1 குறிப்பேடு

1 குறிப்பேடு (1 Chronicles) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும். இதன் பின்னே வருகின்ற 2 குறிப்பேடு என்னும் நூல் யூதா-இசுரயேல் நாடுகளின் வரலாற்றைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.

அரசர் சவுலின் இறப்பு (1 குறி 10). ஓவியர்: ஏலி மர்க்கூசு (1817-1902). காப்பிடம்: தெல் அவீவ், இசுரயேல்.

நூலின் பெயர்

"1 & 2 குறிப்பேடு" என்னும் நூல்கள் மூல மொழியாகிய எபிரேயத்தில் "Divrei Hayyamim" (= நாள் நிகழ்வுகள்) என அறியப்படுகின்றன. அதாவது, யூதா-இசுரயேல் நாடுகளை ஆண்ட அரசர்களின் "காலத்தில்" ("நாள்களில்") நிகழ்ந்தவை அங்கே குறிக்கப்பட்டுள்ளன. இதனால், பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் "குறிப்பேடு" என்பது "நாளாகமம்" என்று அறியப்பட்டது.

கிரேக்க மொழியில் "குறிப்பேடுகள்" Paralipomenon (Παραλειπομένων) என்னும் பெயரால், அதாவது "விடுபட்டவை" அல்லது "பிற", அல்லது "வேறு" என்னும் பொருள்படும் வகையில் அழைக்கப்பட்டன.

நூலின் மையக் கருத்துகள்

"சாமுவேல்" மற்றும் "அரசர்கள்" ஆகிய நூல்களில் குறிக்கப் பெற்ற நிகழ்ச்சிகளே குறிப்பேடுகளில் வேறொரு கோணத்தில் காட்டப்படுகின்றன.முதலாம் குறிப்பேட்டின் இரு அடிப்படைக் கருத்துகள் இவை:

1) இசுரயேல் மற்றும் யூதா அரசுகளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளுக்கிடையிலும் கடவுள் தம் வாக்குறுதிகளைத் தொடர்ந்து காத்ததோடு, யூதாவில் இருந்தவர்கள் வழியாக, தம் மக்களுக்கான திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டு வந்தார். இதற்குச் சான்றாக தாவீது மற்றும் சாலமோன் ஆகியோர் ஆற்றிய பெரும் சாதனைகளும், யோசபாத்து, எசேக்கியா, யோசியா, ஆகியோர் செய்த சமயச் சீர்திருத்தங்களும், மக்கள் கடவுளிடம் கொண்டிருந்த பற்றுறுதியும் விளங்குகின்றன.

2) எருசலேம் கோவிலைக் கட்டியெழுப்பியவர் சாலமோனே. ஆயினும், அங்கு தொடங்கிய இறைவழிபாட்டு ஒழுங்குமுறைகளையும் அவற்றுக்கான குருத்துவ, லேவிய அமைப்புகளையும் ஏற்படுத்தியவர் தாவீதே.

1 குறிப்பேடு நூலின் உட்கிடக்கை

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. வழிமரபு அட்டவணை 1:1 - 9:44 612 - 627
2. சவுலின் இறப்பு 10:1-14 627 - 628
3. தாவீதின் ஆட்சி

அ) தொல்லைகளும் சாதனைகளும்
ஆ) கோவிலைக் கட்டுவதற்கான தயாரிப்பு

11:1 - 29:30

11:1 - 22:1
22:2 - 29:30

628 - 656

628 - 644
644 - 656

மேலும் காண்க

விக்கிமூலத்தில் குறிப்பேடு - முதல் நூல்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.