குடிமையியல் சட்டம்

குடிமையியல் சட்டம் (Civil law அல்லது civilian law) (இந்திய வழக்கு:உரிமையியல்) என்பது இரு பொருள்படும். முதன்மையாக உலக சட்ட முறைமைகளில் ஒன்றாக மேற்கு ஐரோப்பாவில் உருவான ஒரு சட்ட முறைமை ஆகும். பழமை வாய்ந்த உரோமானியச் சட்டத்தின் கட்டமைப்பினுள் இந்த முறைமை அமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பியல்பு மேற்கோளிடும் வகையில் கருக் கொள்கைகளை சட்டத்தொகுப்பாக வெளியிட்டுள்ளதுதாகும். இதுவே சட்டத்திற்கான முதன்மை வளமாகும். இதற்கு எதிராக பொதுச் சட்டத்தில் சட்டக் கட்டமைப்பு நீதிபதிகள் உருவாக்கிய தீர்ப்புகள் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுச் சட்டத்தில் ஒரே போன்ற வழக்குக்கு இருவேறு தீர்ப்புகள் இருக்க இயலாது என்ற கொள்கையின் அடிப்படையில் முன்காட்டு முன்னுரிமை பெறுகிறது.[1][2] குடிமையியல் சட்ட முறைமை செருமனி, பிரான்சு, ஐரோப்பிய நாடுகளின் குடிமைப்பட்டிருந்த நாடுகள் மற்றும் சில ஆசிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவிலும் உள்ள சில நாடுகள் இந்த முறைமையைப் பின்பற்றுகின்றன.

இரண்டாவது பொருளாக குடிமையியல் சட்டம் என்பது அனைத்து நாடுகளிலும் உள்ள சட்ட முறைமைகளில் ஒரு பகுதியாகும். இது குற்றவியல் சட்டத்திற்கு மாறானது. இரு நபர்களுக்கு அல்லது அமைப்பு/நிறுவனங்களுக்கு இடையே உள்ள பிணக்குகளைத் தீர்ப்பது குறித்ததாகும். காட்டாக, எல்லைத் தகராறுகள், விபத்து நட்ட ஈடுகள் போன்றன. ஒரு சாலை விபத்தில் தமது கவனக்குறைவால் விபத்து ஏற்படுத்தியக் குற்றத்திற்காக காவல்துறையினர் குற்றவியல் சட்டத்தினைப் பயன்படுத்துவர்; விபத்தில் ஊனமுற்றவர்/இறந்தவர் குடும்பம் நட்ட ஈடு பெறுவது குடிமையியல் சட்டத்தின்படி ஆகும்.[3]

மேற்கோள்கள்

  1. Washington Probate, "Estate Planning & Probate Glossary", Washington (State) Probate, s.v. "common law", [htm], 8 Dec. 2008: <http://www.wa-probate.com/Intro/Estate-Probate-Glossary.htm>, retrieved on 7 November 2009.
  2. Charles Arnold-Baker, The Companion to British History, s.v. "English Law" (London: Loncross Denholm Press, 2008), 484.
  3. BBC Radio 1: One Life on Civil Law
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.