அரவிந்த் கண் மருத்துவமனை
அரவிந்த் கண் மருத்துவமனை (Aravind Eye Hospitals) அரசு மருத்துவராக இருந்து ஓய்வு பெற்ற ஜி. வெங்கடசாமி என்பவரால் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் சுமார் 11 படுக்கை வசதிகளுடன் 1976ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அரவிந்த் கண் மருத்துவமனை நன்கு வளர்ச்சியடைந்து தேனி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், புதுச்சேரி போன்ற ஊர்களிலும் கிளைகளை அமைத்துக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.[1][2][3] இந்த மருத்துவமனை பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல ஊர்களில் இலவசக் கண் சிகிச்சைக்கான கண் புரை நோய் மருத்துவ முகாமை நடத்தி கண்பார்வைக் குறைபாடு உடையவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருகிறது. மேலும் இந்த மருத்துவமனை 2012ம் வருட கணக்கின்படி, 32 மில்லியன் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளது. சுமார் 4 மில்லியன் பேருக்கு கண் அறுவை சிகிச்சை அளித்து நலம் பெறச் செய்துள்ளது. அரவிந்த் கண் பராமரிப்பு மருத்துவமனைகளின் கண் அறுவை சிகிச்சை முறை பாராட்டப்பட்டது மற்றும் உலகம் முழுவதும் ஏராளமான வழக்கு ஆய்வுகளுக்கு ஒரு மாதிரியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.[4][5][6]
கண்புரை நோய்
கண்புரை இந்தியாவில் குருட்டுத்தன்மைக்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது, ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 4 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இது உலகின் பார்வையற்றவர்களில் கால் பங்கிற்கு சமமாகிறது. சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சையின் மூலம் கண்புரை தொடர்பான குருட்டுத்தன்மையைத் தவிர்க்கலாம்.[7]
அரவிந்த் கண் மருத்துவமனையின் வழிமுறை
இந்தியாவில் தேவையற்ற குருட்டுத்தன்மையை ஒழிப்பதே டாக்டர் வெங்கடசாமியின் தொலைநோக்குப் பார்வையாக இருந்தது. மருத்துவர் வெங்கடசாமி,மெக்டொனால்ட்சு துரித உணவின் சேவை செயல்திறனைப் பின்பற்ற விரும்பினார், மேலும் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை சமாளிக்க கண் பராமரிப்பு முறைக்கு ஏற்ப அதை மாற்ற முயன்றார். பெரிய அளவில் கண் அறுவை சிகிச்சைகள் செய்யத் தொடங்கினார், ஏழைகளுக்கு முற்றிலும் சிகிச்சை இலவசம் அல்லது பணம் செலுத்தும் நோயாளிகளுக்கு ஒரு பகுதித் தொகை மானியமாக வழங்கப்படும் முறையை ஏற்படுத்தினார்.[8] மேலும் தொலைதூர கிராமங்களுக்கு, பல தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவர்கள் மூலமாக கண் மருத்துவ முகாம்களை நடத்தினார்.[9]தொண்டு நிறுவனங்கள் முகாம்கள் நடத்துவதற்கும், நோயாளிகளின் பயணச் செலவையும் கவனித்துக் கொள்வதால் அரவிந்த் மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் மூலமாக பலர் பயனடைந்தனர்.
