ஷெல்டன் ரணராஜா
ஷெல்டன் ரணராஜா (Shelton Ranaraja, நவம்பர் 4, 1926 - ஆகத்து 11, 2011) இலங்கையின் அரசியல்வாதி. கண்டி மாவட்டம், செங்கடகல தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதி நீதியமைச்சராகவும் இருந்தவர். அவரது மரணம்வரை ஷெல்ரன் ரணராஜா தமிழ் மக்களிடையே மிகவும் விருப்புக்குரியவராக இருந்தார்.
ஷெல்டன் ரணராஜா | |
---|---|
செங்கடகல தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1960–1965 | |
செங்கடகல தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1977–1988 | |
பெரும்பான்மை | 5,611 |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | நவம்பர் 4, 1926 கண்டி |
இறப்பு | ஆகத்து 11, 2011 84) கண்டி | (அகவை
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | சந்திரா ரணராஜா |
படித்த கல்வி நிறுவனங்கள் | இலங்கை சட்டக் கல்லூரி |
பணி | அரசியல்வாதி |
தொழில் | வழக்கறிஞர் |
சமயம் | பௌத்தம் |
வாழ்க்கைக் குறிப்பு
ஷெல்டன் ரணராஜா கல்கிசை சென். தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர். இவர் கல்லூரியின் பிரபல விளையாட்டு வீரராகவும் கிரிக்கெட், குத்துச்சண்டை, நீச்சல் ஆகியவற்றில் பரிசில்கள் பெற்றவராகவும் விளங்கினார். இவர் கொழும்பு சட்டக் கல்லூரியில் படித்த போது, கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கு தலைவராக இருந்துள்ளனர். இவர் பல ஆண்டுகளாக கண்டி வழக்குரைஞர்கள் துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்துள்ளார். மத்திய மாகாண துடுப்பாட்டச் சங்கத்தின் தலைவர், கண்டி மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் தலைவர் ஆகிய பதவிகளை பல ஆண்டுகளாக இவர் வகித்துள்ளார்.
அரசியலில்
சட்டக் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்ட பின் ஷெல்ரன் ரணராஜா கண்டியில் வெற்றிகரமான வழக்குரைஞராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். 1960 இல் புதிதாக அமைந்த செங்கடகல தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் இவர் அரசியலில் நுழைந்தர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட இவர், 25 மேலதிக வாக்குகள் மூலமே நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். வாக்குகளை மீள எண்ணக்கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது தடவையாக வாக்குகள் எண்ணப்பட்டபோது 30 மேலதிக வாக்குகளால் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்[1].
தாராளவாத சனநாயகவாதியான இவர், 1964 இல் லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தை தேசிய மயமாக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - லங்கா சமசமாஜக் கட்சி கூட்டரசாங்கத்தின் முயற்சியை விரும்பவில்லை. லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தை அரசாங்கம் பொறுப்பேற்பது தொடர்பான பிரேரணையை எதிர்த்து வாக்களித்த சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தை சேர்ந்த 14 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இந்த பிரேரணை ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 1965 இல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைதல்
இதன்பின் சிறிது காலம் இவர் தீவிர அரசியலிலிருந்து விலகி சட்டத் தொழிலில் முழுதாக ஈடுப்பட்டார். டட்லி சேனாநாயக்காவின் மரணத்தை தொடர்ந்து 1973 இல் ஜே. ஆர். ஜெயவர்த்தனா ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றபின் ஐ.தே.க.வில் சேர்ந்து அரசியலில் ஈடுபடும்படி ஷெல்டனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட இவர், செங்கடகல தொகுதியின் கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 1977 பொதுத் தேர்தலில் இவர் பண்டாரநாயக்க குடும்பத்தினரின் நெருங்கிய உறவினரான செல்வாக்குமிக்க அநுரத்த ரத்வத்தையை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ரணராஜா 17,972 வாக்குகளைப் பெற அனுருத்த ரத்வத்தை 12,381 வாக்குகளைப் பெற்றார்[1].
ஷெல்டன் முதலில் கே. டபிள்யூ. தேவநாயகத்தின் கீழ் பிரதி நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் நிசங்க விஜேரத்தினவின் கீழ் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ரணராஜா, 1988 இன் பின் தீவிர அரசியலிலிருந்து விலகினார். இவருக்கு ஐந்து பெண் பிள்ளைகள். இவருடைய மனைவி சந்திரா கண்டியின் முதல் பெண் முதல்வராக இருந்தார். ரணராஜா தனது இறுதிக்கட்டத்தில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு 2011 ஆகத்து 11 இல் காலமானார்[1].
மேற்கோள்கள்
- ஷெல்ரன் ரணராஜா: உயரிய கொள்கை வழிநின்ற துணிகர அரசியல்வாதி, டி. பி. எஸ். ஜெயராஜ், தமிழ்மிரர், ஆகத்து 18, 2011