நார்மாண்டி படையெடுப்பு

நார்மாண்டி படையெடுப்பு (Invasion of Normandy) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த நேச நாட்டு படையெடுப்பு நடவடிக்கையைக் குறிக்கிறது. நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டுக் கடல் வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. ஓவர்லார்ட் நடவடிக்கையின் முதல் சில வாரங்களில் நிகழ்ந்த சண்டைகள் “நார்மாண்டி படையெடுப்பு” என்று அழைக்கப்படுகின்றன.

நார்மாண்டி படையெடுப்பு
ஓவர்லார்ட் நடவடிக்கையின் பகுதி

நார்மாண்டி கடற்கரையில் தரையிறங்கும் நேச நாட்டுப் படைகள்
நாள் 6 ஜூன் – ஜூலை மத்தி 1944
இடம் நார்மாண்டி, பிரான்சு
தெளிவான நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
நேச நாடுகள்

 ஐக்கிய அமெரிக்கா
 ஐக்கிய இராச்சியம்
 கனடா
சுதந்திர பிரெஞ்சுப் படைகள்
சுதந்திர போலந்தியப் படைகள்
 ஆத்திரேலியா
சுதந்திர பெல்ஜியப் படைகள்
 நியூசிலாந்து
 நெதர்லாந்து
 நோர்வே
சுதந்திர செக்கஸ்லோவாக்கியப் படைகள்
கிரேக்கம்

அச்சு நாடுகள்

 நாட்சி ஜெர்மனி

தளபதிகள், தலைவர்கள்
டுவைட் டி. ஐசனாவர்
பெர்னார்ட் மோண்ட்கோமரி
ஒமார் பிராட்லி
டிராஃபர்ட் லீக்-மல்லோரி
ஆர்தர் டெட்டர்
மைல்ஸ் டெம்சி
பெர்ட்ராம் ராம்சே
கெர்ட் வோன் ரன்ஸ்டெட்
எர்வின் ரோம்மல்
ஃபிரடரிக் டால்மான்
 
பலம்
1,332,000 (ஜூலை 24ல்)[1] 380,000 (ஜூலை 23ல்)[2]
இழப்புகள்
ஜூலை 24 வரை
~120,000 [1]
ஜூலை 24 வரை
113,059 [1]

நார்மாண்டி படையெடுப்பு என்ற குறியீடு நார்மாண்டி படையிறக்கம் மற்றும் ஓவர்லார்ட் நடவடிக்கை, டி-டே போன்ற நிகழ்வுகளில் இருந்து வேறுபட்டது. பிரான்சு மீதான ஒட்டு மொத்த படையெடுப்பு நிகழ்வு ஓவர்லார்ட் நடவடிக்கை எனப்படுகிறது. இது ஜூன் 6 முதல்-ஆகஸ்ட் 25ல் பாரிசு வீழ்ந்தது வரை நடந்த மொத்த நடவடிக்கைகளைக் குறிக்கிறது. இதன் ஆரம்ப கட்ட தரையிறக்கம் ”நார்மாண்டி படையிறக்கம்”/”நெப்டியூன் நடவடிக்கை” எனவும், இது நிகழ்ந்த ஜூன் 6, 1944 டி-டே என்றழைக்கப்படுகிறது. ”நார்மாண்டி படையெடுப்பு” என்பது இந்த படையிறக்கமும் அதன் பின்னர் நார்மாண்டிப் பகுதியினைக் கைப்பற்ற ஜூலை மாத பாதி வரை நடந்த சண்டைகளையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

ஜூன் 6, 1944ல் தொடங்கிய படையிறக்கம் இரு கட்டங்களாக நடைபெற்றது. வான்வழியாக 24,000 பிரிட்டானிய மற்றும் அமெரிக்கப் படையினர் ஜுன் 5 பின்னிரவிலும், ஜூன் 6 அதிகாலையிலும் தரையிறங்கினர். பின் ஜூன் 6 காலை 6.30 மணியளவில் தரைப்படைகள் கடல்வழியாகத் தரையிறங்கத் தொடங்கின. தரையிறக்கம் நிகழ்ந்த 80 கிமீ நீளமுள்ள நார்மாண்டி கடற்கரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை யூட்டா, ஒமாகா, கோல்ட், ஜூனோ மற்றும் சுவார்ட். இவ்வைந்து கடற்கரைகளிலும் ஜூன் 6 இரவுக்குள் 1,60,000 படையினர் தரையிறங்கினர். ஜுன் 11 வரை (டி +5) 3,26,547 வீரர்கள், 54,186 வண்டிகள் மற்றும் 1,04,428 டன் தளவாடங்கள் நார்மாண்டியில் இறக்கப்பட்டன. ஜூன் 30ல் (டி+24) இவை முறையே 8,50,000 வீரர்கள், 1,48,000 வண்டிகள் மற்றும் 5,70,000 டன்களாக அதிகரித்திருந்தது. ஜுலை 4ம் தேதிக்குள் பத்து லட்சம் படைவீரர்கள் பிரான்சில் நுழைந்துவிட்டனர். இப்பெரும் படையெடுப்பை சமாளிக்க ஜெர்மனியின் ஆர்மி குரூப் பி, ஃபீல்டு மார்ஷல் ரோம்மலின் தலைமையில் இப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. கடற்கரை அரண்நிலையான அட்லாண்டிக் சுவர் பலப்படுத்தப்பட்டிருந்தது.