அரவிந்த் மருத்துவமனையில் இலவச மற்றும் கட்டண வார்டுகளுக்கு இடையில் மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணி செய்வதின் மூலமாக அவர்களின் செயல்திறன் மற்றும் சுகாதாரம் மேம்பாடு அடைகிறது. இதனால் ஊதியம் மற்றும் ஊதியம் பெறாத நோயாளிகளுக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு இடையிலான வேறுபாடுகளை இந்த சுழற்சி முறையிலான பணி அமைப்பு நீக்குகிறது. அரவிந்த் மருத்துவமனையில் நோய்த்தொற்றின் வீதம் ஆயிரம் அறுவை சிகிச்சைக்கு நான்கு ஆகும், இது சர்வதேச விதிமுறையான ஆயிரத்திற்கு ஆறு அறுவை சிகிச்சைகளை விட கணிசமாகக் குறைவாக இருக்கிறது. [10]
மருத்துவமனைகள் மற்றும் வசதிகள்
அரவிந்த் மருத்துவமனை முதலில் மதுரையிலும் அதைத் தொடர்ந்து 1985 இல் தேனி மாவட்டத்திலும், 1988இல் திருநெல்வேலி மாவட்டத்திலும் தொடங்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 1997 இல் நிறுவப்பட்டது. பின்னர் இம் மருத்துவமனை தமிழ்நாட்டின் திருப்பூர், சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, உடுமலைப்பேட்டை மற்றும் புதுச்சேரியில் நிறுவப்பட்டது. மருத்துவர் வெங்கடசாமியின் நூற்றாண்டு நினைவாக 2017 செப்டம்பர் மாதத்தில் சென்னையில் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவப்பட்டது.[11] 2019 இல், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உதவியுடன் திருப்பதி யில் இதன் கிளை மார்ச்சு மாதத்தில் தொடங்கப்பட்டது.[12]
அரவிந்த் கண் வங்கி
பன்னாட்டு சுழற் சங்கம் உதவியுடன், நான்கு கண் வங்கி - ரோட்டரி அரவிந்த் பன்னாட்டு கண் வங்கிகளை மதுரை யில் நிறுவியுள்ளது. மேலும், 1998இல், அரவிந்த் - ஐஒபி கண் வங்கியினை கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் 2005இல் கண் வங்கி நிறுவப்பட்டது. [13]
வெளி இணைப்புகள்
- அரவிந்த் கண் மருத்துவமனையின் இணையதளம்
- அரவிந்த் கண் மருத்துவக் குழுமமும், அரசு நிர்வாகமும்
- DEVELOPMENT REPORT - India's Aravind Eye Care System Gets Hilton Prize
- Aravind Eye Care System
- Google expertise for Aravind Hospital
- In Service for Sight
- PBS News Hour, Fred de Sam Lazaro visits the Aravind Eye Care System
- நூற்றாண்டு காணும் ‘ஒளி’ விளக்கு!
- "About Aravind Eye Hospitals". http://www.aravind.org/.
- "An Infinite Vision: The Story of Aravind Eye Hospital". http://www.huffingtonpost.com/jayaseelan-naidoo/an-infinite-vision-the-st_b_1511540.html/.
- "A Hospital Network With a Vision". http://opinionator.blogs.nytimes.com/2013/01/16/in-india-leading-a-hospital-franchise-with-vision/.
- "Aravind Eye Hospital, Madurai, India: In Service for Sight". https://hbr.org/product/aravind-eye-hospital-madurai-india-in-service-for-sight/593098-PDF-ENG.
- Aravind Eye Care System:Giving them the most precious gift Archived June 10, 2014, at the வந்தவழி இயந்திரம்.
- Aravind Eye Care System, North western University
- "Aravind Eye Care's Vision for India". https://www.forbes.com/global/2010/0315/companies-india-madurai-blindness-nam-familys-vision.html.
- "McDonald's and Dr. V.". https://www.forbes.com/global/2010/0315/companies-india-madurai-blindness-mcdonalds-and-dr-v.html.
- "Aravind Eye Hospital, Madurai, India: Harvard case study". http://218.248.31.202/Nithyatha/files/Aravind_Harvard_Study_2003.pdf.
- "Aravind eye care system". http://healthmarketinnovations.org/program/aravind-eye-care-system-aecs.
- "Aravind Eye Hospital-Chennai". பார்த்த நாள் 25 September 2019.
- "Sri Venkateswara Aravind Eye Hospital, Tirupati". பார்த்த நாள் 25 September 2019.
- "Aravind, eyebanks". http://www.aravind.org/default/eyedonationcontent/aboutEyebanks.