வெறிபாடிய காமக் கண்ணியார்
வெறிபாடிய காமக்கண்ணியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். [1]இவர் பாடியனவாகச் சங்க நூல்களில் இரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளன. [2] இரண்டும் குறிஞ்சித் திணை பற்றிப் பாடிய அகப்பொருள் பாடல்கள். இரண்டு பாடல்களிலும் தலைவி தன் தோழியிடம் தலைவனைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறாள். இரண்டு பாடல்களிலும் வெறியாட்டு பற்றிய செய்திகள் உள்ளன.
பெயர் விளக்கம்
- வெறியாட்டு விழாவைப் பற்றி இப் புலவர் தம் இரு பாடல்களிலும் பாடியுள்ளதால் இவரை வெறிபாடிய காமக் கண்ணியார் என்றனர்.[3] காமக் கண் என்பது வெறியாடும் பெண்ணின் காமக் கண்.
- இவர் பாடற் பொருளால் பெயர் பெற்ற புலவர்.
வெறியாட்டு
தலைவன் தலைவியைத் துய்த்தான். அவன் ஏக்கத்தால் தலைவி மெலிந்தாள். மெலிவுக்குக் காரணம் தாய் ஆராய்ந்தது பற்றியும், வெறியாட்டு விழாக் கொண்டாடியது பற்றியும், விழாவுக்குப் பின் நிகழ்ந்தது பற்றியும் இப் புலவர் தன் இரு பாடல்களிலும் கூறியுள்ள செய்திகளின் தொகுப்பு இது.
- தலைவன் தலைவி உறவு தாய்க்குத் தெரியாது.
- தலையளி செய்யாத தலைவனை நினைந்து ஏங்கும் தலைவி உடல் மெலிந்துபோகிறாள். அதனால் அவளது கைவளை கழல்கிறது.
- தலைவி மெலிவுக்குக் காரணம் என்னவென்று அவளது தாய் குறிசொல்லும் முதுவாய்ப் பெண்டைக் கேட்கிறாள். அவளும் அவளைச் சேர்ந்தவர்களும் 'பொய்வல் பெண்டிர்'. அவள் பிரம்பைத் தலைவியின் கையில் வைத்துப் பார்த்துக் குறி சொல்கிறாள்.
- குறிக்காரி நெடுவேளாகிய முருகனைப் பேணி விழாக் கொண்டாடினால் இவள் ஏக்கம் தணியும் என்கிறாள்.
- அதன்படி விழாக் கொண்டாடினர்.
- அந்த விழாவை முருகாற்றுப்படுத்தல் என்றும் கூறுவர்.
- மகளின் அழகு முன்பு இருந்ததைவிட மேலும் சிறக்கவேண்டும் எனத் தாய் வேண்டிக்கொள்வாள்.
- மனையில் இன்னிசை முழங்கப்படும்.
- விழாவுக்குக் களம் அமைப்பர். அகன்ற பந்தல் போடுவர்.
- முருகாற்றுப்படுத்தும் பெண்ணுக்கு வெள்ளெருக்கு மாலையும், கடம்பு மாலையும் அணிவிப்பர்.
- வேலன் வீடெங்கும் எதிரொலிக்கும்படி முருகன் பெயர் சொல்லிப் பாடிக்கொண்டு கைகளை உயர்த்தி ஆடுவான்.
- (மறி என்னும் ஆட்டுக்குட்டியைப்) பலி கொடுப்பான்.
- அதன் குருதியில் கலந்து தினையை மனையெங்கும் தூவுவான்.
- பொம்மலாட்டத்தில் பொம்மையை ஆட்டுவது போல வெறியாடு மகளைத் தன் விருப்பப்படி ஆட்டுவிப்பான்.
- இதுதான் வெறியாட்டு.
பாடல் தரும் செய்திகள்
- வெறியாட்டு விழாக் கொண்டாடி முடிந்த நாளின் நள்ளிரவில் தலைவன் தலைவியின் இல்லத்துக்கு வந்துவிட்டான். தலைவியை வேலன் பிரம்பால் அடித்த இடங்களிலெல்லாம் உயிர் குழைந்து இன்பம் ஏறும் வகையில் ஆரத் தழுவித் தழுவி ஆறுதல் கூறினான். [4]
- என் கைகளில் கழன்ற வளையல் வெறியாடிய பின் முருகன் அருளால் கழலாமல் நின்றுவிட்டால், நின்றுவிட்ட செய்தியை என் கான்கெழு நாடன் கேட்டால், பிறன் ஒருவன் வளையல் செறியச் செய்தான் என எண்ணினால், நான் உயிர் வாழமாட்டேன் - என்கிறாள் தலைவி. [5]
அடிக்குறிப்பு
- தமிழாய்வு தளம்
- அகநானூறு 22, 98
- ஒரு கடிதம்-லலிதாராம் வரலாறு டாட் காம்
- அகநானூறு 22
- அகநானூறு 98
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.