இலங்கையில் வீதியமைப்பு

இலங்கை ஒரு சிறிய நாடு. இதன் எல்லாப் பகுதிகளும் இன்று வீதிகளினால் இணைக்கப்பட்டுள்ளன. 1800 களுக்கு முன்பு இந்த நிலைமை கிடையாது. நகரங்களை அண்டி வீதிகள் இருந்தவனாயினும், அவற்றுக்கு வெளியேயோ அல்லது நாட்டின் பல பகுதிகளையும் ஒன்றிணைப்பதற்கோ முறையான வீதிகள் இருக்கவில்லை. பிரித்தானியர் 1815 இல் நாட்டை முற்றாகக் கைப்பற்றிய பின்னரே இலங்கையில் வீதியமைப்பு முயற்சிகள் தீவிரமாகின எனலாம்.

கடுகண்ணாவைக்கு அருகில் காணப்படும் குகைவழி

வரலாறு

பிரித்தானியருக்கு முற்பட்ட காலம்

இலங்கையில் அனுராதபுரம் தலைநகரமாக இருந்த காலத்திலேயே நாட்டில் வீதிகள் அல்லது தெருக்கள் இருந்தமை பற்றிய குறிப்புக்கள் இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சத்திலும் ஏனைய நூல்களிலும் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரத்துக்கு பாதையொன்று தொடர்பான குறிப்புகள் இருக்கின்றன. தவிரவும் துறைமுகப் பட்டினமான மாந்தைக்கும் அனுராதபுரத்துக்கும் இடையேயும் பாதைத் தொடர்பு இருந்தது. இவ்வாறே நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பாதை இருந்தன. எனினும் இவைகள், பாதுகாப்பான, நம்பத்தகுந்த, எல்லாக்காலங்களிலும் போக்குவரத்துக்கு உகந்த வீதிகளாக இருந்தனவா என்பது சந்தேகத்துக்கு உரியதே. காலப்போக்கில் இத்தகைய சில பாதைகளும் கூடக் கைவிடப்பட்டு அழிந்து விட்டன. அனுராதபுரம் - யாழ்ப்பாணப் பாதையை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். அனுராதபுரம் நாட்டின் தலைநகர நிலையை இழந்து, தலைநகரம் தெற்கு நோக்கி நகர்ந்த பின்னர், யாழ்ப்பாணத்துக்குத் தென்னிலங்கையுடனான முறையான வீதித் தொடர்பு அழிந்து போய்விட்டது.

போத்துக்கீசர் காலத்திலும் குறிப்பிடத்தக்க அளவில் வீதியமைப்பு வேலைகள் நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஒல்லாந்தர் அவர்கள் வசம் இருந்த நாட்டின் கரையோரப் பகுதியில் கரையோரமாகக் காடுகளை வெட்டிப் பாதையொன்றை அமைத்தனர். இப் பாதையில் ஆறுகளுக்குக் குறுக்கே பாலங்களோ, மதகுகளோ அமைக்கப்பட்டிருக்கவில்லை.

பிரித்தானியர் காலம்

ஒல்லாந்தரிடம் இருந்த இலங்கையின் பகுதிகள் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரித்தானியர் வசம் வந்தன. தீவின் மத்திய பகுதியில் நீடித்திருந்த கண்டி அரசும் 1815 ஆம் ஆண்டில் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது. பிரித்தானியர், திருகோணமலையைத் தங்கள் முக்கிய தளமாக வைத்திருந்தனர். இதனால் கொழும்பையும், திருகோணமலையையும் இணைக்கும் பெருந்தெருவொன்றை அமைக்கத் திட்டம் இருந்தது. கண்டிப்பகுதியில் ஏற்பட்ட கலவரங்கள் இதன் வேலைகள் தொடங்குவதற்குத் தடையாக இருந்தன. 1815 ஆம் ஆண்டுக்குப் பின்னர் திருகோணமலை முக்கியத்துவம் குறையத் தொடங்கவே இத் திட்டம் கைவிடப்பட்டது.

ஆரம்பத்தில் கண்டிப்பகுதிகளில் பிரித்தானியருக்கு எதிரான கலவரங்கள் பல நிகழ்ந்தன. இவற்றை அடக்கிக் கைப்பற்றப்பட்ட பகுதிகளைத் தக்கவைத்துக்கொள்வதற்காக ஆங்காங்கே கோட்டைகளை அமைத்துப் படைகளையும் நிறுத்தியிருந்தனர். ஆனால் இவ்வாறான கோட்டைகளையும் படைகளையும் பேணுவதில் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக இத்தகைய கோட்டைகளைக் கைவிட்டுவிட்டு, விரைவான படை நகர்வுகளுக்கு வசதியாக வீதிகளை அமைப்பதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டது. 1820 ஆம் ஆண்டில் கொழும்புக்கும் கண்டிக்கும் இடையே முதலாவது வீதியமைப்பு தொடங்கப்பட்டது. இது அடுத்த ஆண்டிலேயே பயன்பாட்டுக்கு விடப்பட்டதாயினும் 1832 ஆம் ஆண்டிலேயே முழுமையாக நிறைவு செய்யப்பட்டது.

இதே சமயம் 1821 ஆம் ஆண்டில் கண்டியும் குருநாகலும், கலகெதரை பள்ளத்தாக்கு வழியாக இணைக்கப்பட்டன. 1825 ஆம் ஆண்டில், கொழும்பு - கண்டி பெருந்தெருவில் உள்ள அம்பேபுசை என்னுமிடத்திலிருந்து குருநாகலுக்கு இன்னொரு வீதி அமைக்கப்பட்டது. 1827 ல் இந்த வீதி மேலும் வடக்கு நோக்கித் தம்புள்ளை வரை நீட்டப்பட்டது. 1831 ல் கண்டியில் இருந்து வடக்கிலுள்ள மாத்தளைக்கு அமைக்கப்பட்ட இன்னொரு பெருந்தெருவும், 1832 ஆம் ஆண்டில் தம்புள்ளை வரை நீளமாக்கப்பட்டது. இப்பெருந்தெருக்களின் வலைப்பின்னல், நாட்டின் மத்திய பகுதியைக் கொழும்புடன் திறமையாக இணைத்து அரசாங்கத்துக்கு அப்பகுதிகள் மீதிருந்த கட்டுப்பாட்டை அதிகரித்தது. எனினும் இவ் பெருந்தெருக்களில் ஒரு சிலவற்றைத் தவிர ஏனையவற்றில் முறையான பாலங்கள், மதகுகள் முதலியன அமைக்கப்படவில்லை.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணைகள்

  • மெண்டிஸ் ஜி. சி., பிரித்தானியரின் கீழ் இலங்கை (Ceylon under British)', கொழும்பு, 1952, மறுபதிப்பு: ஏசியன் எஜுகேஷனல் சேர்விசஸ், புது டில்லி, 2005. (ஆங்கில மொழியில்)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.