யாழ் நூல்

யாழ் நூல் பழந்தமிழரின் இசை நுட்பங்கள், யாழ் ஆகியன பற்றி ஆராய்ச்சி முறையாக விபரிக்கும் ஒரு முதல் நூல் ஆகும். பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளாகிய வில் யாழ், பேரி யாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ், சீறி யாழ், சகோட யாழ் என்பன பற்றி யாழ் நூல் கூறுகின்றது. இந்நூலை இயற்றியவர் சுவாமி விபுலானந்தர் ஆவார். விபுலானந்தரின் பதினான்காண்டு ஆராய்ச்சியின் பயனாக இயற்றப்பட்டதே யாழ் நூல் ஆகும்.[1] தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று ஆராய்ந்து எழுதப்பட்ட இந்நூலின் அரங்கேற்றம், கரந்தை தமிழ்ச்சங்க ஆதரவில் திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேசுவரர் திருக்கோயிலில் 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்களில் நடந்தேறியது.[2]

யாழ் நூல்
யாழ் நூலின் ஆரம்பப் பதிப்பு
நூலாசிரியர்சுவாமி விபுலானந்தர்
நாடுஇலங்கை, இந்தியா
மொழிதமிழ் மொழி
வகைஇசை நூல்
வெளியீட்டாளர்கரந்தைத் தமிழ்க்கல்லூரி, தஞ்சாவூர்
வெளியிடப்பட்ட திகதி
5 சூன் 1947
பக்கங்கள்~97

பின்னணி

தமிழரின் இசை, நடனம், நாடகம் தொடர்பான பல்வேறு நுட்பங்கள் குறித்த விபரங்களை உள்ளடக்கிய தமிழ்க் காப்பிய நூல் சிலப்பதிகாரம். இலகுவில் கிடைத்தற்கு அரிதாக இருந்த இந்த நூலை, உ. வே சாமிநாத ஐயர் 1892ல் முழுமையாக அச்சிட்டு வெளியிட்டார். சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரை தமிழ் இசை நுணுக்கங்கள் குறித்த சில விளக்கங்களைத் தந்தாலும் அவ்விசை குறித்து முழுமையாக அறிந்துகொள்வதற்கு இவை போதுமானதாக அமையவில்லை. பின்வந்த அறிஞர்கள் சிலர் இவற்றை ஆராய்ந்து தமிழ் இசையின் தன்மை குறித்து விளக்கங்கள் தந்தனர். சிலப்பதிகாரத்தை நன்கு கற்றிருந்த விபுலானந்தர் அந்நூலின் சொல்லப்பட்டிருந்த இசை நுணுக்கங்கள் குறித்தும், பல்வேறு தமிழ் இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டிருந்தாலும் பின்னர் வழக்கற்றுப் போய்விட்ட யாழ் என்னும் இசைக்கருவி குறித்தும் அறிய ஆர்வம் கொண்டார். விபுலானந்தர் கணிதம், இயற்பியல் ஆகியவற்றிலும் விற்பன்னராக இருந்ததால், இந்த ஆய்வுக்கு அவை உதவியாக அமைந்தன.

விபுலானந்தர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைக்குத் தலைவராக இருந்த காலத்தில், கருநாடக இசையின் அமைப்பு, நுணுக்கங்கள் ஆகியவை பற்றி அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 1936ல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆதரவில் இடம்பெற்ற இவரது பேச்சொன்றில், பழந்தமிழருடைய யாழ்கள் பற்றி விளக்கியதுடன் அவற்றின் அமைப்பையும் படங்கள் மூலம் விளக்கினார். இவரது ஆய்வுகளில் ஆர்வம் கொண்ட அறிஞர்கள் பலரும் இவரது ஆய்வுகளை நூலாக வெளியிடுமாறு ஊக்கம் கொடுத்தனர். எனினும், வெவ்வேறு காலகட்டங்களில் இவரது பணிகள் காரணமாக இந்த ஆய்வு தடைப்பட்டிருந்தது. இந்தியாவில் இமயமலைச் சாரலில் பிரபுத்த பாரதம் என்னும் ஆங்கில நூலுக்கு ஆசிரியராக இருந்தபோதும், பின்னர் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய போதும் இந்த ஆய்வை நிறைவு செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.[3]

