ஸ்டேட் பாங்க் ஆப் சௌராஷ்டிரா

சௌராஷ்டிரா ஸ்டேட் வங்கி (State Bank of Saurashtra), [1] இந்திய அரசால் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்று. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏழு இணை வங்கிகளில் ஒன்றான இவ்வங்கி, இந்தியாவில் 15 மாநிலங்கள் மற்றும் தாமன் மற்றும் தியு போன்ற பகுதிகளிலும் சேர்த்து 423 கிளைகள் கொண்டது. 13 ஆகஸ்டு 2008இல் இவ்வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

தோற்றம்

1948ஆம் ஆண்டிற்கு முன், சௌராட்டிர தீபகற்ப பகுதியில் பல சிறிய, நடுத்தர மற்றும் பெரிய சுதேச சமஸ்தான மன்னர்கள் (Princely States) இருந்தன. அவைகளில் பவநகர், ராஜ்கோட் மற்றும் போர்பந்தர் பெரிய மன்னராட்சி நாடுகளும், பாலிதானா மற்றும் வாடியா சிறிய மன்னராட்சி நாடுகளும் தங்களுக்கென தனி வங்கிகள் கொண்டிருந்தது. அவைகளில் பெரிய வங்கி பவநகர் வங்கி 1902ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது.

பம்பாய் மாகாணத்திலிருந்த சௌராஷ்டிரப் பகுதியைப் பிரித்து, 1948ஆம் ஆண்டில் தனி மாநிலமாக சௌராஷ்டிர மாகாணம் (Saurashtra State) துவக்கப்பட்டப் பின், சௌராஷ்டிர ஸ்டேட் பாங்க் (ஒருங்கிணைப்பு) அவசரச் சட்டம், 1950இன் படி, சௌராஷ்டிரப் பகுதியில் இருந்த ராஜ்கோட் வங்கி, போர்பந்தர் வங்கி, பாலிதானா வங்கி, வாடியா வங்கிகள், பவநகர் வங்கியுடன் இணக்கப்பட்டு, 1 சூலை 1950இல் ஸ்டேட் பாங்க் ஆப் சௌராஷ்டிரா உருவானது. சௌராஷ்டிர ஸ்டேட் வங்கி துவக்கத்தில் ஏழு கோடி ரூபாய் வைப்பு நிதியுடன் ஒன்பது கிளைகள் மட்டும் இருந்தன. 1960ஆம் ஆண்டில், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கும் போது குஜராத் மாநிலம் உதயமான பொழுது, சௌராஷ்டிர மாகாணம், குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதியானது.

இணைப்பு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (துணை வங்கிகள்) சட்டம், 1959இன் படி, ஸ்டேட் பாங்க் ஆப் சௌராஷ்டிரா, பாரத் ஸ்டேட் வங்கியின் துணை வங்கியாக மாறியது. தொடர்ந்து 13 ஆகஸ்டு 2008இல் இவ்வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.