கூகிள் இரு படி சரிபார்த்தல்

கூகிள் இரு படி சரிபார்த்தல் (Google - 2 Step Verification) எனும் வசதி, கூகிளின் அனைத்து இணையப் பயன்படுகளுக்கும் பொருந்தும் ஒரு பயனர் கணக்கு பாதுகாப்பு வழிமுறை ஆகும். கடவுச் சொல்லை மட்டும் சார்ந்து இல்லாமல் மற்றுமோர் இரண்டாவது கூற்றையும் சார்ந்து புகுபதிகை இருக்கும்பொழுது மேலும் பாதுகாப்பானதாக இருக்கும் என்கிற அடிப்படையில் இந்த வசதி கூகிளால் நிறுவப்பட்டது.

செயல்முறை

இவ்வகையில் பயனர்கள் தங்களது கணக்கைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள, கடவுச் சொல் பயன்படுத்துவதோடு தங்களது கைபேசி மற்றும் தொலைபேசியையும் சேர்த்து பயன்படுத்த வேண்டும். ஒரு பயனர் கணக்குடன், இணைக்கப்படும் இரு கைபேசி எண்கள் அல்லது இரு தொலைபேசி எண்கள் அல்லது ஒரு கைபேசி கூடவே ஒரு தொலைபேசி எண்ணை இணைப்பதன் மூலமாக புதிதாக ஒரு கணினியிலோ அல்லது கைபேசியிலோ இணையம் வழியாக தனது கணக்கை இயக்க முற்படும்போது, குறிப்பிட்ட பயனர் கணக்குடன் இணைக்கப்பட்ட கைபேசிக்கு, இணைய உலவி சாளரத்தில் உள்ளிட வேண்டிய சங்கேதக் குறியீடுடன் கூடிய குறுஞ்செய்தி ஒன்று வந்து சேரும்.

அதை உள்ளிட்டால் மட்டுமே பயனர் கணக்கை இயக்க இயலும். குறிப்பிட்ட கைபேசி தொடர்பு எல்லைக்கு வெளியிலோ அல்லது அணைத்து வைக்கப்பட்டிருந்தாலோ பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவே மற்றொரு கைபேசி அல்லது தொலைபேசி இணைக்க வேண்டும் என முன்னமே வேண்டப்பட்டது.

முதன்மை அல்லது இரண்டாம் பட்ச சாதனங்களில் ஒன்று அல்லது இரண்டுமே தொலைபேசியாக இருக்கும் பட்சத்தில், சங்கேதக் குறியீடு நமக்கு குரல் அழைப்பு மூலமாக வந்து சேரும். அதில் கூறப்படும் குறியீட்டு எண்ணை உள்ளீட வேண்டும்.

உலவியல்லாத நிரல்களில் செயல்முறை

மேற்கண்ட முறை HTML மரபுத்தகவை அடிப்படையாக வைத்துச் செயல்படும் நிரல்கலான, இணைய உலவிகளில் மட்டுமே இயங்கக்கூடியதாக இருப்பதால் ஜிடாக், அவுட்லுக் போன்ற உரையாடல் நிரல்களிலோ, மின்னஞ்சல் பார்க்கும் நிரல்களிலோ கூகிள் கணக்கை புகுபதிகை செய்யப்பயன்படுத்தும் பிகாசா,ஸ்கெட்ச் அப், கூகுள் எர்த் போன்ற இன்னபிற நிரல்களிலோ வேலைசெய்யாது. அதற்காக நாம் குறிப்பிட்ட நிரல் சார்ந்த கடவுச் சொற்களை (Application Specific Passwords) இங்கே உருவாக்க வேண்டும். இந்த நிரல் சார்ந்த கடவுச் சொற்கள் ஒருமுறை மட்டுமே உள்ளிடப் பட வேண்டியவை மற்றும் ஒரு குறிப்பிட்ட நிரலுக்கு மட்டுமே ஏற்றவை. குறிப்பிட்ட நிரல் தொகுப்பை நீக்கிவிட்டு மீண்டும் பதிந்தால் புதிதாக இன்னொரு நிரல் சார்ந்த கடவுச் சொல்லை உருவாக்கியே புகுபதிகை செய்ய இயலும்.

நன்மைகள்

  • இரு படி சரிபார்த்தல் முறையை பயனர் கணக்கிற்கு அமல் படுத்துவதால், கடவுச் சொல்லை வேறொருவர் பயருக்குத் தெரியாமல் அறிந்தாலும் அதனால் பயனில்லை.
  • யாரோ ஒருவரால் பயனர் கணக்கு எங்கேனும் இயக்கப்பட முயன்றால், இணைக்கப்பட்ட கைபேசி அல்லது தொலைபேசிக்கு வரும் அறிவுறுத்தல் குறுஞ்செய்தி நமக்குக் காட்டிக் கொடுத்துவிடும்.
  • கைபேசி அல்லது தொலைபேசி இரண்டுமே உபயோகத்தில் இல்லாத ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் நாம் புகுபதிகை செய்வதற்காக பத்து அவசரகால சங்கேதக் குறியீடுகளை இந்த வசதி முன்னமே தருகிறது. அதன் பிரதியை பாதுகாப்பாக கணினியிலோ, கைப்பெசியிலோ அல்லது அச்சுப் பதிப்பாக ஒரு தாளிலோ வைத்துக் கொள்ள இயலும். ஆனால் இது வேறு யாருக்கும் தெரியாமல் இருக்கவேண்டும்.

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.