தாவாவ்

தாவாவ் (Tawau) மலேசியா, சபா மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரம்.[1] இதன் பழைய பெயர் தவாவ் (மலாய்: Tawao). இந்த நகரம் கோத்தா கினபாலு, சண்டாக்கான் நகரங்களுக்கு அடுத்த நிலையில் மூன்றாவது பெரிய நகரமாகச் சிறப்பு பெருகிறது.

தாவாவ்
Tawau
塔瓦
பெருநகரம்

கொடி

சின்னம்

சபா மாநிலத்தில் அமைவிடம்
நாடு மலேசியா
மாநிலம் சபா
அமைவு1878
நகராண்மைக் கழகம்1961
அரசு
  நகராண்மைக் கழகத் தலைவர்இஸ்மாயில் மாயாக்கோப்
பரப்பளவு
  மொத்தம்[
மக்கள்தொகை (2010)
  மொத்தம்3,81,736
  அடர்த்தி160
நேர வலயம்மலேசிய நேரம் ([[ஒசநே+8 ஒசநே]])
  கோடை (பசேநே)கண்காணிப்பு தவிர்க்கப்பட்டு உள்ளது (ஒசநே)
இணையதளம்தாவாவ் நகராண்மைக் கழகம்

தாவாவ் மாவட்டத்திற்கும், தாவாவ் நகராண்மைக் கழகத்திற்கும் தாவாவ் என்றுதான் பெயர். ஆகவே, மாவட்டம், நகராண்மைக் கழகம், நகரம் ஆகிய மூன்று நிலப்பகுதிகளைக் குறிப்பதற்கு தாவாவ் எனும் பெயரே பயன்படுத்தப்படுகிறது. இந்த நகரம் தாவாவ் மாவட்டத்திற்கும், தாவாவ் நகராண்மைக் கழகத்திற்கும் நிர்வாக மையமாகவும் விளங்குகிறது.

தாவாவ் நகரின் தென் கிழக்குப் பகுதியில், செலிபிஸ் கடலும், சூலு கடலும் அமைந்துள்ளன. மேற்குப் பகுதியில் அடர்ந்த போர்னியோ காடுகள் உள்ளன. இந்த நகரின் தென் பகுதியில் இந்தோனேசியாவின் களிமந்தான் பெருநிலம் உள்ளது. சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலு 500 கி.மீ. தொலைவில் வடக்கே உள்ளது.

தாவாவ் மாவட்டம் மெரோதாய் (Merotai), கலாபாக்கான் (Kalabakan), செம்பூர்ணா (Semporna), குனாக் (Kunak), லகாட் டத்து (Lahad Datu) என ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தாவாவ் நகரில் இருந்து 155 கி,மீ. வட கிழக்கே லகாட் டத்து எனும் பட்டணம் உள்ளது.

2013 பிப்ரவரி 13ஆம் தேதி, இந்த லகாட் டத்து பட்டணத்திற்கு அருகில் இருக்கும் தண்டுவோ (Tanduo) எனும் கிராமத்தை, சூலு சுல்தானகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட சில பிலிப்பைன்ஸ்காரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். மலேசியப் பாதுகாப்பு படையினர் இரு வாரங்கள் போராட்டம் நடத்தி, அந்தக் கிராமத்தை மீட்டனர்.[2]

வரலாறு

1890களில் தாவாவ் பகுதியில் ஏறக்குறைய 200 பேர் வாழ்ந்து வந்தனர். பெரும்பாலும் இவர்கள் பாலுங்கான், தாவி-தாவி இனத்தைச் சேர்ந்த பூர்வீக மக்கள். காளிமந்தான் பகுதியை டச்சுக்காரர்கள் ஆட்சி செய்யத் தொடங்கியதும், அவர்களிடம் இருந்து தப்பித்து வந்தவர்கள்தான் அந்தப் பூர்வீக மக்களாகும். அப்போது தாவாவ் ஒரு சிறிய கிராமமாக இருந்தது.

1898இல் சீனர்கள் தாவாவ் கிராமத்தில் குடியேறினர். பின்னர், அங்கு ஒரு சீனக் குடியேற்றப் பகுதி உருவானது.[3] வேளாண்மைத் துறைக்கு மிகச் சிறந்த நில அமைப்பு அங்கே அமைந்து விட்டதால்,1930களில் தாவாவ் நகரம் துரிதமான வளர்ச்சியைக் கண்டது. 1931இல் அதன் மக்கள்தொகை 1980ஆக உயர்ந்தது.

முதலாம் உலகப்போர்

குகாரா தோட்டம், குபோத்தா தோட்டம் என பெரும் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. அந்தத் தோட்டங்களில் ரப்பர், சணல், தென்னை போன்றவை பயிர் செய்யப்பட்டன. தாவாவ் நகரத்தை முதலாம் உலகப்போர் பெரிதாகப் பாதிக்கவில்லை என்றாலும், உலகப் பொருளாதார மந்தநிலையின் தாக்கம் இருக்கவே செய்தது.

அந்தச் சமயத்தில் அரசாங்கத்தின் நிர்வாக மையமாகவும் வணிக மையமாகவும் சண்டாக்கான் விளங்கியது. தாவாவ் சிறிய நகரமாக இருந்தாலும், சண்டாக்கான் நகரைக் காட்டிலும் நன்கு செழிப்புற்று விளங்கியது.

டன்லப் தெரு

1930களில், தாவாவ் நகரத்தில் ஏறக்குறைய 60 கடைவீடுகள் இருந்தன. எல்லாமே மரக் கட்டிடங்கள். தாவாவ் நகரில் அப்போது இருந்த டன்லப் தெரு (Dunlop Street), மான் சியோங் தெரு (Man Cheong Street) எனும் இரண்டே இரண்டு தெருக்களில் அந்தக் கட்டிடங்கள் இருந்தன.