நேச நாட்டுப் படைகளை எதிர்கொள்ளுவது எப்படி என்று ஜெர்மானியத் தளபதிகளுக்குள் கருத்து வேறுபாடு இருந்தது. நேச நாட்டுப் படைகளை கடற்கரையில் காலூன்ற விட்டுவிட்டால் பின் அவர்களை திருப்பி விரட்டவே முடியாது என்று ரோம்மல் உறுதியாக நம்பினார். நேச நாட்டு வான்படைகளின் வான் ஆதிக்க நிலை, ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்களை முறியடித்துவிடும், எனவே படையெடுப்பை கடற்கரையில் படைகள் இறங்கும் தருவாயிலேயே எதிர்த்து அழித்து விடவேண்டும். இதற்காக அனைத்து ஜெர்மானியப் படைப்பிரிவுகளையும் கடற்கரைப் பகுதிகளுக்கு நகர்த்த வேண்டும் என்பது அவரது திட்டம். ஆனால் இட்லரும் மேற்கு முனை தளபதி ரன்ஸ்டெட் ஆகியோர் இதற்கு மாறான ஆழப் பாதுகாப்பு (depth in defence) உத்தியினை ஏற்றுக்கொண்டனர். நேச நாட்டுப் படைகள் எங்கு தரையிறங்குவார்கள் என்று தெரியாத போது, பெரும்பாலான படைப்பிரிவுகளை பிரான்சின் உட்பகுதியில் நிறுத்த வேண்டும், படையெடுப்பு நிகழும் போது நேச நாட்டுப் படைகளைச் சிறிது முன்னேற விட்டு பின்பு சுற்றி வளைத்து அழிக்க வேண்டும் என்பது அவர்களது திட்டம். ஆனால் ரோம்மல் எச்சரித்தது போலவே நேச நாட்டு வான்படை பலம், ஜெர்மானியப் படை மற்றும் தளவாடப் போக்குவரத்தை முடக்கி விட்டது.

நேச நாட்டுப் படைகளால் கைப்பற்றப்பட்ட நார்மாண்டிப் பகுதி அமெரிக்கப் பகுதி, பிரிட்டானிய/கனடியப் பகுதி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அமெரிக்கப் பகுதியில் ஜூன் மாத இறுதிக்குள் செர்போர்க் மற்றும் கேரன்டான் ஆகிய முக்கிய இலக்குகள் வீழ்ந்தன. ஆனால் பிரிட்டானியப் பகுதியில் கான் நகரைச் சுற்றி ஜூலை மாத இறுதிவரை கான் கடும் சண்டை நிகழ்ந்தது. நார்மாண்டியைச் சுற்றி ஏற்பட்ட ஜெர்மானியப் படை வளையத்தை கான் நகரில் தான் நேச நாட்டுப் படைகள் உடைத்து வெளியேறுவர் என்று ஜெர்மானியத் தளபதிகள் கருதியதால், பிரிட்டானியப் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தினர். இதனால் அமெரிக்கப் பகுதியில் ஜெர்மானிய எதிர்ப்பு குறைவாக இருந்தது. ஜூலை மாத மத்தியில் நார்மாண்டிக் கடற்கரைப் பகுதி பெரும்பாலும் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. நேச நாட்டுப் படைகள் அடுத்த கட்டமாக பிரான்சின் உட்பகுதிக்கு முன்னேறத் தயாராகின. ஜூலை 25ம் தேதி இந்த முன்னேற்றம் தொடங்கியது. இத்துடன் ஓவர்லார்ட் நடவடிக்கையின் நார்மாண்டிப் படையெடுப்பு கட்டம் முற்றுப்பெற்றது.

மேற்கோள்கள்

  1. Tamelander, M, Zetterling, N (2004), Avgörandes Ögonblick: Invasionen i Normandie. Norstedts Förlag, p. 295
  2. Zetterling 2000, p. 32
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.