பழமுதிர்சோலை முருகன் கோயில்
பழமுதிர்சோலை முருகன் கோயில், முருகனின் அறுபடை வீடுகளில், ஆறாம் படை வீடான இத்தலம், மதுரை மாவட்டம், அழகர் கோவில் மலை மீதுள்ள பழமுதிர்சோலையில் அமைந்துள்ளது. இத்தலத்தில் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அடியவர்களுக்கு அருள் செய்கிறார். இங்கு முருகனின் 3 அடி உயர வேலுக்கு தனி சன்னதி உள்ளது. [1][2][3]

மேலும் இந்தத் தலத்திற்கு பெருமை தருவது அவ்வையார் பாட்டிக்கு முருக பெருமான் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு பழத்தில் எப்படி சுட்டபழம், சுடாத பழம் உண்டு என்பதை அனுபவ பூர்வமாக உணர்த்திக் காட்டிய உன்னதமான தலம் இதுவாகும். இந்த தலத்தின் தல மரமாக இருப்பது நாவல் மரம் ஆகும்.
இத்தலத்தில் முன்னர் முருக வேல் மட்டுமே இங்கு இருந்ததாகவும், பின்னர் முருகன்–வள்ளி, தெய்வானைக்கு தனி சன்னதி உருவாகியது என்பர்.
நக்கீரர், அருணகிரி நாதர், அவ்வையார் ஆகியோர் முருகனை துதித்துப் பாடிய பெருமை வாய்ந்த தலமாகும்.
சோலை மலையிலிருந்து சிறிது தொலைவில் ராக்காயி அம்மன் கோவில் உள்ளது. அதன் அருகில் உள்ள சுனையில் பெருக்கெடுக்கும் தீர்த்தம் மிகவும் சுவையாக உள்ளது. இதை நூபுர கங்கை என்றும் கூறுகின்றனர்.
போக்குவரத்து
மதுரை மாநகரிலிருந்து பேருந்து மூலம் அழகர் கோவில் சென்று, அங்கிருந்து மலைப்பாதை வழியாக நடந்தும், சிற்றுந்துகள் மற்றும் வாடகை வண்டிகள் மூலம் சோலைமலை எனப்படும் பழமுதிர்சோலை அடையலாம்.