கருணைக்கிழங்கு

கருனை, அல்லது பூமி சல்லரைக்கிழங்கு (Amorphophallus paeoniifolius)[4][5] என்பது பூக்கும் தாவரங்களில் சேனைக்கிழங்குகளில் ஒரு வகையாகும். இவ்வகையான தாவரங்கள் பொதுவாக வெப்பக் காடுகளில் உற்பத்தியாகும் காய்கறி வகையாகும். பசுபிக்குத் தீவுகள், தென்கிழக்காசியா, தெற்கு ஆசியா, தென்கிழக்காசியா போன்ற பகுதிகளில் அதிகமாகச் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு பணப்பயிராக உற்பத்தி செய்யப்படுகிறது.

கருனை
Elephant foot yam
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
வரிசை: Alismatales
குடும்பம்: Araceae
பேரினம்: Amorphophallus
இனம்: A. paeoniifolius
இருசொற் பெயரீடு
Amorphophallus paeoniifolius
(Dennst.) Nicolson, 1977[2][3]
கருணைக் கிழங்குகள்

விளக்கம்

இத்தாவரத்தின் பூ வாடை அழுகிய நாற்றம் கொண்டதாக உள்ளன. [6] இதன் உறுளையான தண்டுப்பகுதியில் பூக்கள் கொத்தாக ஒட்டிக்கொண்டிருக்கும். இவற்றின் சூலகம் கொண்ட பெண் பூவும், ஆண் பூவும் ஒன்றாவே ஒட்டிக்கொண்டிருக்கும். இதன் கனிப்பகுதி சிவந்து காணப்படுகின்றன. இந்திய மாநிலங்களான பீகார், மேற்கு வங்காளம், கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம், மற்றும் மகாராசுட்டிரா, ஒரிசா போன்றவற்றில் பயிரிப்படுகிறது.

உபயோகம்

இத்தாவரத்தின் தொடக்கம் தென்கிழக்கு ஆசியாவாகும். இந்தியா, இலங்கை, பிலிபைன்சு, மலேசியா, மற்றும் பல தென்கிழக்கு ஆசியா காடுகளில் வளருகிறது. இந்திய உணவு முறைகளில் இக்கிழங்கிற்கு முக்கிய இடம் உண்டு.

இலக்கியம்

கருனை என்பது கிழங்கு வகைகளில் ஒன்று. கருனை என்பது இதன் சங்ககால வழக்கு.[7] [8] [9]

இதனைக் குழம்பு வைத்து உண்பர். பக்குவமாகச் சமைக்காவிட்டால் உண்ணும்போது நாக்கை அரிக்கும். வயிற்றிலுள்ள செரிமானக் கோளாறுகளை நீக்கும். இது ஒன்பது மாதப் பயிர். சேனைக்கிழங்கு இதன் இனம். கருணைக்கிழங்கு நிலத்துக்குள் மஞ்சள் போல் கொத்துக்கொத்தாக வீழ் (கிழங்கு)விட்டிருக்கும். இதனைக் கிழங்கு விழுந்திருக்கிறது என்பர்.

சங்க இலக்கியங்கள் இதனைக் கருணை எனக் குறிப்பிடுகின்றன.[10][11]

“குண்டுடல் கொடுக்கும் உருளைக் கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக் கிழங்கு” என்ற மூலிகை மணி வாசகப்படி நாம் குண்டுடல் குறைக்கும் கருணைக்கிழங்கின் உயர்வை உணரலாம். உடல் எடை அதிகமாகி, பார்வைக்கு அசிங்கமாகி, மூட்டுவலி, முள்ளந்தண்டு வலி போன்ற பல்வேறு கோளாறுகளால் அவதிப்படும் குண்டுடல் உள்ளோர் தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக் கிழங்கு ஆகும்.

கருணைக் கிழங்கில் இரண்டு வகைகள் உண்டு. அவை.

(1) காரும் கருணை (2) காராக் கருணை என்பவைகளாகும்.

காரும் கருணையைப் பிடிகருணை என்றும்,

காராக் கருணையைச் சேனைக்கிழங்கு என்றும் கூறுவர். இரண்டுமே சாப்பிடுவதற்கு உகந்தது தான்.

முதல் வகை பெயருக்கேற்பக் காரும் தன்மை உடையது. அது காராக் கருணையை விடக் கைக்குள் அடங்கும்படி, நீண்ட உருளை வடிவில் இருக்கும்.

சாதாரணமாகச் சமைத்துச் சாப்பிட்டால், நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். அதனால் இக்கிழங்கை நன்றாக வேக வைத்துப் பின்பு தோலை உரித்து, புளி சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள காரல் நீங்கும்; அரிப்பு இருக்காது.

சிலர் அரிசி கழுவிய நீரில் காரும் கருணையை வேக வைப்பதும் உண்டு. இதனாலும் காரல், நமைச்சல் மட்டுப்படும்.

ஜீரண மண்டல உறுப்புகளில் சிறப்பு வேலை செய்ய வல்லது காரும் கருணை. சீரண சக்தியைத் துரிதப்படுத்தும்; அதோடு அந்த உறுப்புகளுக்கும் பலத்தைக் கொடுக்கும்.

உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் இருந்தாலும் நீங்கும். மலச்சிக்கலையும் போக்கும். நாட்பட்ட காய்ச்சல் இருந்தாலும் குணமாகும்.

பெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் நோய்களில் வெள்ளைப்பாடு என்ற நோய்க்குக் கைகண்ட மருந்தாக உதவுகிறது இந்தக் கிழங்கு. உடல்வலி இருந்தால் கூடப் போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கருணைக் கிழங்கு லேகியம் பிரசித்தி பெற்றது. மூல நோய்க்கு மருந்தாகும் இந்த லேகியம் தயாரிக்க,இந்தக் கிழங்கு தான் பிரதானமாகப் பயன்படுகிறது.

காராக் கருணை பெரிய அளவில் ஒரு ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும். அதன் மேல்பாகம் கரடு முரடாக இருக்கும். இதைச் சேனைக் கிழங்கு என்று சொல்லுவார்கள். இந்தக் கிழங்கில் காரல் இருக்காது. இதில் மாவு மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. அத்துடன் சிலவகை வைட்டமின்களும் உள்ளன.

இதன் மேல் தோலைச் சீவி விட்டு நறுக்கிச் சமைக்கலாம். இதை வைத்து குழம்பு, பொரியல், பருப்பு சேர்த்துக் கூட்டாகச் செய்யலாம். அல்லது எண்ணெயில் வறுத்துச் சிப்ஸாகச் சாப்பிடலாம். இது சாப்பிட ருசியாகவும் இருக்கும்.

காரும் கருணைக்கு இருப்பது போன்ற மருத்துவக் குணங்கள் இதற்கும் உண்டு.

மூல நோயில் கருணை காட்டுவதில் கருணைக் கிழங்கு மிகவும் சிறந்தது. ஆசன வாயில் ஏற்பட்டுள்ள முளைகளைச் சிறிது சிறிதாகக் கரைத்து மூலத்தை வேரோடு களைந்து குணப்படுத்தும். ஒருமாதம் வரை வேறு உணவு ஒன்றையும் சாப்பிடாமல் கருணைக் கிழங்கை மாத்திரம் வேக வைத்து அப்படியே உணவாக ஏற்று நா வறட்சி மாற மோர் மட்டுமே சாப்பிட்டு வர மூலம் பூரணமாகக் குணமாகிவிடும் என்று அனுபவமுள்ளவர்கள் கூறுவதுண்டு. உணவில் பெருமளவில் கருணைக் கிழங்கை புட்டவியலாக வேக வைத்து, எண்ணெயும் உப்பும் மட்டும் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வருவது சற்றுக் கடுமை குறைந்த பத்தியமுறை.

இதன் சுவை காரணமாக, சூடான வீர்யமுள்ளது, அதில் துவர்ப்புச் சுவையுமுள்ளதால் ரத்தக் குழாய்களைச் சுருங்க வைக்கும். கிழங்குகளில் இது சுலபமாக ஜீரணமாவதும் கபத்தையோ வயிற்றில் வாயுக் கட்டையோ செய்யாமலிருப்பதுடன் வாயு கபக் கட்டுகளைப் போக்குவதுமாகும். ருசி, பசி, ஜீரண சக்தி, கீழ் வாயுவைத் தன் வழியே வெளிப்படுத்துவது, குடலில் கிருமி சேராமல் உணவு அழுகாமல் வெளியேற்றுவது, மூல முளையைச் சுருங்க வைத்து வேதனையையும், தடையையும் குறைப்பது, உடலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதைக் குறைப்பது, கல்லீரலுக்குச் சுறுசுறுப்பூட்டுவது இவை எல்லாம் இதன் குணங்கள். “வன சூரணாதி’ என்ற பெயரில் லேகிய மருந்தாக விற்கப்படும் ஆயுர்வேத மருந்தில், கருணைக் கிழங்கு முக்கிய மூலப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது.

அடிக்குறிப்பு

  1. Romand-Monnier, F (2013). "Amorphophallus paeoniifolius". IUCN Red List of Threatened Species (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2013: e.T44393336A44531586. doi:10.2305/IUCN.UK.2013-2.RLTS.T44393336A44531586.en. http://www.iucnredlist.org/details/44393336/0. பார்த்த நாள்: 5 February 2017.
  2. வார்ப்புரு:WCSP
  3. Nicolson, Dan Henry (1977). "Nomina conservanda proposita - Amorphophallus (Proposal to change the typification of 723 Amorphophallus, nom. cons. (Araceae))". Taxon 26: 337–338. doi:10.2307/1220579.
  4. www.nzdl.org/gsdlmod?e=d-00000-00---off-0fnl2%2E2--00-0----0-10-0---0---0direct-10---4-------0-1l--11-en-50---20-about---00-0-1-00-0--4----0-0-11-10-0utfZz-8-10&cl=CL3.44&d=HASHd8d905db1c6eae0daee48f.16&gt=1
  5. Quattrocchi, Umberto (2012). CRC World Dictionary of Medicinal and Poisonous Plants: Common names, scientific names, eponyms, synonyms, and etymology, Volume 1 A–B. Boca Raton, Florida: CRC Press (Taylor & Francis). பக். 253. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4398-9442-2.
  6. கருங் கண் கருணைச் செந்நெல் வெண் சோறு - நற்றிணை 367
  7. பசுங் கண் கருணைச் சூட்டொடு மாந்தி, -புறநானூறு 395
  8. பரல் வறைக் கருணை, காடியின் மிதப்ப - பொருநராற்றுப்படை அடி 115
  9. கருங்கணை கருணைச் செந்நெல் வெண்சோறு - நற்றிணை 367
  10. முரலை போகிய முரியா அரிசி
    விரல் என நிமிர்ந்த நிரலமைப் புழுக்கல்
    பரல்வறைக் கருணை காடியின் மிதப்ப - பொருநராற்றுப்படை 113-115

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.