உலக அமைதி நாள் (கத்தோலிக்க திருச்சபை)

உலக அமைதி நாள் (கத்தோலிக்க திருச்சபை) (World Day of Peace) என்பது ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதம் முதல் நாள் கத்தோலிக்க திருச்சபையால் கொண்டாடப்படுகின்ற சிறப்பு நிகழ்வு ஆகும். உலக மக்கள் அனைவரும் விரும்பி எதிர்பார்க்கின்ற அமைதி உருவாகிட இறைவனை நோக்கி வேண்டுதல் எழுப்பவும், அமைதியின் இன்றியமையாமை பற்றி அனைவரையும் சிந்திக்கத் தூண்டவும் இந்நாள் பயன்படுகிறது. கத்தோலிக்க திருச்சபை கொண்டாடுகின்ற உலக அமைதி நாளைத் திருத்தந்தை ஆறாம் பவுல் 1967ஆம் ஆண்டில் ஏற்படுத்தினார். முதல் உலக அமைதி நாள் 1968, சனவரி முதல் நாள் கொண்டாடப்பட்டது[1].

உலக அமைதியின் தேவையை வலியுறுத்திக் கொண்டாடப்படுகின்ற மற்றொரு நாளும் அனைத்துலக அமைதி நாள் (International Day of Peace) என்னும் பெயரைக் கொண்டுள்ளது. அது ஐக்கிய நாடுகள் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐநாவின் அனைத்துலக அமைதி நாள் முதன்முறையாக 1981ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது[2]

கத்தோலிக்க திருச்சபையின் உலக அமைதி நாள் வரலாறு

முதல் உலகப் போர் நிகழ்ந்த காலத்திலும், இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்திலும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த திருத்தந்தையர்கள் உலக அமைதிக்காக நாடுகளிடையே நல்லுறவை வளர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். குறிப்பாக, பதினைந்தாம் பெனடிக்ட் மற்றும் பன்னிரண்டாம் பயஸ் ஆகியோர் உலக அமைதிக்காக உழைத்தனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் பனிப்போர் காலத்தில் இருபத்திமூன்றாம் யோவான் ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் சோவியத் யூனியனின் தலைவர்களைச் சந்தித்து உலக அமைதிக்காக ஒத்துழைக்குமாறு உருக்கமாக வேண்டிக்கொண்டார். குறிப்பாக, அமைதியின் இன்றியமையாமையை வலியுறுத்தி, "அவனியில் அமைதி" (Peace On Earth; இலத்தீனில் "Pacem in Terris") என்னும் தலைப்பில் ஒரு சுற்றுமடலை எழுதி 1963, ஏப்பிரல் 11ஆம் நாள் வெளியிட்டார். அம்மடல் கிறித்தவர்களுக்கு மட்டுமன்றி, "நல்லுள்ளம் கொண்ட எல்லா மனிதருக்கும்" எழுதப்பட்டதாகத் திருத்தந்தை குறிப்பிட்டார்.

இருபத்திமூன்றாம் யோவானுக்குப் பின் தலைமைப் பொறுப்பேற்ற ஆறாம் பவுல் என்னும் திருத்தந்தை உலகில் நிலையான அமைதி ஏற்படவேண்டும் என்றால் நாடுகளுக்கிடையே நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகள் மறைய வேண்டும் என்றும், அனைத்துலக மக்களின் வளர்ச்சியே அமைதிக்கு வழி என்றும் வலியுறுத்தி "மக்களின் முன்னேற்றம்" (On the Development of Peoples; இலத்தீனில் "Populorum Progression") என்னும் தலைப்பில் 1967, மார்ச்சு 26ஆம் நாள் ஒரு சுற்றுமடல் வெளியிட்டார். இம்மடலும் உலக மக்கள் அனைவருக்கும் எழுதப்பட்டதே.

இவ்வாறு, அமைதியின் தேவையை வலியுறுத்திய கத்தோலிக்க திருச்சபை உலக அமைதியை வளர்ப்பதற்கு "உலக அமைதி நாள்" என்றொரு கொண்டாட்டம் பெரிதும் துணையாக அமையும் என்று கருதியது. எனவே, திருத்தந்தை ஆறாம் பவுல் 1967ஆம் ஆண்டு, திசம்பர் மாதம் 8ஆம் நாள் ஓர் அறிக்கை விடுத்தார். அதில் இனி வருகின்ற ஒவ்வொரு ஆண்டும், சனவரி முதல் நாள் "உலக அமைதி நாள்" (World Day of Peace) என்று உலகம் அனைத்திலும் கத்தோலிக்க திருச்சபையால் கடைப்பிடிக்கப்படும்.என்று அறிவித்தார். அந்த நாளில் உலக மக்கள் அனைவரும் உலக அமைதியை வளர்க்க தங்களையே அர்ப்பணிப்பது சிறப்பு என்றும் கோரிக்கை விடுத்தார். இவ்வாறு, கத்தோலிக்க திருச்சபையின் "உலக அமைதி நாள்" தோன்றலாயிற்று.

