நெடும்பல்லியத்தை

நெடும்பல்லியத்தை சங்ககாலப் பெண்பால் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் 2 சங்கப்பாடல் தொகுப்பில் உள்ளன. அவை இரண்டும் அகத்திணையில் மருதத்திணைப் பொருள் மேலவை. அவை குறுந்தொகை 178, 203 ஆகியவை.[1]

பாடல் சொல்லும் செய்திகள்

குறுந்தொகை 178

தலைவனும் தலைவியும் களவு ஒழுக்கத்தில் கூடித் திளைத்தவர்கள். அன்று அவர்களுக்குத் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அன்றும் அவன் அவளைப் பருகத் துடிக்கிறான். இது எப்படி இருக்கிறது?

ஆம்பல் பறிப்போருக்கு நீர் வேட்கை

குளத்தில் நீந்தி ஆம்பல் பூக்களைப் பறிப்பர். நீரில் நீந்துவோருக்கு நீர் வேட்கை. தண்ணீர் தாகம். ஆம்பல் பூவின் காம்பு உள்துளை கொண்டது. பூப் பறிப்போருக்குத் தண்ணீர்த் தாகம் வந்துவிட்டால், ஆம்பல் பூவின் காம்பை ஒடித்துக் கலங்கல் இல்லாத நீரில் அந்தக் காம்பின் ஒரு முனையை வைத்து மறுமுனையைத் தன் வாயில் வைத்து நீரைப் பருகுவர். இப்படி எப்போது வேண்டுமானாலும் பருகிக்கொள்ளும் நிலை ஆம்பல் பூப் பறிப்போருக்கு உண்டு. இருந்தும் நீர் பருகத் துடிக்கிறார் என்றால் அது விந்தைதானே!

திருமணம் ஆன பின்னும் தலைவன் தலைவியின் இன்பம் பருகத் துடிக்கிறான் என்றால் அது விந்தைதானே!

குறுந்தொகை 203

தலைவியின் கண் முன்னர்தான் தலைவன் வாழ்கிறான். இருந்தும் அவன் அவளிடம் வரவில்லை. (அவன் உலர் தூற்றலுக்கு நாணுபவன் போலும்)

கடவுள் கண்ணிய பாலோர்

கடவுளை நினைத்துக்கொண்டு உலகியலைப் பிரிந்து வாழ்பவர் (முனிவர்) மனைவி அருகில் இருந்தும் அவளை அனுபவிக்காமல் வாழ்வர். அதுபோலத் தலைவன் வாழ்கிறான்.

தலைவன் வாழும் ஊருக்கும், தலைவி வாழும் ஊருக்கும் இடையில் மலையோ, காடோ இல்லை. இருந்தும் பிரிந்து வாழ்கிறாரே! - தலைவி ஏக்கம்.

மேற்கோள்கள்

  1. நெடும்பல்லியத்தன் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.