக்கவே செய்தது. குண்டு வீச்சுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கபப்ட்டது. கிட்டத்தட்ட 43,000 பொது மக்கள் பிளிட்சில் கொல்லப்பட்டனர்; 51,000 பேர் காயமடைந்தனர். லண்டன் நகர மக்கள் பிளிட்சை முறியடிப்பதில் பெரும்பங்காற்றினர். குண்டு வீச்சிலிருந்து தப்பிக்க பல பதுங்கு குழிகள் கட்டப்பட்டன. லண்டன் நகர பாதாள ரயில் (தி டியூப்) பாதைகள் குண்டு வீச்சு பதுங்கு குழிகளாக பயன்படுத்தப்பட்டன. தன்னார்வல தீயணைப்பு வீரர்கள் படை குண்டுவீச்சினால் உண்டான நெருப்புகளை அணைக்க பாடுபட்டது. பல தன்னார்வலர்கள் தாயகப் படைகள், கூடுதல் தீயணைப்புப் படைகள் போன்ற படைப்பிரிவுகளில் சேர்ந்து பணியாற்றினர். சாரண இயக்கச் சிறுவர்கள் தீயணைப்பு வண்டிகளுக்கு வழிகாட்டிகளாகப் பணி புரிந்தனர்.

போர் முடிந்த பின்னும் அகற்றப்படாத வெடிக்காத குண்டுகள்

பிரிட்டிஷ் அரசாங்கம், பொது மக்களின் உயிச்சேதத்தைக் குறைக்க பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. போரின் மற்ற விஷயங்களுக்காக செலவிட்டுக் கொண்டிருந்த வளங்களை அவர்கள் பொது மக்களைக் காப்பதற்காக செலவிடவில்லை. ஜெர்மனியைத் தோற்கடிக்கும் மேல் நிலை உபாயத்தின் படி ராணுவ நடவடிக்கைகளுக்கு அவர்கள் தொடர்ந்து முன்னுரிமை கொடுத்து வந்தனர். இத்தகைய போக்கினால் பொது மக்களுக்கு உயிர்ச்சேதம் அதிகமாக இருந்தாலும், இது போரில் ஜெர்மனியை விரைவில் தோற்கடிக்கக் காரணமாக அமைந்தது. ஆனால் தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க அவர்களை நகரங்களிலிருந்து கிராமப்புறங்களுக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு 6,50,000 குழந்தைகள் இடம் பெயர்ந்தனர். பிளிட்சை எதிர்கொள்ள லண்டனின் வான் பாதுகாப்பு பிணையம் வலுப்படுத்தபப்ட்டது. ஜெர்மானிய விமானங்களைக் கண்டுபிடிக்க ராடார் தொழில்நுட்பத்திலும் நல்ல முன்னேற்றம் உண்டானது.

பிந்தைய குண்டுவீச்சுகள்

மே 1941ல் பிளிட்ஸ் முடிவடைந்தாலும், இரண்டாம் உலகப்போரில் மீண்டும் மூன்று முறை பிரிட்டன் மீது குண்டு வீச்சு நடத்தப்பட்டது. 1942, 1943 ஆம் வருடங்களில் விமானங்கள் மூலமாகவும், 1944, 1945ல் வி-1, வி-2 ஏவுகணைகளாலும் ஜெர்மனி பிரிட்டனைத் தாக்கியது. இத்தாகுதல்களால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டாலும் ராணுவ ரீதியாக எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை.

அடிக்குறிப்புகள்

  1. Hooton 1997, p. 42.
  2. Haigh, Christopher (1990). The Cambridge historical encyclopedia of Great Britain and Ireland‎. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 317. ISBN 978-0521395526.
  3. Murray 1983, p. 55.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.