பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு

பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரே ஒரு பாடல் புறநானூறு 246 எண்ணுள்ள பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இந்தப் புலவர் பெருமாட்டியின் கணவர். இவரும் ஒரு புலவர்.

பெருங்கோப்பெண்டு கணவனை இழந்து தீப்பாயச் சென்றபோது நேரில் கண்ட புலவர் பேராலவாயார் என்னும் புலவர் பெருங்கோப்பெண்டு இளமையுடன் இருந்ததைக் குறிப்பிடுகிறார். - புறம் 247

பகைவரை வெல்வேன், வெல்லாவிட்டால் இன்னது நிகழட்டும் என்று பூதப்பாண்டியன் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது. இந்தப் போரில் அவன் வெற்றி கண்டான். எனிதும் அவன் பின்னர் மாண்டான். அப்போதுதான் அவன் மனைவி பெருங்கோப்பெண்டு அவனது உடல் எரியும் தீயில் தானும் விழுந்து உயிர் துறந்தாள்.

இப்படித் தீயில் விழப்போகும்போது பாடிய பாட்டுதான் இது. இதில் இவர் சொல்லும் செய்திகள் அக்காலத்தில் நிலவிய பெண்ணடிமைத்தனத்தை அறியத் தருகிறது. “மன்னனின் மனைவிக்கே கைம்மை நோன்பு இத்தனை கொடுமை தரும் எனில் பிறபெண்கள் எத்தகைய துன்பங்களை அனுபவித்திருப்பார்கள்?”[1] என்ற கருத்துப் பெண்ணியவாதிகளால் முன்வைக்கப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

  1. பிரபஞ்சன் (பிப்ரவரி 2011). "காதலைத் தின்று துரோகத்தை விழுங்கிய சங்கப் பெண்கள்". காலச்சுவடு (135): 30 முதல் 32.
  2. "தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி". பார்த்த நாள் April 28, 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.