ஜுப்பிடர் நடவடிக்கை

ஜுப்பிடர் நடவடிக்கை (Operation Jupiter) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கான் நகரைத் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை நடைபெற்றது.

ஜுப்பிடர் நடவடிக்கை
கான் சண்டையின் பகுதி பகுதி
நாள் 1012 ஜூலை 1944
இடம் கான் நகருக்கு மேற்கே, நார்மாண்டி, பிரான்சு
கீழ்நிலை உத்தியளவில் ஜெர்மானிய வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்  நாட்சி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ரிச்சர்ட் ஓ கானர்
இழப்புகள்
~2,000 பேர்

பிரான்சு மீதான நேச நாட்டுக் கடல்வழிப் படையெடுப்பு ஜூன் 6ம் தேதி துவங்கியது. இப்படையெடுப்பின் உடனடி நோக்கங்களில் ஒன்று கான் நகரைக் கைப்பற்றுதல். ஆனால் ஜூன் மாதம் முழுவதும் பல முறை முயன்றும் அந்நகரை நேச நாட்டுப் படைகளால் கைப்பற்ற முடியவில்லை. ஜூலை மாதம் கான் நகரின் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. சார்ண்வுட் நடவடிக்கையின் மூலம் கான் நகரின் வடக்கு பகுதிகள் கைப்பற்றப்பட்டன. பிற பகுதிகளைக் கைப்பற்ற தாக்குதல்கள் தொடர்ந்தன. கான் நகரின் மேற்கில் உள்ள சில கிராமங்களையும் 112ம் குன்றையும் கைப்பற்ற ஜூப்பிட்டர் நடவடிக்கை ஜூலை 10ம் தேதி மேற்கொள்ளப்பட்டது.

நார்மாண்டிப் பகுதியிலிருந்த பல ஜெர்மானிய கவச டிவிசன்களை கான் நகருக்கான சண்டையில் முடக்க நேச நாட்டு உத்தியாளர்கள் விரும்பினர். நார்மாண்டியின் அமெரிக்கக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து பிரான்சு நாட்டின் உட்பகுதிக்கு முன்னேற அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அவ்வாறு முன்னேறும் போது நார்மாண்டியில் உள்ள ஜெர்மானியக் கவச டிவிசன்கள் எதிர்க்க வாய்ப்பில்லாமல் அவற்றை கான் நகரருகே முடக்குவது அவர்களது திட்டம். கான் நகரின் மேற்கிலிருந்த 112ம் குன்றைக் கைப்பற்றுவதன் மூலம், ஜெர்மானியர்களின் கவனத்தையும் படைப்பிரிவுகளையும் கான் நகரில் நிலைத்து நிற்கச் செய்ய முடியுமென்று அவர்கள் நம்பினர். ஏற்கனவே ஒரு முறை எப்சம் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 112ம் குன்று கைப்பற்றப்பட்டிருந்தது. ஆனால் ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்களால் பிரிட்டானியப் படைகள் கைப்பற்றிய குன்றிலிருந்து பின்வாங்கி விட்டன.

ஜூப்பிட்டர் நடவடிக்கை ஜூலை 10ம் தேதி தொடங்கியது. பிரிட்டனிய 8வது கோரின் படைப்பிரிவுகள் 112ம் குன்றையும் சுற்றுப்புற கிராமங்களையும் தாக்கின. இரு நாட்கள் சண்டைக்குப் பின்னர் பல கிராமங்களைக் கைப்பற்ற முடிந்தாலும், 112ம் குன்றைக் கைப்பற்ற முடியவில்லை. எனவே இத்தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.