எரிகுண்டு
எரி குண்டுகள் (Incendiary bombs) என்பவை இலக்குகளில் தீ மூட்டுவதற்காக வீசப்படும் குண்டுகள். நேபாம், தெர்மைட், வெள்ளை பாசுபரசு, குளோரின் டிரைபுளோரடு போன்ற வேதிப் பொருட்களால் இவை செய்யப்படுகின்றன. வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து எரி குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் முதலாம் உலகப் போரில் வான்படை வானூர்திகளின் மூலம் குண்டுவீசும் உத்தி அறிமுகப்படுத்தப்பட்ட பின், எரி குண்டுகளின் பிரயோகம் பரவலாயிற்று. இரண்டாம் உலகப் போரின் போது விமானப் படைகளின் தொடர் குண்டு வீச்சு மிக அதிகமானதால், எரி குண்டுகள் பெருமளவில் பயன்படுத்தபட்டன. வியட்நாம் போரில் நேபாம் எனப்படும் பெட்ரோலிய வேதிப்பொருளாலான எரி குண்டுகள் பரவலாக பயன்படுத்தப்பட்டன. தற்போது எரி குண்டுகளின் பயன்பாடு தொடர்பான விதிமுறைகள் ஐக்கிய நாடுகள் சபையின் சாதாரண ஆயுதங்கள் சாசனத்தின் மூன்றாவது நெறிமுறையால் வரையறுக்கப்பட்டுள்ளன.
