மு. இளங்கோவன்
முனைவர் மு. இளங்கோவன் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் ஆய்வாளர் ஆவார். தமிழ்நாட்டில், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவரது பெற்றோர் சி. முருகேசனார், மு. அசோதை அம்மாள்.

முனைவர் மு. இளங்கோவன்
வாழ்க்கைக் குறிப்பு
- தொடக்கக் கல்வி - அரசினர் தொடக்கப்பள்ளி, உள்கோட்டை (1972-1976)
- உயர்நிலைக் கல்வி - அரசினர் உயர்நிலைப் பள்ளி, உள்கோட்டை (1976 -1982)
- மேல்நிலைக் கல்வி - அரசினர் மேல்நிலைப் பள்ளி, மீன்சுருட்டி (1982-1984)
- மூன்றாண்டுகள் விவசாயப் பணிகளால் கல்வியில் இடைவெளி.
- இளங்கலை, முதுகலைப் பட்டம் - திருப்பனந்தாள் காசித் திருமடத்திற்கு உரிமையான செந்தமிழ்க் கல்லூரி (1987-1992)
- ஆய்வியல் நிறைஞர் பட்டம் (தலைப்பு:மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்) - புதுவைப் பல்கலைக்கழகம் (1992-1993)
- முனைவர் பட்டம் (தலைப்பு: பாரதிதாசன் பரம்பரை) - பாரதிதாசன் பல்கலைக்கழகம் (1993 - 1996)
பணிகள்
- மாணவப் பருவத்தில் மாணவராற்றுப்படை (1990), பனசைக்குயில் கூவுகிறது (1991), அச்சக ஆற்றுப்படை (1993), மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், விடுதலைப் போராட்ட வீரர் வெ. துரையனார் அடிகள் முதலான நூல்களை வெளியிட்டார்.
- 1997இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் "தமிழியல் ஆவணம்" எனும் திட்டப்பணியில் ஆய்வு உதவியாளராகப் பணிபுரிந்தார்.
- 1998 இல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இசை மேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் தமிழிசைக் கலைக்களஞ்சியம் எனும் நூலெழுத அவரின் உதவியாளராக ஓராண்டு பணிபுரிந்து களஞ்சியத்தின் நான்காம் தொகுதி வெளிவர உதவினார்.
- மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் அவர்களின் அறநிலைக்கு உரிமையான கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரியில் ஜூன் 16, 1999 முதல் ஆகஸ்ட் 17, 2005 வரை தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.
- இந்திய அரசின் நடுவண் தேர்வாணையத்தால் (UPSC) தேர்ந்தெடுக்கப் பெற்று ஆகஸ்ட் 18, 2005 முதல் புதுவையில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
- கவிதைத் துறையில் ஆர்வம் கொண்ட இவர் தமிழகத்தில் வழங்கும் நாட்டுப்புறப்பாடல்களைப் பாடவும், ஆய்வு செய்யவும் திறன் பெற்றுள்ளார். மேலும் கேரள, ஈழத்து நாட்டுப்புறப்பாடல்கள் பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.
- திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் வழியாக இவர்தம் நாட்டுப்புறப்பாடல்கள் சிறப்பு இலக்கியப் பேருரைகளாக ஒலிபரப்பப்பட்டுள்ளன.
- இவரின் பிறந்த ஊரில் வயல்வெளிப் பதிப்பகமும், பாரதிதாசன் உயராய்வு மையமும், புலவர் ந. சுந்தரேசனார் ஆய்வு நூலகமும் இவர் மேற்பார்வையில் இயங்குகின்றன.
விருதுகள்
மு. இளங்கோவன் படிக்கும் காலத்தில் தமிழக அளவில் கல்லூரி, பல்கலைக்கழக அளவில் பல கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்கள். சான்றிதழ்கள் பெற்றுள்ளார்.
- செயங்கொண்டம் தமிழோசை நற்பணிமன்றம் நடத்திய “தாய்மொழிவழிக் கல்வி’ எனும் தலைப்பிலான ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் முதல்பரிசாகத் தங்கப்பதக்கம் பெற்றுப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களினால் தங்கப்பதக்கம் சூட்டப்பெற்றவர்.
- நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய கட்டுரைப்போட்டியில் "மூதறிஞர் வ. சுப. மாணிக்கனாரின் தமிழ்ப்பணிகள்" எனும் தலைப்பிலும், "பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு" எனும் தலைப்பிலும் இருமுறை ஆய்வுக்கட்டுரை எழுதி இரண்டு தங்கப்பதக்கங்கள் பெற்றுள்ளார்.
- இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செம்மொழி இளம் அறிஞர் விருது மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசை தமிழக முதல்வர் கருணாநிதி 2010 மார்ச் 28 இல் வழங்கினார்[1].
எழுதி வெளியிட்டுள்ள நூல்கள்
- மணல்மேட்டு மழலைகள்
- இலக்கியம் அன்றும் இன்றும்
- வாய்மொழிப்பாடல்கள்
- பழையன புகுதலும்
- அரங்கேறும் சிலம்புகள்
- பாரதிதாசன் பரம்பரை
- பொன்னி பாரதிதாசன் பரம்பரை
- பொன்னி ஆசிரியவுரைகள் (ப.ஆ.)
- நாட்டுப்புறவியல் (வயல்வெளிப் பதிப்பகம்,2006)
- அயலகத் தமிழறிஞர்கள் (வயல்வெளிப் பதிப்பகம், 2009)
- இணையம் கற்போம் (வயல்வெளிப் பதிப்பகம், 2009)
- பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு
- செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்
- கட்டுரைக் களஞ்சியம்
- அச்சக ஆற்றுப்படை
- மாணவராற்றுப்படை
- பனசைக் குயில் கூவுகிறது
- விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்(ப.ஆ)
- மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்
மேற்கோள்கள்
- Award for Tamil professor, த இந்து, மார்ச் 31, 2010
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.