தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2011

தமிழ்நாட்டில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி என நான்கு வகையான உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளுக்கென அமைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் மற்றும் தலைவருக்கான தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல், 2011 (Tamil Nadu Local Body Elections) 2011 அக்டோபர் 17 மற்றும் 19 நாட்களில் நடத்தப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் அக்டோபர் 24, 2011 அன்று முடிவடைவதால் அந்தப் பதவிகளுக்கான தேர்தல்களை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்தியது.

இக்கட்டுரை
தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல்
என்ற தொடரில் ஒரு பகுதி

உள்ளாட்சி மன்றப் பதவிகள்

தமிழ்நாட்டிலுள்ள 10 மாநகராட்சிகளில் மாநகராட்சி மன்றங்களுக்கான தலைவர் (மேயர்) மற்றும் இம்மாநகராட்சிகளின் 820 மாநகராட்சிப் பகுதிகளின் உறுப்பினர்கள் (வார்டு உறுப்பினர்கள்), 125 நகராட்சி மன்றங்களுக்கான தலைவர்கள் மற்றும் இந்நகராட்சிகளிலுள்ள 3,697 நகராட்சி மன்ற உறுப்பினர்கள், 529 பேரூராட்சி மன்றங்களுக்கான தலைவர்கள் மற்றும் இப்பேரூராட்சிகளிலுள்ள 8,303 பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், 31 மாவட்ட ஊராட்சி மன்றங்களுக்கான தலைவர்கள் மற்றும் இம்மாவட்டத்திலுள்ள 655 மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், 385 ஊராட்சி ஒன்றிய மன்றங்களுக்கான தலைவர்கள் மற்றும் இந்த ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 6,470 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சி மன்றங்களுக்கான தலைவர்கள் மற்றும் இந்த ஊராட்சி மன்றங்களிலுள்ள 99 ஆயிரத்து 333 கிராம ஊராட்சி வார்டுகள் என, ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 983 பதவிகளுக்கு இத்தேர்தல் நடைபெற்றது.

நகரப் பகுதிகள்

1996, 2001 ஆம் ஆண்டுகளில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் மன்றத்தலைவரை மக்களே நேரடியாகத் தேர்வு செய்தனர். ஆனால் கடந்த 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த உறுப்பினர்களிலிருந்து ஒருவரைத் தலைவராகத் தேர்வு செய்யும் முறை கடைப்பிடிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டுக்கான உள்ளாட்சித் தேர்தலில் முன்பு நடைமுறையிலிருந்த மக்களே நேரடியாகத் தலைவரைத் தேர்வு செய்யுமாறு சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இதனால் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதியிலுள்ள வாக்காளர்கள் தங்கள் பகுதிக்கென ஒரு உறுப்பினர் மற்றும் தலைவர் என இரண்டு பதவிகளுக்கும் தனித்தனியாக இரு வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்.

ஊராட்சிப் பகுதிகள்

நகர்ப் பகுதிகளில்லாத கிராமப் பகுதிகள் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சி என மூன்றடுக்கு முறைகளின் கீழ் செயல்படுவதால் ஊராட்சிப் பகுதியிலிருப்போர் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் எனும் நான்கு பதவிகளுக்காகத் தனித்தனியாக நான்கு வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்.

தேர்தல் அட்டவணை

  • வேட்பு மனு தாக்கல் துவக்கம்: செப்டம்பர் 22, 2011
  • மனு தாக்கல் கடைசி நாள்: செப்டம்பர் 29, 2011
  • மனு பரிசீலனை: செப்டம்பர் 30, 2011
  • திரும்பப் பெற கடைசி நாள் : அக்டோபர் 3, 2011
  • ஓட்டுப் பதிவு: அக்டோபர் 17, 2011 மற்றும் அக்டோபர் 19, 2011
  • ஓட்டு எண்ணிக்கை: அக்டோபர் 21, 2011

வாக்குப் பதிவு

2011 உள்ளாட்சித் தேர்தலில் நகர்ப்பகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், ஊராட்சிப் பகுதிகளில் வாக்குச் சீட்டுப் பதிவு முறையும் பயன்படுத்தப்பட்டன.

