பேரூராட்சி
பேரூராட்சி, இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில் மட்டும் நகராட்சிகளுக்கும், கிராம ஊராட்சிகளுக்கும் இடைப்பட்ட நிலையில் பேரூராட்சி அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் குறிப்பிட்ட வருவாயுடைய ஊர்களை பேரூராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த பேரூராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் பேரூராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பேரூராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த பேரூராட்சிமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் பேரூராட்சி மன்றத் தலைவராகவும், ஒருவர் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். பேரூராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் பேரூராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி பேரூராட்சிச் செயல் அலுவலர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
- தமிழ்நாட்டில் 528 பேரூராட்சி மன்றங்கள் (Town Panchayats) உள்ளது.[1]
இக்கட்டுரை ![]() |
பேரூராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு இடைப்பட்டதாக இருக்கின்றன. பேரூராட்சிகளில் மக்கள்தொகை 5000க்கு அதிகமாகவும் 30,000 வரையிலும் உள்ளனர்.
பெரும்பான்மையான பேரூராட்சிகள் தாலுக்கா தலைமையிடமாகவும், ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,பதிவுத்துறை அலுவலகம், வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்கள்,வழிபாட்டு தலங்களாகவும் தொழிலகங்கள் நிறைந்ததாகவும் விளங்குவதால் நகரங்களுக்கான வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகின்றன. தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-ன்படி பேரூராட்சிகளின் நிர்வாகம் செயல்படுகிறது.
பேரூராட்சிகள் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்/உதவி இயக்குநர் மற்றும் மாநில அளவில் பேரூராட்சிகளின் இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.பேரூராட்சிகள் இயக்ககம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும்துறையின் கீழ் செயல்படுகிறது.
பேரூராட்சிகள் மேற்கொள்ளும் பணிகள்
- பொது சுகாதாரம் - துப்புரவு,கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி,திடக்கழிவு மேலாண்மை
- மக்கள் உடல்நலம் மற்றும் நோய்த்தடுப்பு
- குடிநீர் வழங்கல்
- விளக்குவசதி
- கட்டிடங்கள் கட்டுவதை ஒழுங்குசெய்தல்
- தொழிற்சாலைகள் மற்றும் தொழில்கள் ஏற்படுத்துவதை உரிமம் வழங்கி முறைப்படுத்துதல்
- பிறப்பு/இறப்பு பதிவு
- மயானங்களை ஏற்படுத்தி பராமரித்தல்.
தமிழ்நாட்டில் பேரூராட்சிகள் நான்கு நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.[2]
வகை | பேரூராட்சிகள் எண்ணிக்கை |
---|---|
நிலை 2 | 64 |
நிலை 1 | 202 |
தேர்வுநிலை | 200 |
சிறப்புநிலை | 62 |
மொத்தம் | 528 |