காசு (நாணயம்)

பண்டைக்காலங்களில் ஆசியாவின் பல பகுதிகளில் வழங்கி வந்த நாணயங்கள் காசு (cash) என்று அழைக்கப்பட்டன. சென்னை மாகாணத்திலிருந்த மன்னராட்சிகள், பிரித்தானிய இந்தியாவின் திருவிதாங்கூர், சீன மக்கள் குடியரசு, வியட்நாம் ஆகிய பகுதிகளில் இது வழக்கத்தில் இருந்தது. அரிதாக கொரிய முன் மற்றும் சப்பானிய மோன் பணத்தைக் குறிக்கவும் காசு பயன்படுத்தப்பட்டது.

சிங்களத்தில் காசி என்பது வட்டையைக் குறிக்கும். துவக்க போர்த்துகேயர்கள் உள்ளூர் சொல்லை cas, casse, caxa, எனவும் பிரான்சியர்கள். cas எனவும் ஆங்கிலேயர்கள் cass எனவும் குறிப்பிட்டனர். தற்போதைய போர்த்துக்கேய மொழியில் caixa எனவும் ஆங்கிலத்தில் cash எனவும் குறிப்பிடப்படுகின்றது. [1]

மதராசு காசு

இதனையும் பார்க்க: மதராசு பணம்

பிரித்தானியர் காலத்தில் சென்னை மாகாணத்தில் காசு நாணயமாக வழங்கி வந்தது. குறிப்பாக, இது பணம், ரூபாய், பகோடா நாணயங்களின் உட்பிரிவாக இருந்தது.

  • 80 காசுகள் = 1 பணம்
  • 12 பணம் = 1 ரூபாய்
  • 42 பணம் = 1 பகோடா

20 காசுகள் மதிப்புடைய செப்பு நாணயங்கள் பைசா எனப்பட்டன. 10 காசுகள் டோடீ எனப்பட்டன, 5 காசுகள் அரை டோடீ எனப்பட்டன.[2]

திருவிதாங்கூர் காசு

இதனையும் பார்க்க: திருவிதாங்கூர் ரூபாய்

திருவிதாங்கூர் காசு மதராசு காசு போன்றதே. மதிப்பில் மட்டுமே சற்று வேறுபட்டிருந்தது.

  • 16 காசுகள் = 1 சக்கரம்
  • 4 சக்கரம் = 1 பணம்
  • 7 பணம் = 1 ரூபாய்

எனவே, 1 ரூபாய் = 448 காசுகள்.[3]

சீனக் காசு

சீனாவில் நாணயம் காசு என அறியப்பட்டது. இங்கு செப்புக்காசுகளும் காசு எனப்படுவதால் நாணயத்தை குறிக்கும் காசிற்கும் செப்புவட்டைக்கும் குழப்பம் உண்டாவதுண்டு. சீனத்தில் வென் (文) என்பதற்கு இணையாக காசு என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. தாள் பணத்தை முதன்முதலாகப் பயன்படுத்திய சீனாவில் 1023இல் ஜியோசி என்ற தாள் ஊடக பணம் அறிமுகமானது. பட்டுப் பாதை வழியாக உலகளவில் நியாய வணிகம் நடத்த இதன் தேவை எழுந்தது. 1889இல் ஒருங்கிணைக்கப்பட்ட நாணவியல் கடைபிடிக்கப்பட்டபோது சீன யுவானின் உப பிரிவாக காசு இருந்தது. ஒரு யுவானுக்கு 1000 காசுகளாக இருந்தது. உலோக காசுகள் 1920கள்வரை தேசிய அளவிலும் வட்டார அளவிலும் புழக்கத்தில் இருந்தன.

வியட்நாமில் காசு

காசு (văn) வியட்நாமில் செப்பு நாணயமாக இருந்து வந்தது. 1885இல் பிரான்சிய இந்தோசீன பியாஸ்த்ரே அறிமுகமானபோது காசு அதன் உப பிரிவாக இருந்தது. பொதுவாக இது சபெக்கெ எனப்பட்டது.

மேற்சான்றுகள்

  1. "Cash, n.²". Oxford English Dictionary. Oxford University Press. 2nd ed. 1989.
  2. Robert Montgomery Martin. History of the Colonies of the British Empire. London: W. H. Allen, 1843. p. 342.
  3. Imperial Gazetteer of India, Provincial Series, Madras II: The Southern and West Coast Districts, Native States, and French Possessions. 1908. பக். 419. http://books.google.com/books?id=hI1kfvUKUiAC.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.