வாக்குப் பதிவு எந்திரம்

பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு வாக்குப் பதிவு செய்யும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வாக்குச் சீட்டுப் பதிவு

ஊராட்சிப் பகுதிகளுக்கான மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், ஊராட்சிமன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு வாக்குச் சீட்டுப் பதிவு முறை பயன்படுத்தப்பட்டன. ஊராட்சிப் பகுதி வாக்காளர்கள் நான்கு வாக்குகள் அளிக்க வேண்டியிருப்பதால் வாக்காளர்கள் வாக்களிப்பதில் குழப்பமடையாமலிருக்க நான்கு நிறத்தில் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதன்படி ஊராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும். இரண்டு கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளில் ஒரு வார்டிற்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வார்டிற்கு இள நீல நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

வாக்காளர்களும் வாக்குச் சாவடிகளும்

4 கோடியே, 63 லட்சத்து, 37 ஆயிரத்து, 379 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர்களாக இருந்தனர். இவர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 86 ஆயிரத்து, 104 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

நகரப் பகுதிகள்

நகரப் பகுதிகளில், 1 கோடியே, 80 ஆயிரத்து, 195 ஆண் வாக்காளர்களும், 99 லட்சத்து, 13 ஆயிரத்து, 703 பெண் வாக்காளர்களும், 453 இதர வாக்காளர்களுமாக, மொத்தம், 1 கோடியே, 99 லட்சத்து, 94 ஆயிரத்து, 351 வாக்காளர்கள் இருந்தனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 25 ஆயிரத்து, 590 வாக்குச் சாவடிகள், நகர்ப் பகுதிகளில் அமைக்கப்பட்டன. இத்தேர்தலுக்காக 80 ஆயிரத்து 500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

ஊராட்சிப் பகுதிகள்

ஊராட்சிப் பகுதிகளில், 1 கோடியே, 33 லட்சத்து, 18 ஆயிரத்து, 643 ஆண் வாக்காளர்களும், 1 கோடியே, 31 லட்சத்து, 24 ஆயிரத்து, 227 பெண் வாக்காளர்களும், 158 இதர வாக்காளர்களுமாக, மொத்தம், 2 கோடியே, 64 லட்சத்து, 43 ஆயிரத்து, 28 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 60 ஆயிரத்து, 518 ஓட்டுச் சாவடிகள் ஊராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டன. இத்தேர்தலுக்கு, 2 லட்சத்து 39 ஆயிரம் வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன.

வேட்பாளர்கள் செலவு

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாகத் தேர்தல் செலவு எவ்வளவு செய்யலாம் என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி;

  • ஊராட்சி மன்ற உறுப்பினர் - 3,750
  • ஊராட்சி மன்றத் தலைவர் - 15,000
  • ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் - 37,500
  • மாவட்ட ஊராட்சி உறுப்பினர் - 75,000
  • பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சித் தலைவர் - 56,250
  • முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சித் தலைவர் - 1,12, 500
  • தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை நகராட்சித் தலைவர் - 2,25,000
  • மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்) - 5,62,500
  • சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்) - 11,25,000

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தேர்தல் அலுவலரிடம் தேர்தல் செலவுக் கணக்கை ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்கத் தவறுபவர்கள் அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்கப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2011 உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்

நகரப் பகுதிகளுக்கான தலைவர்கள்

2011ல் நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி போன்ற நகரப் பகுதிகளுக்கான தலைவர் பதவிகளுக்குக் கட்சிகள் வாரியாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை பட்டியல்.[1]

கட்சி.மாநகராட்சிகள்
(10)
நகராட்சிகள்
(125)
பேரூராட்சிகள்
(529)
குறிப்புகள்
அ. இ. அ. தி. மு. க1089285
தி. மு. க-23121
பாரதீய ஜனதா-213
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-25
தே.மு.தி.க-23
ம.தி.மு.க-17
காங்கிரஸ்--24
இந்திய பொதுவுடமைக் கட்சி--2
பா.ம.க--2
தனிப்பட்டவர்கள்-564
  • 124 நகராட்சிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு நகராட்சிக்கு தேர்தல் வேட்பாளர் ஒருவர் மரணம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நகரப் பகுதிகளுக்கான உறுப்பினர்கள்