ஆய்வுக் காலத்தில், கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடாகிய தமிழ்ப் பொழிலிலும், மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டு வந்த செந்தமிழ் என்னும் இதழிலும் இவ்வாய்வுடன் தொடர்புள்ள பல கட்டுரைகள் வெளிவந்தன. அத்துடன் திருச்சிராப்பள்ளி, சென்னை ஆகிய இடங்களில் உள்ள வானொலி நிலையங்களில் இது தொடர்பான விபுலானந்தரின் பேச்சுக்கள் இடம்பெற்றன. மேற்குறித்த கட்டுரைகளிலும், பேச்சுக்களிலும் இருந்த விடயங்களும் கருத்துக்களும் யாழ் நூலில் இடம்பெற்றுள்ளன.[4]

அமைப்பு

யாழ் நூல் பின்வரும் ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது:

  1. பாயிர இயல் - இவ்வியலில் தெய்வ வணக்கத்துடன்; இசை நரம்புகளின் பெயரும் முறையும்; இசை நரம்புகளின் ஓசைகளும் அவற்றுக்குப் பிற்காலத்தார் வழங்கிய பெயர்களும்; இயற்கை இசையும் பண்ணப்பட்ட இசையும்; மூவகைத் தானம், ஆரோசை, அமரோசை, நால்வகைச் செய்யுள் இயக்கம்; தேவபாணியும் பரிபாடலும்; மிடற்றுப் பாடலும் கருவிப் பாடலும்; திணைக் கருப்பொருளாகிய யாழின் பகுதி; யாழ்க்கருவியின் தெய்வ நலம், அது தமிழ் நாட்டிலிருந்து பிற நாடுகளுக்குப் பரவிய வரன்முறை போன்ற தலைப்புக்களில் ஆய்வு விளக்கங்கள் தரப்படுகின்றன.
  2. யாழ் உறுப்பியல் - இந்த இயலில் யாழ் வகைகளான வில் யாழ், பேரி யாழ், மகர யாழ், சீறி யாழ், செங்கோட்டி யாழ், சகோட யாழ் என்பன பற்றி, அவற்றின் உருவ அமைப்பு, அவற்றின் உறுப்புக்கள் என்பவற்றுடன் விளக்கப்பட்டுள்ளது.
  3. இசை நரம்பியல்
  4. பாலைத் திரிபியல்
  5. பண் இயல்
  6. தேவார இயல்
  7. ஒழிபியல்

பதிப்புக்கள்

யாழ் நூல் இதுவரை மூன்று பதிப்புக்கள் வெளிவந்துள்ளன. முதற் பதிப்பு 1947ல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால், கரந்தை கூட்டுறவுப் பதிப்பகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதற்கான செலவுகளைத் திரு பெ. இராம. இராம. சித. சிதம்பரம் செட்டியார் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.[5] 27 ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாவது பதிப்பையும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினரே வெளியிட்டனர். இது 1974ல் வெளிவந்தது. பல அமைப்புக்களும், தனியாரும் வழங்கிய நிதியுதவி இதற்குப் பயன்படுத்தப்பட்டது. இந்த இரண்டாம் பதிப்பில் க. வெள்ளைவாரணர் தமிழில் வழங்கிய முன்னுரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுச் சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்புப் பல்கலைக்கழக இதழில் வெளியான விபுலானந்தரின் "ஆயிரம் நரம்பு யாழ்" என்னும் ஆங்கிலக்கட்டுரையும் இரண்டாம் பதிப்பில் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டது.[6] பின்னர், சில புலம்பெயர்ந்து வாழும் ஆர்வலர்களினதும், பிறரதும் துணையுடன் திருநெல்வேலி யாதுமாகி பதிப்பகத்தின் சார்பில் யாழ் நூலின் மூன்றாம் பதிப்பு 2003ல் வெளியானது. இப்பதிப்பில் நா. மம்மது அவர்களின் கருத்துரை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.[7]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "விபுலானந்த அடிகளார்". பார்த்த நாள் 31 திசம்பர் 2016.
  2. "வில்வவனேசுவரர் கோவில்".
  3. கந்தசாமி, நீ., (யாழ் நூலுக்கான முகவுரை) யாழ் நூல், யாதுமாகி பதிப்பகம், பாளையங்கோட்டை, 2003. பக். 2, 3.
  4. விபுலானந்த அடிகளார், யாழ் நூல், யாதுமாகி பதிப்பகம், பாளையங்கோட்டை, 2003. பக். 28.
  5. முதற்பதிப்பின் பதிப்புரை, யாழ் நூல், யாதுமாகி பதிப்பகம், பாளையங்கோட்டை, 2003. பக். XXII.
  6. இரண்டாம் பதிப்பின் பதிப்புரை, யாழ் நூல், யாதுமாகி பதிப்பகம், பாளையங்கோட்டை, 2003. பக். XX, XXI.
  7. யாழ் நூல், யாதுமாகி பதிப்பகம், பாளையங்கோட்டை, 2003. பக். IV, VI.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.