ப. மு. அன்வர்

ப. மு. அன்வர் (பிறப்பு: சூன் 15, 1942) மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு மூத்த தமிழ்ப் புலவர். சிந்துக் கண்ணியில் நிறைய பாடல்களை எழுதி உள்ளார்.

ப. மு. அன்வர்
பிறப்புபக்கீர் முகமது அன்வர்
சூன் 15, 1942 (1942-06-15)
திருப்பனந்தாள், தஞ்சாவூர்
தேசியம்மலேசியர்
பணிவணிகம்
சமயம்இசுலாம்

வாழ்க்கைச் சுருக்கம்

அன்வர் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பனந்தாள் எனும் இடத்தில் பக்கீர் முகமது ராவுத்தர், சபியாபிவி ஆகியோருக்கு 1942-ஆம் ஆண்டு சூன் 15-ஆம் நாள் பிறந்தார். ஆரம்பக் கல்வியை தவித்திரு குமரகுருபரர் உயர் தொடக்கப் பள்ளியில் பயின்றார். 1956-இல் மலாயாவிற்கு வந்து தம்முடைய கல்வியைத் தொடர்ந்தார். பண்டைய தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பல அறிஞர்களிடம் இருந்து அறிந்து கொண்டார். சித்தர் பாடல்களையும் திருமுறைகளையும் கற்று நிறைந்த நூலறிவைப் பெற்றார்.

படைப்பாற்றல்

1957-ஆம் ஆண்டு தமிழ் முரசு மாணவர் மணிமன்ற மலரில் எழுதத் தொடங்கினார். கவிதைவேள் கா.பெருமாள் வழியாகத் தம்முடைய கவிதைப் படைப்பாற்றலை நெறிப்படுத்திக் கொண்டார்.

இவருடைய தன்னுணர்ச்சிப் பாக்களும், கவிதை நாடகங்களும், இசைப் பாடல்களும் மலேசிய வானொலி யில் நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்றன. நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதி உள்ளார். ஆனால், அந்தப் பாடல்களை நூலாக்கம் செய்யவில்லை. எனினும், ‘செய்குசனான்’ எனும் குறும்பாவியலை நூலாக வெளியிட்டுள்ளார்.

இந்த நூல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2003-ஆம் ஆண்டின் டான் ஸ்ரீ வி. மாணிக்கவாசகம் விருதைப் பெற்றது. 5000 மலேசிய ரிங்கிட் பரிசாகவும் வழஙகப்பட்டது. இவர் மலேசியாவில் எண்ணற்ற பரிசுகள், விருதுகள், தங்கப் பதக்கங்களப் பெற்றுள்ளார். . அருள்மதியம் பதிப்பகம் வெளியிட்ட ‘மலேசியத் தமிழ்க்கவிதைக் களஞ்சியம்’ தொகுப்புக் குழுவின் ஆசிரியர்களில் ஒருவராகப் பணியாற்றி உள்ளார்.

மேற்கோள்கள்

  • மலேசியத் தமிழர்கள் வரலாறு, 2010, மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
  • மலேசியத் தமிழ்க் கவிஞர்கள்,முனைவர் முரசு நெடுமாறன், மயில் மாத இதழ், 14 சூன் 2011, பக்கம்: 44/45
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.