ஏ.ஆர்.டன்லப் என்பவர், அந்தக் காலகட்டத்தில் தாவாவ் மாவட்டத்தின் பிரித்தானிய அதிகாரியாக இருந்தார். அவர் நினைவாக டன்லப் தெருவிற்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டது.

மான் சியோங் என்பது புகழ் பெற்ற ஒரு காபிக் கடை ஆகும். அந்தக் கடை இன்னும் டன்லப் தெருவில் இருக்கிறது.[4] சில தங்கும் விடுதிகளும் இருந்தன. அப்போது தாவாவ் நகரில் இருந்த பெரும்பாலான கடைகள் சீனர்களுக்குச் சொந்தமானவையாக இருந்தன.

மணிலா வானொலி நிலையம்

தாவாவ் நகரத்தின் காப்பித்தான் சீனாவாக ஸ்டீபன் தான் என்பவர் இருந்தார். (பின்னர், இவர் ஜப்பானியர்களால் கொல்லப்பட்டார்.) அந்தக் கட்டத்தில் போக்குவரத்து, அஞ்சல் தொடர்புகள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தன. தாவாவ் நகரத்தில் இருந்து சண்டாக்கான் நகருக்கு ஒரு கடிதத்தை அனுப்பினால், அது போய்ச் சேர ஒன்பது நாட்களுக்கும் மேலாகும். சிங்கப்பூருக்குப் போய்ச் சேர பத்தொன்பது நாட்கள் பிடிக்கும்.

அஞ்சல் வழியாகச் செய்திகள் வந்து சேருவதற்கு கால தாமதமானதால், உலகச் செய்திகளைத் தெரிந்து கொள்ள தாவாவ் மக்கள் பெரும்பாலும் வானொலியை நம்பி இருந்தனர். அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பாவிலும், சீனாவிலும் போர்கள் நடந்து கொண்டிருந்தன. ஒரு சிலர் மட்டுமே வானொலியைப் பயன்படுத்தும் வசதிகளைப் பெற்று இருந்தனர். மணிலா வானொலி நிலையம்தான் அவர்களின் முக்கியத் தேர்வாக இருந்தது.

வட ஆத்திரேலிய இராணுவப்படை

ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகாலம் தாவாவ், ஜப்பானியர்களின் ஆட்சியில் இருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது தாவாவ் மட்டும் அல்ல, போர்னியோ தீவு முழுவதுமே சப்பானியர்களின் பிடியில் இருந்தது.

1945 ஜூன் 10இல், லாபுவான் தீவில் தரையிறங்கிய வடக்கு ஆத்திரேலிய இராணுவப் படையினர், போர்னியோவை சப்பானியர்களிடம் இருந்து மீட்பு செய்தனர். போர்ச் சேதங்களினால் தாவாவ் மிகுதியாகப் பாதிப்பு அடைந்து இருந்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தாவாவ் நகரை நிர்வாகம் செய்து வந்த பிரித்தானிய வட போர்னியோ நிறுவனம், மறு சீரமைப்பு செய்வதில் தீவிரமான கவனம் செலுத்தியது. 1963ஆம் ஆண்டு, பிரித்தானிய பேரரசிடம் இருந்து சபா விடுதலை பெற்றது.

மக்கள் தொகை

2009ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தாவாவ் மாவட்டத்தின் மக்கள் தொகை 467,423.

மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் (2009 கணக்கெடுப்பு)

மொத்தம் 474,728
பெண்கள் 215,360
ஆண்கள் 259,368
 
மலாய்க்காரர்கள் 11,516
லுன் பாவாங் மக்கள் 921
கடாசான் டூசுன் 76
பாஜாவ் 17,094
மூருட் 1,529
இதர பூமிபுத்ராக்கள் 24,946
சீனர்கள் 35,097
இந்தோனேசியர்கள் 55,057
மற்ற பூமிபுத்ராக்கள் 3,727
 
மலேசியர்கள் மொத்தம் 192,695
மலேசியர் அல்லாதவர்கள் மொத்தம் 274.728
 
மக்கள் தொகை பரவல் 14.1%
மக்கள் தொகை அடர்த்தி 40/சதுர கி.மீ

பொருளியல்

தாவாவ் மாவட்டத்தின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களாக புகையிலை, கொக்கோ, எண்ணெய்ப் பனை அமைகின்றன. தாவாவ் துறைமுகத்தில் இருந்து காட்டு மரங்கள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாடாய் குகைகளில் இருந்து, மருந்து குணம் கொண்ட பறவைக் கூடுகளும் எடுக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கொக்கோ உற்பத்தியில், உலகிலேயே மூன்றாவது இடத்தை தாவாவ் வகிக்கிறது. 1980களில் ஆசியாவின் கொக்கோ தலைநகரம் என்று தாவாவ் அழைக்கப்பட்டது உண்டு. ஓர் ஆண்டு ஏறக்குறைய 250,000 டன்கள் கொக்கோ ஏற்றுமதி செய்யப்படுகிறது.[5]

மீன் பிடிப்பது முக்கியத் தொழிலாக இருந்தாலும், அண்மைய காலங்களில் இரால் வளர்ப்புத் துறை ஒரு பெரிய துறையாக மாறி வருகிறது. மலேசியாவிலேயே உயர் ரக இரால்கள் தாவாவில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சிங்கப்பூர், ஹாங்காங், தைவான், ஜப்பான் போன்ற இடங்களில் தாவாவ் இரால்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.