மோகினித்தீவு

மோகினித்தீவு தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் எழுதப்பட்ட ஒரு குறு நாவலாகும். திரைப்படக் கொட்டகையில் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்து வெறுத்து இருக்கும் ஒருவருக்கு, பிழைப்புத் தேடி பர்மா சென்ற அவரது நண்பர் ஒருவர் சொல்வது போல அமையும் கதையே இந்த நாவலாகும்.

மோகினித்தீவு
நூலாசிரியர்கல்கி கிருஷ்ணமூர்த்தி
பட வரைஞர்ஓவியர்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைவரலாற்றுப் புதினம்
வெளியீட்டாளர்வானதி பதிப்பகம்

கதைச் சுருக்கம்

பிழைப்புத் தேடி தமிழகத்தில் இருந்து பர்மா செல்லும் ஒருவர் பழைய சரக்குக் கப்பல் ஒன்றில் மிகுந்த பிரயாசத்துடன் பயணம் செய்கின்றார். உலக யுத்த காலத்தில் பயணம் செய்யும் இந்தக் கப்பல் இடையில் ஒரு விபத்தைச் சந்திக்கின்றது. விபத்தில் சிக்கிய நண்பர் உயிர் பிழைத்து ஒரு தீவை அடைகின்றார். அந்தத் தீவில் மனித நடமாட்டம் எதுவும் இல்லாத போதும் ஒரு ஆடவனும், பெண்ணும் இருக்கின்றார்கள். அவர்கள் தமிழில் கூடப் பேசுகின்றார்கள். இந்த தீவில் நடைபெறும் கதையையே இந்த நாவல் வடித்திருக்கின்றது.

சோழ நாட்டினை உத்தம சோழன் எனும் மன்னன் ஆண்டு வருகிறான். அவனுக்கு (உத்தம சோழனுக்கு) ஆதித்தன், சுகுமாறன் என இருமகன்கள். அதில் சுகுமாறன் பட்டத்து இளவரசன். ஆதித்தன் அவன் தம்பி. இவர்கள் காலத்தில் சோழ நாடு தஞ்சையைச் சுற்றியுள்ள சில நகரங்களை மட்டுமே கொண்டு மிகவும் சுருங்கிய அரசாக இருந்தது. இருப்பினும் முன்னோர்களின் பெருமையைக் கொண்டுள்ள தொன்மையான குடியாக இருந்தது.

பாண்டிய நாட்டினைப் பராக்கிரம பாண்டியன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் குமரி முதல் திருச்சிராப்பள்ளி வரையான பெரும் அரசை நிர்வகித்தான். அவனுக்கு மகன் இல்லை. புவனமோகினி என்ற ஒரே ஒரு மகள் மட்டும் இருந்தாள். பாண்டியன் என்று பட்டமிட்டிருந்தாலும், பராக்கிரமன் தொன்மையான பாண்டிய வம்சத்தில் வந்தவன் இல்லை. எனவே உத்தம சோழரின் மகனொருவனுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்துவைக்க எண்ணி தஞ்சை சென்று அவரிடம் தன்னுடைய எண்ணத்தினை தெரிவித்தான்.

சோழன் அவனுடைய குலத்தினை இகழ்ந்ததோடு, அவன் மகள் சோழ அரசில் வேலைக்காரியாக இருக்க மட்டுமே தகுதியானவள் என்று கேலி செய்தான். அதனால் கோபம் கொண்டு பெரும் படையெடுத்து சோழ அரசை கைப்பற்றினான். இளவரசர்கள் அங்கிருந்து தப்பித்து கொல்லிமலையில் தலைமறைவாக வாழ்ந்தார்கள். சிறைபிடித்த உத்தம சோழனை தன்னுடைய தேர்சக்கரத்தில் கட்டி ஊர்வலமாக இழுத்துச்சென்றான். அதைக் கண்டு புவனமோகினி வருத்தம் கொண்டாள்.

உத்தம சோழனை காப்பாற்ற சுகுமாறன் மதுரை வந்தான். அங்கு கோவில் சிற்பங்களை செய்யும் தேவேந்திர சிற்பியிடம் மாணவனாக சேர்கிறான். சிற்பக் கூடத்திற்கு அடிக்கடி வரும் புவனமோகினியும் சுகுமாறனும் தங்களின் நிஜ அடையாளத்தினை மறைத்து பழகுகிறார்கள். காதல் கொள்கிறார்கள்.

உத்தம சோழரிடம் செப்பு சிலை செய்யும் வித்தையை அறிவதாக பொய்யுரைத்து முத்திரை மோதிரத்தினை புவனமோகினியிடமிருந்து பெற்றுக் கொள்கிறான். அதை வைத்து சிறையிலிருந்து உத்தம சோழரை மீட்கிறான். பாண்டிய நாட்டின் மீது படையெடுக்கிறான். பராக்கிரம பாண்டியன் உடல்நலக் குறைவால் இறந்துவிட சுகுமாறன் போரை நிறுத்துகிறான். இளவரசனாக அல்லாமல் சிற்பியாக இருந்தால் புவனமோகினி தன்னை ஏற்றுக் கொள்வாள் என்பதால் ஆதித்தனுக்கு பட்டம் கட்டிவிட்டு, படைவீரர்கள், தேவேந்திரன் முதலிய சிற்ப கலைஞர்களோடு கப்பலில் புறப்படுகிறான்.

சித்திரக் கதை

கல்கியின் நூற்றாண்டு விழா ஆண்டான 1999 ல் மோகினித்தீவு கதையைச் சித்திரக்கதை வடிவில் பூந்தளிர் இதழ் வெளியிட்டது. கல்கியின் கதையைச் சித்திரக்கதைக்கு ஏற்றவாறு சுருக்கித் தந்தவர் அவருடைய புதல்வி ஆனந்தி. சித்திரக் கதையாக வரைந்தவர் ஓவியர் வினு.

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.