வில்வித்தை
வில்லின் நாணில் அம்பை ஏற்றி எய்வதே அம்பெய்தல் என்னும் வில்வித்தை (archery) ஆகும். தொடக்க காலத்தில் அம்பை எய்து விலங்குகளை மக்கள் வேட்டையாடினர். போரிலும் வில்லம்பு முக்கிய கருவியாக விளங்கியது. வில்லைத் தனுசு என்னும் வடசொல்லால் வழங்குவர். தற்காலத்தில் அம்பெய்தல் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒன்றாக விளங்கிவருகிறது.

பன்னாட்டு வில்வித்தைப் போட்டி
உலக வில்வித்தை இணையம் [1] சுவிட்சர்லாந்து நாட்டு லவ்சேனி நகரைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. அதில் 140 உறுப்பு-நாடுகள் உள்ளன. பன்னாட்டு ஒலிம்பிக் குழு இதற்கு ஒப்புதல் அளித்துத் தன் குழுவில் இணைத்துக்கொண்டுள்ளது.
ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டி
ஒலிம்பிக் விளையாட்டில் 1900 ஆம் ஆண்டு முதல் வில்வித்தை விளையாட்டு இடம் பெற்று வருகிறது. கொரிய ஆண், பெண் போட்டியாளர்கள் இதில் முன்னணியில் திகழ்கின்றனர். 2012 லண்டன் ஒலிம்பிக்கிலும் இந்த முன்னிலை தொடர்ந்தது.[2]
சங்ககால வில்
சங்க காலத்தில் வில்வித்தை பெரும் போர் கலையாக கருதப்பட்டது,
பல வகையான அம்பெய்தல் முறையும் பின்பற்றப்பட்டதாக தெரிகிறது.

சங்ககாலம் முதல் வேட்டையாடும் கருவியாகவும், போர்க்கருவியாகவும் பயன்பட்டது.
சிறுவர் வில்
வேட்டுவரின் சிறுவர்கள் வலார் என்னும் சிம்புகளை வளைத்து வில் செய்துகொண்டனர். ஊகம் என்னும் நாணாத்தட்டையால் அம்பு செய்துகொண்டனர். கூர்மைக்காக அந்த அம்பின் நுனியில் சப்பாத்தி முள்ளைச் செருகிக்கொண்டனர். இந்த வில்லைக்கொண்டு வேட்டையாட அவர்கள் வேலிப்பருத்தி படர்ந்திருக்கும் வேலிக்குள் மேயும் கருப்பை என்னும் காட்டெலிக்குக் குறி வைத்துத் தேடிக்கொண்டிருந்தனர்.[3]
வல்வில் வேட்டம்
வல்வில் வேட்டம் என்பது வில்லாண்மையைக் காட்டும் தொடர். சங்கப்பாடல்களில் வல்வில் தொடரால் பல்வேறு அரசர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
அரசர்கள் | பாடல் | குறிப்பு |
---|---|---|
ஓரி | புறநானூறு 158, 152 | கொல்லி ஆண்ட வல்வில் ஓரி, ஓரி யானையை வீழ்த்த அம்பு எய்தான். அது யானையின் உடலைத் துளைத்துக்கொண்டு பாய்ந்தது. அடுத்தடுத்து வேங்கைப்புஙி, ஆண்மான், காட்டுப்பன்றி அகியவற்றின் உடலிலும் ஊடுருவிச் சென்று, புற்றில் இருந்த உடும்பின்மேல் பாய்ந்து கிடந்தது.[4] ஒப்புநோக்குக - கவண் வீச்சு வலிமை [5] |
மத்தி | அகநானூறு 226 | வல் வில் எறுழ்த் தோள், பரதவர் கோமான், பல் வேல் மத்தி, கழாஅர் முன்துறை |
புன்றுறை | அகநானூறு 44 | பொன் அணி வல்வில் புன்றுறை |
நள்ளியின் போர்வீரர்கள் | அகநானூறு 152 | வல் வில் இளையர் பெருமகன்; நள்ளி |
ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் படைவீரர்கள் | பதிற்றுப்பத்து 58 | எயில் எறி வல் வில், ஏ விளங்கு தடக் கை, ஏந்து எழில் ஆகத்துச் சான்றோர் மெய்ம்மறை |
ஆனிரை மீட்ட வீரன் | புறநானூறு 261 | ஆனிரை மீட்கும் போரில் மாண்டு நடுகல் ஆனவன் [6] |
போர்வீரர்கள் | குறுந்தொகை 275 | வல்வில் இளையர் |
குறிஞ்சி பாலையான நிலமக்கள் | குறுந்தொகை 335 | வார்கோல் வல்விற் கானவர் தங்கை |
அடிக்குறிப்பு
- World Archery Federation
- 2012 ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டி முடிவு
-
வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்
புள்ளூன் தின்ற புலவுநாறு கயவாய்,
வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
சிறியிலை உடையின் சுரையுடை வால்முள்
ஊக நுண்கோற் செறித்த அம்பின்,
வலாஅர் வல்வில் குலாவரக் கோலிப்,
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் (புறநானூறு 324) -
`வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்,
புழல்தலை புகர்க்கலை உருட்டி, உரல்தலைக்
கேழற் பன்றி வீழ, அயலது
ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும், 5 வல்வில் வேட்டம் (புறநானூறு 152) -
வன் கைக் கானவன்
கடு விசைக் கவணின் எறிந்த சிறு கல்
உடு உறு கணையின் போகி, சாரல்
வேங்கை விரி இணர் சிதறி, தேன் சிதையூஉ,
பலவின் பழத்துள் தங்கும்
மலை கெழு நாடன் (அகநானூறு 292) -
பல்ஆ தழீஇய கல்லா வல்வில்
உழைக்குரற் கூகை அழைப்ப ஆட்டி,
நாகுமுலை அன்ன நறும்பூங் கரந்தை
விரகுஅறி யாளர் மரபிற் சூட்ட,
நிரைஇவண் தந்து, நடுகல் ஆகிய
வென்வேல் விடலை (புறநானூறு 261)