கு. வன்னியசிங்கம்

குமாரசாமி வன்னியசிங்கம் (Coomaraswamy Vanniasingam, 13 அக்டோபர் 1911 - 17 செப்டம்பர் 1959), இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தொடக்கக்காலத் தலைவர்களில் ஒருவரும் ஆவார். 1947 முதல் இறக்கும் வரை கோப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

கு. வன்னியசிங்கம்
C. Vanniasingam


நாஉ
கோப்பாய் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1947–1959
பின்வந்தவர் எம். பாலசுந்தரம், இதக
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 13, 1911(1911-10-13)
இறப்பு 17 செப்டம்பர் 1959(1959-09-17) (அகவை 47)
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி
படித்த கல்வி நிறுவனங்கள் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரி
தொழில் வழக்கறிஞர்
இனம் இலங்கைத் தமிழர்

வாழ்க்கைக் குறிப்பு

வன்னியசிங்கம் தெல்லிப்பழையைச் சேர்ந்த வழக்கறிஞரும் தமிழறிஞருமான வி. குமாரசாமி என்பவருக்குப் பிறந்தவர். வன்னியசிங்கத்தின் சகோதரர் சி. பாலசிங்கம் திறைசேரிச் செயலாளராக இருந்தவர். வன்னியசிங்கம் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் பயின்று லண்டன் பல்கலைக்கழகப் பட்டத்தை 1933 ஆம் ஆண்டில் பெற்றார். பின்னர் அவர் சட்டத்துறையில் நுழைந்து வழக்கறிஞராகி, யாழ்ப்பாணத்தில் சட்டப்பணியைத் தொடர்ந்தார்.

மரு. சிறிநிவாசனின் மகள் கோமதியை மணம் முடிந்த வன்னியசிங்கத்திற்கு ஐந்து பெண் பிள்ளைகள்: மரு. ஹேமாவதி பாலசுப்பிரமணியம், சத்தியவதி நல்லலிங்கம், ரேணுகாதேவி சிவராஜன், பகீரதி வன்னியசிங்கம், ரஞ்சினி சாந்தகுமார்.

அரசியலில்

ஜீ. ஜீ. பொன்னம்பலத்தினால் தொடங்கப்பட்ட இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் மூலம் இலங்கை அரசியலில் நுழைந்தார். 1947 தேர்தல்ல் கோப்பாய்த் தொகுதி வேட்பாளர் பி. ஜி. தம்பியப்பா தேர்தல் பரப்புரை நேரத்தில் காலமானதை அடுத்து வன்னியசிங்கம் அவருக்குப் பதிலாக தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்[1].

1948 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இணைய தமிழ்க் காங்கிரஸ் முடிவெடுத்த போது கட்சியை விட்டு விலகி தமிழரசுக் கட்சியைச் சா. ஜே. வே. செல்வநாயகம் தொடங்கிய போது அக்கட்சியின் தொடக்கக்காலத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். தமிழரசுக் கட்சி 1949 டிசம்பர் 18 இல் தொடங்கப்பட்டது.

1952 தேர்தல்களில் தமிழரசுக் கட்சியின் சார்பில் கோப்பாய்த் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்[2]. செல்வநாயகம் இத்தேர்தலில் தோல்வியடையவே வன்னியசிங்கம் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவிற்குத் தலைவரானார். இவர் மீண்டும் 1956 தேர்தல்களில் போட்டியிட்டு மீண்டும் தெரிவானார்[3].

மேற்கோள்கள்

  1. "Result of Parliamentary General Election 1947". இலங்கைத் தேர்தல்கள் திணைக்களம்.
  2. "Result of Parliamentary General Election 1952". இலங்கைத் தேர்தல்கள் திணைக்களம்.
  3. "Result of Parliamentary General Election 1956". இலங்கைத் தேர்தல்கள் திணைக்களம்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.