தமிழ் மாநில காங்கிரசு
தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) 1996-2002ல் தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். இதன் தேர்தல் சின்னம் மிதிவண்டி (சைக்கிள்).
1996 சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் தேசியத் தலைவர் பி. வி. நரசிம்ம ராவ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். ஆனால் காங்கிரசின் தமிழ் நாட்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களில் பெரும்பாலானோர் இதனை எதிர்த்தனர். ஜி. கே. மூப்பனார் தலைமையில் பிரிந்து சென்று ”தமிழ் மாநில காங்கிரசு” என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார்.
தமாக 1996 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 39 இடங்களில் வெற்றி பெற்றது. இத்தேர்தலுடன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் இணைந்து போட்டியிட்டு 20 இடங்களில் வென்றது. 1996-98 காலகட்டத்தில் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசுகளில் அங்கம் வகித்தது. இக்கட்சியின் ப. சிதம்பரம், எம். அருணாச்சலம், தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் மத்திய அமைச்சர்களாகப் பணியாற்றினர். 1998 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் 3 இடங்களில் மட்டுமே வென்றது. 1999 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணி முறிந்து, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் எந்த தொகுதிகளிலும் வெற்றிபெற வில்லை. 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகக் கூட்டணியில் இடம்பெற்று 23 இடங்களில் வென்றது. 2001ல் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி. கே. வாசன் தமாக தலைவரானார். 2002ல் தமாக இந்திய தேசியக் காங்கிரசுடன் இணைந்து விட்டது.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை மீண்டும் தொடங்கினார்.[1]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016
மக்கள் நலக் கூட்டணியுடன் தேர்தல் கூட்டணிக்காக தமிழ் மாநில காங்கிரசு இணைந்தது. அணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். [2][3]. 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
தேர்தல் வரலாறு
ஆண்டு | பொதுத் தேர்தல் | பெற்ற வாக்குகள் | வென்ற இடங்கள் |
---|---|---|---|
1996 | 11வது தமிழ்நாடு சட்டப்பேரவை | 2,526,474 | 39 |
1996 | 11வது மக்களவை | 7,339,982 | 20 |
1998 | 12வது மக்களவை | 5,169,183 | 3 |
1999 | 13வது மக்களவை | 2,946,899 | 0 |
2001 | 12வது தமிழ்நாடு சட்டப்பேரவை | 1,885,726 | 23 |
2016 | 15வது தமிழ்நாடு சட்டப்பேரவை | 230,710 | 0 |
ஆதாரம்
- "த.மா.கா. தலைவராக ஜி.கே.வாசன் தேர்வு!". பார்த்த நாள் 20 மார்ச் 2016.
- http://www.thehindu.com/elections/tamilnadu2016/dmdk-enters-into-alliance-with-pwf/article8388756.ece
- http://www.dinamalar.com/news_detail.asp?id=1485129