2011ல் நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி போன்ற நகரப் பகுதிகளுக்கான உறுப்பினர் பதவிகளுக்குக் கட்சிகள் வாரியாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை பட்டியல்.[1]

கட்சி.மாநகராட்சிகள்
(820)
நகராட்சிகள்
(3697)
பேரூராட்சிகள்
(8303)
குறிப்புகள்
அ. இ. அ. தி. மு. க55616802849
தி. மு. க1259631820
காங்கிரஸ்17166379
ம.தி.மு.க114982
தே.மு.தி.க8120392
பாரதீய ஜனதா437181
இந்திய பொதுவுடமைக் கட்சி41033
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி320101
பா.ம.க260108
விடுதலைச் சிறுத்தைகள்21312
பகுஜன் சமாஜ்-22
ராஜ்டீரிய ஜனதாதளம்-18
புதிய தமிழகம்--7
பார்வார்டு பிளாக்--3
அ.இ.பார்வார்டு பிளாக்--1
இந்திய ஜனநாயகக் கட்சி--1
பிற கட்சிகள்-1429
தனிப்பட்டவர்கள்525521995

கிராமப் பகுதிகளுக்கான உறுப்பினர்கள்

2011ல் நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சிக் குழு, ஊராட்சி ஒன்றியக் குழு போன்ற கிராமப் பகுதிகளுக்கான உறுப்பினர் பதவிகளுக்குக் கட்சிகள் வாரியாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை பட்டியல்.[1]

கட்சி.மாவட்ட ஊராட்சிக் குழு
(655)
ஊராட்சி ஒன்றியக் குழு
(6470)
குறிப்புகள்
அ. இ. அ. தி. மு. க5663727
தி. மு. க26934
பாரதீய ஜனதா231
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி226
தே.மு.தி.க5321
ம.தி.மு.க241
காங்கிரஸ்4147
இந்திய பொதுவுடமைக் கட்சி446
பா.ம.க3221
விடுதலை சிறுத்தைகள்-10
புதிய தமிழகம்-7
ராஜ்டீரிய ஜனதாதளம்-2
பகுஜன் சமாஜ்-1
பிற கட்சிகள்-4
தனிப்பட்டவர்கள்-636
  • மாவட்ட ஊராட்சி மன்றக் குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் தவிர கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகள் கட்சி சார்பற்ற போட்டிகளாகும்.

வாக்கு விழுக்காடு விபரம்

அதிமுகவுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ள மொத்த வாக்கு விழுக்காடு 39.02. அதில் ஊரகப்பகுதிகளான கிராமங்களில் 38.69 விழுக்காடு கிடைத்துள்ளது. நகரங்களில் 39.24 விழுக்காடு வாக்கு கிடைத்துள்ளது. திமுகவுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ள மொத்த வாக்கு விழுக்காடு 26.09. அதில் ஊரகப்பகுதிகளான கிராமங்களில் 25.71 விழுக்காடு கிடைத்துள்ளது. நகரங்களில் 26.67 விழுக்காடு வாக்கு கிடைத்துள்ளது. தேமுதிகவுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ள மொத்த வாக்கு விழுக்காடு 10.11. காங்கிரசுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ள மொத்த வாக்கு விழுக்காடு 5.71. பாஜகவுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ள மொத்த வாக்கு விழுக்காடு 1.35. மதிமுகவுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ள மொத்த வாக்கு விழுக்காடு 1.7. பொதுவுடைமை கட்சிக்கு (மார்க்சியம்) இந்த உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ள மொத்த வாக்கு விழுக்காடு 1.02, இந்திய பொதுவுடமைக் கட்சிக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ள மொத்த வாக்கு விழுக்காடு 0.71. சுயேச்சைகளுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ள மொத்த வாக்கு விழுக்காடு 9.46.[2] பாமகவுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ள மொத்த வாக்கு விழுக்காடு 3.55. அதில் ஊரகப்பகுதிகளான கிராமங்களில் அதிக அளவாக 4.63 விழுக்காடு கிடைத்துள்ளது. நகரங்களில் 1.93 விழுக்காடு வாக்கு கிடைத்துள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியல்
  2. கட்சிகள் பெற்ற வாக்கு விழுக்காடு
  3. பாமக பெற்ற வாக்கு விழுக்காடு

இதையும் பார்க்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.