ஸ்ரீநிவாஸ் (பாடகர்)

ஸ்ரீநிவாஸ் (பிறப்பு:நவம்பர் 7, 1959) தமிழ்,கன்னடம்,மலையாளம்,தெலுங்கு மொழிகளில் பாடும் ஓர் தென்னிந்திய திரைப்படப்பாடகர். முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா,தேவா,ஏ. ஆர். ரகுமான்,வித்யாசாகர் போன்றவர்களின் இசையில் தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் திரைப்பாடல்கள் பாடியுள்ளார்.வேதியியல் பொறியாளராக பத்தாண்டுகள் பணியாற்றிய பிறகு இசைத்துறையில் ஈடுபாடு காரணமாக உட்புகுந்து சாதனை படைத்தவர்.

ஸ்ரீநிவாஸ்
ஸ்ரீநிவாஸ் (இடது) ஏ ஆர் ரகுமானுடன்
பின்னணித் தகவல்கள்
பிறப்புநவம்பர் 7, 1959 (1959-11-07)
அம்பாசமுத்திரம், தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்வாய்ப்பாட்டு
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1996-நடப்பு

வாழ்க்கை வரலாறு

ஸ்ரீநிவாஸ் தமிழ்நாட்டின் அம்பாசமுத்திரத்தில் துரைசாமி அய்யங்கார் மற்றும் இலட்சுமிக்கு பிறந்தவர். பின்னர் கேரளாவின் திருவனந்தபுரத்தில் வளர்ந்தார். அங்கு தமது அத்தை பத்மா நாராயணன் உந்துதலில் இசையில் நாட்டமும் பயிற்சியும் பெற்றார்.

வேதியியல் பொறியியல் பட்டப்படிப்பினை மும்பை பல்கலைக்கழகத்தின் கீழுள்ள வேதியியல் தொழில்நுட்பத் துறை (UDCT)யில் முடித்தார்.பத்தாண்டுகள் பொறியாளராகப் பணிபுரிந்தபிறகு தமது இசையார்வம் காரணமாக பணிவாழ்வில் மாற்றத்தை விரும்பினார். 1988ஆம் ஆண்டு இளையராஜாவிடம் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தும் அன்றைய நாள் அவரது தொண்டைப்புண் காரணமாக நிறைவேறவில்லை.

மீண்டும் 1992ஆம் ஆண்டு ரகுமானிடம் அறிமுகம் கிடைக்க சில விளம்பரப் பாடல்களுக்குக் குரல் கொடுத்து வந்தார்.1994ஆம் ஆண்டு முதல் சென்னையில் வசிக்கத் துவங்கினார்.அவரது முதல் பாடலாக மகேஷ் இசையமைப்பில் நம்மவர் படத்திற்காக "சொர்க்கம் என்பது நமக்கு" என்ற பாடல் அமைந்தது. அது வெற்றி பெற்றபோதும் அவருக்கு ஓர் திருப்புமுனையாக 1996ஆம் ஆண்டு ரகுமானின் இசையில் மின்சாரக் கனவு படத்தின் "மானா மதுரை" பாடல் அமைந்தது.

விருதுகள்

  • தமிழ்நாடு அரசின் மாநில விருதினை சிறந்த பின்னணிப்பாடகர் என்ற வகையில் இருமுறை பெற்றுள்ளார்:படையப்பாவின் "மின்சாரப்பூவே" மற்றும் ஒன்பது ரூபா நோட்டு படத்தில் "மார்கழியில்".
  • தமிழக அரசின் கலைமாமணி பட்டத்தினையும் பெற்றுள்ளார்.
  • கேரள அரசின் மாநில விருதை "ராத்திரிமழா" என்ற படத்திற்கு பெற்றுள்ளார்.
  • பிற திரை இதழ்களின்(சினிமா எக்ஸ்பிரஸ்,பிலிம்பேர்) விருதுகளையும் பெற்றுள்ளார்.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.