உலக அமைதி நாள் செய்தியின் மையப் பொருள்

உலக அமைதியை வளர்ப்பதற்காக மக்களின் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் கத்தோலிக்க திருச்சபை ஒவ்வொரு உலக அமைதி நாளுக்கும் ஒரு மையப் பொருளை அறிவிப்பது வழக்கம். 1968ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வந்துள்ள உலக அமைதி நாளின் மையப் பொருள் பட்டியல் கீழே தரப்படுகிறது:

திருத்தந்தை ஆறாம் பவுல் வழங்கிய உலக அமைதி நாள் செய்திகள்[3]

வரிசை எண்ஆண்டுஉலக அமைதி நாள் செய்தியின் மையப் பொருள்
11968உலக அமைதி நாள்
21969அமைதிக்கு வழி, மனித உரிமைகளை மேம்படுத்தலே
31970அமைதியை உள்ளத்தில் ஏற்று, அனைவரோடும் நல்லுறவு கொண்டிருத்தல்
41971ஒவ்வொரு மனிதனும் என் உடன்பிறப்பே
51972அமைதி வேண்டுமா, நீதிக்காக உழை
61973அமைதி கைகூடும் ஒன்றே!
71974அமைதிக்காக உழைப்பது உன் பொறுப்பும் கூடவே!
81975அனைவரோடும் நல்லுறவை வளர்த்தலே அமைதிக்கு வழி
91976அமைதியின் உண்மையான போர்க்கலன்கள்
101977அமைதி வேண்டுமானால் மனித உயிரைப் பேண வேண்டும்
111978வன்முறை தவிர்ப்போம், அமைதியை வளர்ப்போம்!

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் வழங்கிய உலக அமைதி நாள் செய்திகள்[4]

வரிசை எண்ஆண்டுஉலக அமைதி நாள் செய்தியின் மையப் பொருள்
121979அமைதியை உருவாக்க விரும்பினால் அமைதியைப் புகட்டவேண்டும்
131980அமைதியின் சக்தி உண்மையில் உள்ளது
141981அமைதியை வளர்க்க சுதந்திரத்தை மதிக்க வேண்டும்
151982அமைதி, கடவுள் நம் கைகளில் ஒப்படைக்கும் கொடை
161983அமைதியை வளர்க்கும் உரையாடல், நம் காலத்துச் சவால்
171984அமைதியின் பிறப்பிடம் புதுப்படைப்பான இதயம்
181985அமைதியும் இளமையும் ஒன்றாக முன்னேறிச் செல்லும்
191986அமைதி ஒன்றே ஒன்றுதான்: வடக்கும் தெற்கும், கிழக்கும் மேற்கும் அமைதிக்கு இல்லை
201987முன்னேற்ற வளர்ச்சியும் ஒருங்கிணைந்த செயல்பாடும் அமைதியின் இரு திறவுகோல்கள்
211988மதச் சுதந்திரம் அமைதிக்கு அடித்தளம்
221989அமைதி வேண்டுமா, சிறுபான்மையினரை மதித்து நட!
231990படைத்தவராம் கடவுளோடு அமைதியில் வாழ்ந்து, படைப்புலகோடு அமைதி ஏற்படுத்துவோம்
241991அமைதி வேண்டுமென்றால் ஒவ்வொரு மனிதரின் மனச்சாட்சியை மதிக்க வேண்டும்
251992நம்பிக்கைகொண்டோர் ஒருங்கிணைந்து அமைதியைக் கட்டியெழுப்பிட வேண்டும்
261993அமைதி வேண்டுமென்றால் ஏழைகளுக்கு உதவு!
271994ஒவ்வொரு குடும்பமும் உலகமெனும் குடும்பத்தின் அமைதிக்காக உழைக்க வேண்டும்
281995பெண்கள், அமைதியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள்
291996குழந்தைகளுக்கு அமைதி நிறைந்த எதிர்காலத்தைக் கொடுப்போம்
301997மன்னிப்பைக் கொடு, அமைதியைப் பெறு!
311998ஒவ்வொருவருக்கும் நீதி வழங்கப்பட்டால் அனைவருக்கும் அமைதி பிறக்கும்
321999மனித உரிமைகளை மதிப்பதே உண்மையான அமைதியின் இரகசியம்
332000கடவுளின் கருணையைப் பெற்றவர்களுக்கு இவ்வுலகில் அமைதி!
342001பண்பாடுகளுக்கிடையே உரையாடல் அன்பும் அமைதியும் தோய்ந்த பண்பினை வளர்க்கும்
352002நீதி இன்றி அமைதி இல்லை, மன்னிப்பு இன்றி நீதி இல்லை
362003அவனியில் அமைதி ஏற்பட, நிலையான ஈடுபாடு வேண்டும்
372004அமைதியைக் கற்பித்தல் எந்நாளும் நிகழ வேண்டிய ஒன்று
382005தீமையால் ஆட்கொள்ளப்படாமல், நன்மையால் தீமையை வெல்வோம்!

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வழங்கிய உலக அமைதி நாள் செய்திகள்[5]

வரிசை எண்ஆண்டுஉலக அமைதி நாள் செய்தியின் மையப் பொருள்
392006உண்மையே அமைதிக்கு ஊற்று
402007மனிதரே அமைதியின் மையம்
412008மனித குடும்பம், அமைதி நிலவும் குழுமம்
422009அமைதியைக் கட்டியெழுப்ப வறுமையை ஒழிப்போம்
432010அமைதி வேண்டுமா, படைப்புலகத்தைப் பாதுகாத்துப் பேணிடு!
442011சமயச் சுதந்திரம் அமைதிக்கு வழி

ஆதாரங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.