சக்தி நடவடிக்கை

சக்தி நடவடிக்கை (Operation Shakti) அல்லது பொக்ரான் - II (Pokharan-II) என்று இந்தியா பொக்ரான் சோதனை களத்தில் நடத்திய ஐந்து அணுகுண்டு சோதனை வெடிப்புகள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் மூன்று மே 11, 1998ஆம் ஆண்டிலும் இரண்டு அதே ஆண்டு மே 13 நாளிலும் வெடிக்கப்பட்டது. இந்த அணுகுண்டு சோதனைகள் இந்தியாவிற்கு எதிராக பல நாடுகள் பல்வேறுதரப்பட்ட வணிகத்தடைகளை விதிப்பதற்கு காரணமாக அமைந்தது. மேலும் அதே ஆண்டு பாக்கித்தான் மே 28 மற்றும் மே 30ஆம் நாட்களில் அணுகுண்டு சோதனைகளை நடத்தத் தூண்டுதலாக அமைந்தது.

இந்தியா முதன்முதலாக 18 மே 1974 அன்று சிரிக்கும் புத்தர் என்று குறிக்கப்பட்ட அணுகுண்டு சோதனையை நடத்தியது. கால் நூற்றாண்டுக்குப் பிறகு மே 11,1998 அன்று புத்த பூர்ணிமா நாளன்று இரண்டாவது சோதனையை நடத்தியது. ஆட்சியிலிருந்த இந்து தேசியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி இந்த நடவடிக்கைகளுக்கு "சக்தி" என்று குறிப்பெயர் வழங்கியிருந்தது. சக்தி என்ற சமசுகிருதப் பெயர் ஆற்றல் எனப் பொருள் தருவதுடன் இந்து சமயப் பெண் கடவுளையும் குறிக்கும் சொல்லாகும்.

அந்நாளில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனத்தின் தலைவராகவும் பிரதமரின் தலைமை ஆலோசகராகவும் பணியாற்றிய (பின்னாளில் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற) முனைவர் அப்துல் கலாம் மற்றும் அணுசக்தித் துறையின் தலைவராக பணியாற்றிய முனைவர் ஆர்.சிதம்பரம் இத்திட்டத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.

தேசிய தொழில்நுட்ப நாள்

இந்த நாளை நினைவுறுத்துமாறு ஆண்டுதோறும் மே 11ஆம் நாள் தேசிய தொழில்நுட்ப நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறப்பெய்திய தொழிலகங்களுக்கும் தனிநபர்களுக்கும் விருதுகள் கொடுக்கப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்

  1. Press Inormation Bureau (May 11, 2008). "National technology day celebrated". Department of Science and Technology. பார்த்த நாள் 9-01-2011.

வெளியிணைப்புகள்

நூல்கள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.